திருவண்ணாமலையில் ஆச்சரியம்.. சுகுமார் வீட்டில் "பால்" கொட்டுதாமே.. அந்த 9 லிட்டர் எங்கே?.. ஆச்சரியம்
திருவண்ணாமலை: வேலூர் மாவட்டம் திருவண்ணாமலை அருகில் ஒரு ஆச்சரிய சம்பவம் நடந்து வருகிறது.. சோஷியல் மீடியாவில் கடந்த 2 நாட்களாகவே இந்த வீடியோதான் வைரலாகி கொண்டிருக்கிறது.. என்ன நடந்தது?
சில சமயங்களில் பசுக்கள் நம்மை திகைக்க செய்து விடுகின்றன.. நம்ப முடியாத அளவுக்கு ஒருசில செய்திகள் பசுக்கள் குறித்து வெளிவருவதை காண முடிகிறது. 2 மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது..
வடமதுரை அருகே உள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள்.. 50 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் மயில்.. 46 வயதாகிறது.. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள்..

பெருமாள் வீட்டு பசுமாடு: பெருமாள் விவசாயம் பார்த்து வருவதோடு, கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்.. இவர் சிறுவயது முதல் ஒரு கன்றுகுட்டியை வாங்கி வளர்த்து வருகிறார்.. அந்த கன்றுக்குட்டி இப்போது வளர்ந்து, தெய்வீக தன்மையுடன் காணப்படுவதாக சொல்கிறார்... இந்த பசுமாடு, எந்நேரமும் பால் தருகிறதாம்.. இத்தனைக்கும் பல மாதங்களாக எவ்வித கன்றும் ஈன்றாமல், சினை ஊசி போடாமலும், 24 மணிநேரமும் அந்த பசு பால் தந்தவண்ணம் இருப்பதாக தெரிகிறது.
எந்நேரமும் பால்: எந்தநேரம் கறந்தாலும் பால் வருவதால், அந்த பகுதி மக்களும் இந்த பசுவை ஆச்சரியத்துடன் பார்த்து, வணங்கியும் வருகிறார்கள்.. அதுமட்டுமல்ல, தங்கள் குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால், உடனே இந்த பசுமாட்டிடம் ஓடிச்செல்கிறார்கள்.. இதுகுறித்து பெருமாள் சொல்லும்போது, கூலிவேலை பார்த்து வந்த தான் பலவித பிரச்சினைகளில் சிக்கி கஷ்டப்பட்டு வந்தேன்... இந்த பசு வந்தபிறகு எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துள்ளது. இப்போது நான் ஒரு முதலாளி ஆனதுபோல் நம்பிக்கையோடு இருக்கிறேன்.. எங்களை பார்த்து இந்த பசுவை பார்ப்பதற்காக தினந்தோறும் பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் வந்து போகிறார்கள்.. அதன்மூலம் அவர்கள் நன்மை அடைந்து வருகின்றனர்.. இது எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார் பூரிப்புடன்.
இப்போதும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. மங்கலம் என்ற கிராமத்தில் வசித்து வரும் விவசாயி சுகுமார்.. இவர் ஒரு பசுமாடு வளர்த்து வருகிறார். இந்த பசு மாடு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கன்று ஒன்றை ஈன்றது.. அதனைத் தொடர்ந்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வரை பசுமாட்டில் இருந்து, தினமும் 9 லிட்டர் பால் வரை, சுகுமார் கறந்துள்ளார்.. அதன் பிறகு, அரை லிட்டர் பால் கூட கறக்க முடியவில்லை என்று சொல்லும் சுகுமார், ஒருவேளை, கன்று குட்டி அந்த பாலை குடித்திருக்கலாம் என்று நினைத்துள்ளார்.

பசுமாடு பால்: பிறகு திடீரென ஒருநாள், பசுமாடானது தன்னுடைய காம்பிலிருந்து, தன்னுடைய பாலை, தானே குடித்ததை நேரில் கண்டு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளார்... கன்றுக்குட்டி அந்த பசுமாட்டிடம் பால்குடிக்க முயற்சி செய்தாலும், பசுமாடு அந்த குட்டியைகிட்ட விடவில்லையாம்.. பாலையும் குடிக்க விடவில்லையாம்.. தன்னுடைய மொத்த பாலையும், பசுமாடே குடித்துவிடுவதை கண்டு திகைத்து நின்றுள்ளார்.. பாலை கறக்க முயன்றால், சுகுமாரையும் அந்த பசுமாடு கிட்ட சேர்க்கவில்லையாம்.. அதனால் பாலை கறக்க முடியாமல் திகைத்துள்ளார்..
இப்படி இந்த மூன்று மாதங்களாகவே நடந்து வருவதால், இதுவரை 30 ஆயிரம் ரூபாய் வரை பொருளாதார இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக சுகுமார் வேதனையுடன் சொல்கிறார். அதாவது, தன் கழுத்தை வளைத்து நெளித்து, குனிந்து, தன் மடியில் உள்ள பாலை, பசுமாடு குடித்துவிடுகிறது.. அதனால், இதை எப்படி தடுத்து நிறுத்துவது என தெரியாமல் சுகுமார் விழிக்கிறாராம்..
மாட்டின் மூக்கு: அதனால், தற்காலிகமாக தடுக்கும் பொருட்டு, மாட்டின் மூக்கில் மூக்கு வளையம், எலிசபெத் காலர் என்ற கழுத்து வளையம், கட்டையாலான கழுத்து வளையம் போன்றவற்றை பயன்படுத்தலாம் என்று சிலர் சுகுமாருக்கு யோசனை சொல்லி உள்ளார்கள்.. மேலும், மாட்டு காம்புகளில் கசப்பு தன்மை உள்ள வேப்ப எண்ணெய் போன்றவற்றை தடவலாம் என்றும் சொல்லி உள்ளதால், இவைகளை அந்த பசுமாட்டிடம் செலுத்தி முயற்சி செய்து கொண்டிருக்கிறாராம் சுகுமார்.
எனினும், இதற்கு நிரந்தரமான தீர்வு உள்ளதாக கால்நடை டாக்டர்கள் சொல்கிறார்கள்,.. நுண்ணூட்டச் சத்து குறைபாட்டு காரணமாக, பசுமாட்டுக்கு இந்த பழக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லும் கால்நடை டாக்டர்கள், தாது உப்பு கலவை, பாஸ்பரஸ் உள்ளிட்டவற்றை முறையாக வழங்குவதன் மூலம் பசுமாடு, தன்னுடைய பாலை குடிப்பதை தடுக்க முடியும் என்றும் ஆலோசனை சொல்கிறார்கள். இருந்தாலும், திருவண்ணாமலை சுகுமார் வீட்டு பசுமாடு விவகாரம்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications