சரியான நேரம் இதுதான்.. திருவண்ணாமலையில் இன்று பவுர்ணமி கிரிவலம்.. பக்தர்களுக்காக வந்த ஹேப்பி நியூஸ்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இன்று பவுர்ணமி கிரிவலம் ஆகும்.. இதையொட்டி, பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்த தகவலை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அத்துடன், திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகளையும் தமிழக அரசு பக்தர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்திருக்கிறது.
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் என்பது உலக பிரசித்தி பெற்றதாகும். மாதந்தோறும் பவுர்ணமி நாளில், மலையே மகேசன் என போற்றி வணங்கப்படும் 2,668 அடி உயரம் உள்ள மகாதீபம் ஏற்றப்படும் திருவண்ணாமலையை 14 கி.மீ., தொலைவு வலம் வந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுவார்கள்..

எனவே, இன்று வெள்ளிக்கிழமை இரவு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பவுர்ணமி கிரிவலத்தையொட்டி சிறப்பு பேருந்துகளும், மற்றும் ரயில்களும் இயக்கப்பட உள்ளன... மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்
கிரிவலம்: பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு இன்று 400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.. இதுகுறித்து விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) லிமிடெட், விழுப்புரம் சார்பாக வெள்ளிக்கிழமை அன்று கிளாம்பாக்கத்தில் (KCBT) இருந்து திருவண்ணாமலைக்கு 250 சிறப்பு பேருந்துகளும், புதுச்சேரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பண்ருட்டி, திருக்கோவிலூர், சிதம்பரம், விருதாச்சலம், திட்டக்குடி, வேலூர், ஆரணி, ஆற்காடு, காஞ்சிபுரம் மற்றும் திருப்பத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 150 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2 நாட்கள்: இன்றும், நாளையும் வார இறுதி நாட்களில் மக்கள் கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை மற்றும் போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பயணம் செய்வார்கள் என்பதால் அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக வெள்ளிக்கிழமை 335 மற்றும் சனிக்கிழமை 165, மொத்தம் 500 சிறப்புப் பேருந்துகளை மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஓசூர், திருவண்ணாமலை (வழி ஆற்காடு, ஆரணி) மற்றும் திருவண்ணாமலை (வழி காஞ்சிபுரம், வந்தவாசி) ஆகிய ஊர்களுக்கு விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக வெள்ளிக்கிழமை 20, சனிக்கிழமை 20, மொத்தம் 40 சிறப்பு பேருந்துகளை மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகள்: எனவே, பயணிகள் https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து இச்சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
ஐப்பசி மாத பௌர்ணமி இன்று அதிகாலை தொடங்கி நாளை காலை வரை நடைபெற உள்ளது. இதனால், கோவிலில் இன்று சுவாமி தரிசனம் செய்வதற்கு விடிகாலை முதலே பக்தர்கள் தரிசனம் செய்ய திரண்டு வந்தனர்.. தேரடி வீதியில் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசையாக கூட்டம் நிற்பதை காண முடிந்தது. சிறிதுகூட நகர்ந்து செல்ல முடியவில்லை என்றும், கூட்டத்தை சமாளிக்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் சரியாக செய்யவில்லை என்றும் பக்தர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.












Click it and Unblock the Notifications