மகளிர் உரிமை தொகை 1000.. புகழ்ந்த திமுக நிர்வாகியை ஆடிப்போக வைத்த திருவண்ணாமலை பாட்டி
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வடக்கு திமுக சார்பில் கூட்டம் ஒன்று நடந்தது. அந்த கூட்டத்தில் திமுக நிர்வாகி பிரசன்னா மகளிர் உரிமை தொகையாக வழங்கப்படும் 1000 ரூபாய் குறித்து பெருமையாக பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட பாட்டி, 1000 ரூபாய் பற்றி பேசுறீங்க.. அதை வைத்து ஒரு சின்ன தங்க மூக்குத்தி கூட வாங்க முடியாது என்று பதிலடி கொடுத்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
2021 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக, பெண்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டது. கொரோனா காரணமாக உடனடியாக திட்டத்தை செயல்படுத்தவில்லை .எனினும் கடந்த 2023 செப்டம்பர் 15 முதல் மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் பயன் பெற்று வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் தொடங்கிய இத்திட்டம் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா, மத்திய பிரசேதம், மகாராஷ்டிரா என படிப்படியாக பல மாநிலங்களில் அமலுக்கு வந்தது. நாட்டின் தலைநகரான டெல்லியிலும் இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வர 1000 ரூபாய் திட்டம் முக்கிய காரணமாகவும் 2021ம் ஆண்டு பேசப்பட்டது. அதேபோல் 2024 தேர்தலிலும் பேசப்பட்டது. அதேநேரம் திமுக தேர்தல் அறிக்கையின் போது அனைத்து மகளிருக்கும் என்று கூறித்தான் ஓட்டு கேட்டது என்றும், ஆனால் தகுதி வாய்ந்தவர்கள் என்று கூறி பலருக்கும் தரவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
1000 மகளிர் உரிமை தொகை என்பது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுகே மட்டுமே வழங்கப்படுகிறது.அதேநேரம் முதியோர் உதவி தொகை மற்றும் விதவை உதவி தொகை வாங்குவோருக்கு கிடையாது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் குடும்ப உறுப்பினர்களை கொண்ட குடும்பத்திற்கும் வழங்கப்படவில்லை.. நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் குடும்பத்திற்கும் வழங்கப்படவில்லை.. எனினும் ஒரு கோடியே 15 லட்சத்திற்கும் அதிகமானோர், அதாவது தமிழ்நாட்டில் பாதிக்கு பாதி பேர் மகளிர் உரிமை தொகை பெற்று வருகிறார்கள்.
இந்த 1000 ரூபாய் உதவி தொகை பற்றி பாராட்டி திமுக நிர்வாகி பிரசன்னா திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பகுதியில் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். மேலும் சிலர் 1000 ரூபாய் பிச்சை காசு என விமர்சிப்பவர்களை கண்டித்துக் கொண்டிருந்தார் பிரசன்னா..
அப்போது குறுக்கிட்ட பாட்டி, அதை வைத்து ஒரு சின்ன மூக்குத்தி கூட வாங்க முடியாது என்று பதிலடி கொடுத்தார் .. இன்றைக்கு நகை என்ன விலை விற்கிறது தெரியுமா? எனகேட்டார்.. உடனே பிரசன்னா.. ஆத்தாவிற்கு ஆசையை பாருங்கள்.. 1000 ரூபாயில் 10 பவுனில் நகை கொடுத்தால் தான். 1000 ரூபாயை மதிப்பேன் என்கிறது என்றார். உடனே அந்த பாட்டி.. அப்படி எல்லாம் இல்லை.. ஏழைகள் எல்லாம் எப்படி நகை எடுத்து போடுவார்கள் என்று அந்த பாட்டி கேட்டார்.
உடனே திமுக நிர்வாகி பிரசன்னா பேசுகையில், உங்கள் பெயர் என்ன என்று கேட்டார். அதற்கு அந்த பாட்டி மாலதி என்கிறார். அப்போது பிரசன்னா மாதம் ஆயிரம் எனில் ஆண்டுக்கு 12000 கிடைக்கிறது என்கிறார். பின்னர் பாட்டியிடம் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்று கேட்டார் பிரசன்னா. அப்போது பாட்டி தினமும் 300 சம்பாதிப்பதாகவும் மாதம் 9000 சம்பாதிப்பதாகவும் கூறுகிறார். உடனே பிரசன்னா, மகளிர் உரிமை தொகை ஸ்லாப் இருக்கிறது.. நீங்கள் தான் 9000 சம்பாதிப்பதாக கூறுகிறார்கள்.. நாளைக்கு மகளிர் உரிமைத் தொகையை நிறுத்தினால் என்னை கேட்கக்கூடாது.. இவரே 9000 என்றால் வீட்டுக்காரர் எவ்வளவு சம்பாதிப்பார் என்று கேட்டார் பிரசன்னா.. தொடர்ந்து 1000 ரூபாயை நிப்பாட்டு என்று பாஜக கூறுவதாக விமர்சித்தார் . இப்படியாக வீடியோ முடிகிறது.. இந்த வீடியோ பாதியில் கட் செய்து வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications