திருவண்ணாமலை தீப திருவிழா.. இன்று முதல் டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்களுக்கு லீவு.. கலெக்டர் வார்னிங்
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவில் தீப திருவிழாவை முன்னிட்டு இன்று சனிக்கிழமை முதல் 27 ஆம் தேதி வரை திருவண்ணாமலை நகரத்திற்கு அருகில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 17ஆம் தேதி முதல் தீப திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளைய தினம் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும்.

இந்த நிகழ்வினை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள். கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். தீப திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிரிவலம் வரும் பக்தர்களுக்கு இலவச மினி பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.
தீப திருவிழாவை முன்னிட்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.
அந்தவகையில், திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை காமராஜர் சிலை அருகே அமைந்துள்ள அரசு மதுபான கடை, மணலூர்பேட்டை சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடை, புறவழிச் சாலையில் அமைந்துள்ள எலைட் அரசு மதுபான கடை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ள ஹோட்டல் திரிசூல் ஹோட்டல் நளா ஹோட்டல், அக்ஷிரேயா ஹோட்டல், அம்மாயி, வேங்கிக்கால் பகுதியில் அமைந்துள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி உள்ளிட்ட கடைகள் வரும் வரும் 25.11.2023 12 மணி முதல் 27.11.2023 இரவு 10 மணி வரை 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்றும் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார்.
இந்த உத்தரவையும் மீறி டாஸ்மாக் கடைகள் இயங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications