திருவண்ணாமலையில் லாரியில் வந்த பெண்ணை சீரழித்த 2 கான்ஸ்டபிள்கள்! டபுள் மடங்கு தண்டனை தரணும்: ராமதாஸ்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்திருக்கிறார்கள் 2 போலீஸ்காரர்கள்.. போலீசாரே இப்படி பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் அளவுக்கு பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நிலைக்கு தமிழக சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.. இந்நிலையில், சம்பந்தப்பட்ட 2 காவலர்களுக்கும் இரண்டு மடங்கு தண்டனையை தர வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கோபத்துடன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் கான்ஸ்டபிள்களாக பணிபுரிபவர்கள் 32 வயதான சுந்தர், 30 வயதான சுரேஷ்ராஜ். 2 நாட்களுக்கு முன்பு அதிகாலை 3 மணியளவில் திருவண்ணாமலை ரிங்ரோடு பகுதியில் இருவரும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து திருவண்ணாமலைக்கு மினி வேன் ஒன்று, வாழைத்தார்களை ஏற்றி வந்துள்ளது. அந்த வேனை கான்ஸ்டபிள்கள் சோதனை மேற்கொண்டபோது, 20 மற்றும் 45 வயதில் 2 பெண்கள் இருந்ததை பார்த்து, கண்டு அவர்கள் யார் என்று வேன் டிரைவரிடம் விசாரித்தனர்.
ஒதுக்குப்புறத்தில் பலாத்காரம்
இருவருமே ஆந்திரா சித்தூரை சேர்ந்த சித்தி, மகள் என்பதும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சாமி கும்பிட்டுவிட்டு சொந்த ஊர்திரும்பி கொண்டிருப்பதாகவும் கூறினார்.
எனினும் 2 கான்ஸ்டபிள்களும் 2 பெண்களையும் விசாரிப்பதாக கூறி, ஒதுக்குப்புறத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.. அங்கே சித்தி கண்முன்னேயே 20 வயது பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரமும் செய்துள்ளனர்.. நடந்ததை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியும் அனுப்பியுள்ளனர்.
சஸ்பெண்டு - டிஸ்மிஸ்
பிறகு 2 போலீஸாரும் 2 பெண்களையும் அழைத்து வந்து புறவழிச்சாலை அருகே இறக்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். அதிகாலை சுமார் 4 மணி அளவில் அப்பகுதி மக்கள் இரண்டு பெண்கள் அழுது கொண்டிருப்பதை கண்டு விசாரித்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்த தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டார்.. பிறகு சம்பந்தப்பட்ட 2 காவலர்களும் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து, இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, இறுதியில் டிஸ்மிஸ் செய்யப்பட்டுவிட்டனர். இதனிடையே, தமிழக மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ்.குமாரி, பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து பேசினார்..
அரசு சார்பில் நிவாரணம்
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குமாரி, "பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு மற்றும் கவுன்சிலிங் வழங்கப்படும்.. காவலர்களுக்கு மாதம் ஒருமுறை விழிப்புணர்வு அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிவுறுத்தியுள்ளேன்,, காவலர்கள் 2 பேருக்கும் உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 10 நாட்களுக்குள் அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
இந்த சம்பவத்துக்கு அதிமுக எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரன் என பலரும் திரண்டு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வேலியே பயிரை மேய்ந்த கதை
அந்தவகையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில், "பொது மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு சமூக விரோதிகளால் ஏற்படும் அசம்பாவிதங்களிலிருந்து பாதுகாப்பு தரவேண்டிய காவலர்களே "வேலியே பயிரை மேய்ந்த கதை"யாக இத்தகைய கொடூரத்தை அரங்கேற்றி இருப்பது அவமானகரமான செயலாகும்.
அதுவும் பாதுகாப்புத் தர வேண்டிய காவலர்களாலேயே இந்த கொடூரம் அரங்கேறி இருக்கிறது என்றால் நாட்டின் சுதந்திரம், பெண்களின் பாதுகாப்பு எந்த அளவில் உள்ளது என கேள்விகள் எழுகிறது.
சமூக விரோதிகளிடமிருந்து மக்களை பாதுகாக்க வேண்டிய காவலர்கள் தங்கள் பதவியின் பொறுப்பை உணராமல், அதிகார போதையில் அப்பாவிப் பெண்களை மிரட்டி இதுபோன்று அநாகரீகமாக நடந்து கொண்டிருப்பது கண்டிக்கவும், தண்டிக்கவும் தக்கது.
இரண்டு மடங்கு கூடுதல் தண்டனை
ஒரு குற்றத்தை செய்தால் அந்த குற்றத்திற்கான தண்டனை என்ன என்று தெரிந்திருந்தும் இதுபோன்ற கொடூரமான செயலை செய்திருக்கின்ற இரு காவலர்களுக்கும் மற்ற குற்றவாளிகளுக்கு தருகின்ற தண்டனையை விட இரண்டு மடங்கு கூடுதல் தண்டனை தர வேண்டும்.
தயவு தாட்சண்யம் இன்றி துறை ரீதியான நடவடிக்கைகளை கடுமையாக்க வேண்டும் . பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழ்நாடு அரசு அதிகபட்ச நிவாரண நிதி வழங்குவதுடன், காவல்துறையில் உள்ளவர்களுக்கு பொதுமக்களிடம் மனிதநேயத்தோடு எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்த கவுன்சிலிங் கொடுக்கப்பட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications