திருவண்ணாமலையே துடிக்குது. சடலத்தின் மீதே விழுந்து புரண்ட தாய்.. இறந்தது மகன் என தெரியாமல்.. கொடுமை
திருவண்ணாமலை: எதிர்பாராத சம்பவங்கள் எல்லாம் சினிமாவில்தான் சாத்தியம் என்பார்கள்.. ஆனால், திருவண்ணாமலையில் நடந்த ஒரு கொடுமை, ஒட்டுமொத்த மக்கள் மனதையும் புரட்டி போட்டு வருகிறது.. என்ன நடந்தது?
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் சொந்தமாக இ - சேவை மையம் ஒன்றை நடத்தி வருகிறார்... இவரது மனைவி பெயர் பாக்கியலட்சுமி. இவர்களது மகன் சிவசுதாகர்.. 32 வயதாகிறது.. ஐடி கம்பெனி ஒன்றில் சிவசுதாகர் வேலை பார்த்து வருகிறார்.

செய்யாறு: சிவசுதாகரின் மனைவி பெயர் தேவி.. பிரசவத்திற்காக செய்யாறில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், 15 நாட்களுக்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.
இந்நிலையில், ஆறுமுகம், தன்னுடைய மனைவியையும், மகன் சிவசுதாகரையும் அழைத்துக்கொண்டு துணி வாங்குவதற்காக காஞ்சிபுரத்திற்கு சென்றிருக்கிறார். துணி வாங்கி முடித்ததுமே, மனைவியையும் குழந்தையையும் பார்ப்பதற்காக செய்யாறுக்கு கிளம்பினார் சிவசுதாகர்.. தன்னுடைய நண்பர் சஞ்சய் என்பவரையும் பைக்கில் உட்கார வைத்துக் கொண்டு செய்யாறு நோக்கி திருவண்ணாமலைக்கு வந்து கொண்டிருந்தார்.
கூட்டு ரோடு: சேத்துப்பட்டு அடுத்த வெளுக்கம்பட்டு கூட்டு ரோடு அருகில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வேகமாக கார் ஒன்று, எதிர்பாராத விதமாக மோதிவிட்டது. இதில், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார் சிவசுதாகர்.
பைக்கின் பின்னால் உட்கார்ந்து வந்த சஞ்சய் மற்றும் காரில் வந்த 2 பேர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தனர். இதையடுத்து, விரைந்து வந்த போலீசார் இவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.
திருவண்ணாமலை: இதனிடையே, காஞ்சிபுரத்திலிருந்து துணி வாங்கிக்கொண்டு, சிவசுதாகரின் பெற்றோர் ஆறுமுகமும், பாக்கியலட்சுமியும் பைக்கில் திருவண்ணாமலைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது கூட்டு ரோடு அருகே நடந்த விபத்தை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர்.. விபத்து பகுதியில் ஒரே கூட்டமாக இருந்ததால், யாருக்கு? என்ன நடந்ததோ? என்று பதைபதைத்தவாறே பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு அருகில் வந்தனர்.
அப்போதுதான், விபத்தில் இறந்து கிடப்பது தங்களுடைய மகன் சிவசுதாகர் என்பதை அறிந்து அதிர்ச்சியில் அலறி துடித்தனர்.. சிவசுதாகரின் சடலத்தின் மீதே விழுந்து, புரண்டு அழுதார் பாக்கியலட்சுமி.. இதை பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் கண்கலங்கி போனார்கள்.. இந்த விபத்து குறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
கலங்கடித்த சம்பவம்: ஏதோ விபத்து என்று நினைத்துதான், கலங்கிப்போய் அருகில் சென்றுள்ளனர்.. ஆனால், தங்கள் மகனே சடலமாக கிடந்ததை கண்டு, தாய், தந்தை இருவருமே அலறியது பெருத்த சோகத்தை திருவண்ணாமலையில் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications