திருவண்ணாமலையில் ஏடிஎம் கொள்ளையர்கள் கைதா? போலீஸ் எஸ்.பி. மறுப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏடிஎம் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டதாக வந்த தகவலை போலீஸ் எஸ்பி மறுப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் கொள்ளையடித்தவர்களை போலீஸார் தேடி வரும் நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானதை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் மறுத்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 ஆம் தேதி ஒரே இரவில் நான்கு இடங்களில் ஏடிஎம் மையங்களை உடைத்து அதிலிருந்த ரூ 75 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் 10ஆவது தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் ஏடிஎம் உள்ளது. இதிலிருந்து பணத்தை கொள்ளையடிப்பதற்காக கொள்ளையர்கள் கேஸ் வெல்டிங் மிஷினை பயன்படுத்தி ஏடிஎம்மை உடைத்து அதிலிருந்து ரூ 20 லட்சம் கொள்ளையடித்துச் சென்றனர்.

பெரியார் அரசு பேருந்து பணிமனை
அது போல் திருவண்ணாமலை பெரியார் அரசு பேருந்து பணிமனை அருகில் உளள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஏடிஎம்மை உடைத்து 30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. போளூரில் ரயில்வ ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம்மை உடைத்து ரூ 20 லட்சம் கொள்ளை நடந்துள்ளது.

கலசப்பாக்கம் வங்கி ஏடிஎம்
அடுத்தபடியாக கலசப்பாக்கத்தில் உள்ள ஒன் இந்தியா ஏடிஎம்மை உடைத்து ரூ 5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த 4 ஏடிஎம் மையங்களிலும் ஒரே மாதிரியான கொள்ளை நிகழ்ந்துள்ளது. 4 இடங்களிலும் கேஸ் வெல்டிங் மிஷின் பயன்படுத்தி பூட்டப்பட்ட பூட்டுகளை உடைத்துள்ளனர். அதன் பின்னர் உள்ளே சென்று ஏடிஎம் மிஷினை கேஸ் வெல்டிங் மூலம் சேதப்படுத்தி திறந்து அதிலிருந்து பணத்தை கொள்ளை அடித்துள்ளனர்.

ரூ 75 லட்சம்
ஒரே இரவில் 4 இடங்களில் 75 லட்சத்தை கொள்ளையடித்தது பொது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏடிஎம் மையங்களில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் மும்பையில் உள்ள ஒரு சர்வரில்தான் பதிவாகும். அதை வாங்குவதற்கான முயற்சியில் போலீஸார் ஈடுபட்டு வருகிறார்கள்.

4 ஏடிஎம் மையங்கள்
இந்த கொள்ளை சம்பவத்தை அடுத்து தமிழக ஆந்திர எல்லைகளான கிறிஸ்டியான்பேட்டை, பத்தளப்பள்ளி, சைனகுண்டா உள்ளிட்ட 6 மாநில எல்லைகளில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து வடக்கு மண்டல ஐஜி கண்ணன் கூறுகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 4 ஏடிஎம்களின் சிசிடிவி காட்சிகள் மும்பையில் இருந்து வாங்கப்பட்டது. அவற்றை பரிசீலனை செய்து வருகிறோம். 4 ஏடிஎம்களிலும் கேஸ் வெல்டிங் செய்துள்ளதால் அவை தீப்பிடித்திருக்கக் கூடும். எனவே டெக்னிக் தெரிந்த வெளிமாநில கொள்ளையர்கள் இதை செய்திருப்பார்கள் என உறுதியாகியுள்ளது என்றார். அத்துடன் கொள்ளையர்களை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை ஏடிஎம்
இந்த நிலையில் திருவண்ணாமலை ஏடிஎம்களில் கொள்ளையடித்த 6 பேர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அவர்கள் காரில் ஹரியானா தப்பி சென்ற போது 6 பேரும் சிசிடிவி காட்சிகளை வைத்து அடையாளம் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இந்த தகவலை எஸ்பி கார்த்திகேயன் மறுத்துள்ளார். இதுவரை ஏடிஎம் கொள்ளை நிகழ்வில் இதுவரை எந்த குற்றவாளியும் கைது செய்யப்படவில்லை. விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications