பட்டா பெயர்.. சொத்து வரி பெயர் மாற்றம்.. கடிவாளம் போடுமா அரசு.. திருவண்ணாமலை ஆபிஸில் சம்பவம்
திருவண்ணாமலை: சொத்து வாங்கிவிட்டால் மட்டும் போதாது, அந்த சொத்தின் சொத்து வரியை உங்கள் பெயரில் மாற்றம் செய்ய வருவாய் ஆய்வாளர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையில் திருவண்ணாமலையில் சொத்துவரி பெயர் மாற்றம் செய்ய முயற்சி செய்தவரிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.
சொத்து வரி என்பது நகராட்சி அலுவலகம் பராமரித்து வரும் சொத்து வரி (Pr-o-p-e-rty Tax) பதிவேடுகளில் இருக்கும். பொதுவாக சொத்தின் புதிய உரிமையாளரது பெயரை பதிந்து, மாற்றம் செய்யப்படாவிட்டால், ரசீதுகள் முந்தைய உரிமையாளர் பெயரில் வழங்கப்படும் நிலை ஏற்படும். எனவே புதிதாக சொத்து வாங்கியவர்களுக்கு வரி செலுத்தாத நிலையில் அபராதமும் விதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு.

பெயர் மற்றும் முகவரி மாற்றம் சம்பந்தமாக நம்மிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் எளிதாக சொத்து வரி பெயர் மாற்றம் செய்துவிட முடியும்.
சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய தேவையான ஆவணங்கள்:
கடைசியாக கட்டிய வரிக்கான ரசீது
விற்பனை பரிவர்த்தனை பத்திரத்தின் சான்றளிக்கப்பட்ட நகல்
வீட்டு வசதி சங்கத்திடமிருந்து (Housing Society) வீடு வாங்கப்பட்டிருந்தால், அதனிடமிருந்து ஆட்சேபணை இல்லை என்ற சான்றிதழ் ( NOC)
கையொப்பம் இட்ட பூர்த்தி செய்த விண்ணப்பம்
இந்த ஆவணங்கள் சரியாக இருந்தால் லஞ்சம் கொடுக்காமல் சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய முடியும். ஆனால் சில அரசு அதிகாரிகள் என்னதான் ஆவணங்கள் இருந்தாலும் லஞ்சம் கேட்பது தொடர்கதையாக உள்ளது. திருவண்ணாமலை நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
விழுப்புரம் மாவட்டம் ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஆர்.ரமேஷ் என்பவர் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது குடும்பத்தினருக்கு திருவண்ணாமலை நகராட்சி தாளகிரி ஐயர் தெருவில் சொத்து இருக்கிறது. அவரது தந்தை இறந்த பின்னர் சொத்தை அவரது குடும்பத்தினர் பாகபிரிவினை செய்து கொண்டார்கள். அதில் அவருக்கு தாளகிரி ஐயர் தெருவில் உள்ள வீடு பாத்தியப்பட்டதாகும்.
இதையடுத்து ஓய்வு பெற்ற ஆசிரியர் ரமேஷ், தனது தந்தை பெயரில் உள்ள சொத்தை தனது பெயரில் மாற்றம் செய்வதற்காக திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளரிடம் ஜனவரி மாதம் மனு அளித்துள்ளார். இது சம்பந்தமாக விசாரணை செய்த வருவாய் ஆய்வாளர் செல்வராணி மற்றும் வருவாய் உதவியாளர் ராகுல் ஆகியோர் அவரிடம் சொத்து வரியின் பெயரை மாற்றம் செய்ய லஞ்சமாக ரூ.50 ஆயிரம் கேட்டார்களாம். பின்னர் படிப்படியாக குறைத்து ரூ.30 ஆயிரம் கொடுத்தால் தான் சொத்தின் பெயரை மாற்ற பரிந்துரை செய்ய முடியும் என்று கூறிவிட்டார்களாம்.
லஞ்சம் கொடுக்க மனமில்லாத ஓய்வு பெற்ற ஆசிரியர் ரமேஷ் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நேற்று ரமேஷிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பி உள்ளார்கள். பின்னர் ரமேஷ் வருவாய் உதவியாளர் ராகுலிடம் ரூ.30 ஆயிரத்தை கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை சுற்றி வளைத்து கையும், களவுமாக பிடித்தார்கள்.
பின்னர் வருவாய் ஆய்வாளர் செல்வராணியையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து சொத்துவரி பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் செல்வராணி மற்றும் வருவாய் உதவியாளர் ராகுல் ஆகிய 2 பேரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சமீப காலமாக அரசு அலுவலங்களில், பொறி வைத்து பிடிக்கும் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் அரசு அலுவலகங்களில் விஏஓக்கள் முதல் தாசில்தார்கள் வரை பட்டா பெயர் மாற்றம், சொத்து வரி பெயர் மாற்றம் உள்பட பல்வேறு அரசு சேவைகளுக்கு லஞ்சம் வாங்குவதை தடுக்க சேவை உரிமை சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த சட்டம் கொண்டுவரப்பட்டால், லஞ்சம் வாங்க விரும்பும் ஒருசில அரசு ஊழியர்களுக்கு கடிவாளம் போடும் வகையில் இருக்கும் என்கிறார்கள் பொதுமக்கள்.












Click it and Unblock the Notifications