திருவண்ணாமலையில் துண்டு துண்டா விழுந்த விரல்கள்.. காட்டுக்கடங்காத போதையால் வேப்ப மரத்தில் இப்படியா?
திருவண்ணாமலை: மதுபோதை பெரும்பாலான குடும்பங்களை சீரழித்து வருகிறது.. மதுக்கடைகளை படிப்படியாக மூட அரசு அக்கறை காட்ட வேண்டும் என்று நீதிமன்றங்கள் அவ்வப்போது அறிவுறுத்தியபடியே உள்ளன.. எனினும், டாஸ்மாக் கடைகளில் எந்நேரமும் கூட்டம் நிறைந்தபடியே உள்ளது.. அதுமட்டுமல்லாமல் மதுபோதையால் குற்ற சம்பவங்களும் தலைவிரித்தாடுகின்றன. இதோ தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2 கொலைகள் மதுபோதையால் நடந்துள்ளது அதிர்ச்சியை தந்து வருகிறது.
தேனி அருகே உப்புகோட்டை பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி - ஜெயலட்சுமி தம்பதியினரின் மகன் நவீன் குமார். 25 வயதாகிறது. செல்போன் கடையில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 6ம் தேதி நண்பருடன் வெளியே சென்ற நவீன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பல இடங்களில் தேடிப்பார்த்தும் நவீன் கிடைக்காததால் பதறிப்போன பெற்றோர் உடனடியாக வீரபாண்டி போலீசில் புகார் தந்தனர்.
தேனி நண்பர்கள்
இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணையை துவங்கினர். அப்போதுதான் நண்பர்களுக்குள் மது போதையில் தகராறு ஏற்பட்டு நவீன் குமாரை கொலை செய்து ஆற்றில் வீசியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட நவீன் குமாரின் உடலை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
இன்றைய தினம் சுமார் 4 மணி நேர தேடுதலுக்கு பிறகு உப்புக்கோட்டை கருப்புசாமி கோயில் அருகே உள்ள ஆற்றின் ஓரத்தில் உடலை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. நவீன் ஆற்றிலிருந்து சடலமாக எடுக்கப்பட்டதுமே குடும்பத்தினரும், கிராம மக்களும் கதறி அழுதது காண்போரை நிலை குலைய வைத்தது. மதுபோதையில் ஒரு உயிரை கொன்றுவிட்டார்களே என்று வெடித்து கண்ணீர் விட்டனர்.
திருவண்ணாமலை மரத்தில்
தேனியில் இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே மற்றொரு கொடுமை நடந்துள்ளது.. அங்குள்ள மட்டப்பிறையூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சரவணன்.. 22 வயதான இவர் ஒரு கூலித் தொழிலாளி.
சரவணன் வழக்கம் போல் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு, நேற்றிரவு சுமார் 8 மணியளவில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் சாலையில் உட்கார்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அவரை யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கிவிட்டு ஓடிவிட்டதாக தெரிகிறது.
கல்லால் தாக்கியது யார்
அந்த நேரம் பார்த்து சரவணன் அந்த வழியாக நடந்து வரவும், குமார் ஓடிச்சென்று சரவணனை வழிமறித்து, " ஏன் என்னை கல்லாலே அடிச்சே? நீதானே என்னை கல்லால் அடிச்சே? உண்மையைச் சொல்!" என்று போதையில் வாக்குவாதம் செய்தார்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சரவணன், நான் கிடையாது, நான் இப்போதுதான் வேலை முடித்துவிட்டு, வீட்டுக்கு போய் கொண்டிருக்கிறேன் என்றார்.. ஆனாலும் குமார் விடாமல், "என்னை அடிச்சவங்களை உனக்கு தெரியும், அவங்களை யாருன்னு சொல்லு, என்கிட்ட மறைக்காதே என்று சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
துண்டு துண்டான விரல்கள்
இதனால் இரு தரப்பிலும் வாக்குவாதம் முற்றியது. உடனே போதையிலிருந்த குமார் தன்னுடைய நண்பர்களான பார்த்திபன், இளையராஜா மற்றும் சந்திரசேகர் ஆகியோரை ஸ்பாட்டுக்கு வரவழைத்தார்.. சரவணன்தான் தன்னை கல்லால் அடித்ததாக அவர்களிடம் முறையிட்டார்.. பிறகு அந்த கும்பல் ஒன்றாக சேர்ந்து கடுமையாக தாக்கியிருக்கிறது.. அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் சென்று, குமாரின் வீட்டில் இருந்த வேப்பமரத்தில் கட்டி வைத்தது.
பிறகு கல்லால் அடிச்சது யாரென்று சொல்லாவிட்டால் கையை வெட்டிவிடுவோம் என்றது.. மிரட்டலுக்காக அப்படி சொல்கிறார்கள் என்றால், நிஜமாகவே சரவணனின் இரண்டு கைகளிலும் உள்ள கைவிரல்களைக் கொடூரமாக வெட்டியெடுத்தது.. இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்து அலறி துடித்தார் சரவணன். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வெளியே வந்தனர்.
அரசு மருத்துவமனை
சரவணனை சுற்றி நின்று கொண்டிருந்த போதை கும்பலை பார்த்ததுமே, பயந்துபோனது.. யாருமே அவர்கள் அருகில் செல்லவில்லை.. எனினும் செய்வதறியாது திகைத்த மக்கள், உடனடியாக போளூர் போலீசுக்கு தகவல் தந்தனர்.. இதை பார்த்ததுமே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.. பிறகு வந்த போலீசார் சரவணனை மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கும், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போளூர் போலீசார், தலைமறைவான குமார், பார்த்திபன், இளையராஜா மற்றும் சந்திரசேகர் ஆகிய 4 குற்றவாளிகளையும் வலைவீசித் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications