அண்ணாமலையாரின் திருவடியில்.. கிரிவலம் செல்லும்போதே பிரிந்த பெண்ணின் உயிர்.. திருவண்ணாமலையில் சோகம்
திருவண்ணாமலை: ராணிப்பேட்டையைச் சேர்ந்த 58 வயதான பெண்மணி ஒருவர் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பெளர்ணமி கிரிவலம் சென்ற நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகப் புகழ்பெற்றது திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில். இந்த மலையின் கிரிவலப் பாதையின் சுற்றளவு 14 கிலோ மீட்டராகும். சிவ பக்தர்களின் புகழிடமாக இத்திருத்தலம் விளங்கி வருகிறது. இந்த மலையில் காலம் காலமாக சித்தர்கள் பலர் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இன்றும் கூட பல சித்தர்கள் இப்பகுதியில் வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் கண்ணில் படுவது மிகவும் அபூர்வம் என்றும், அப்படி அவர்கள் தென்பட்டு ஆசிர்வாதம் அளித்தால் மிகவும் புண்ணியம் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

இந்த மலையை சிவ பக்தர்கள், சித்தர்கள், ஆன்மிகவாதிகள் என தினந்தோறும் ஏராளமானோர் வலம் வருகின்றனர். இந்த மலையை இடது புறமாக வலம் வந்து நடக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. மலையை ஒட்டியுள்ள வலது புறத்தில் சித்தர்கள், யோகிகள், தேவர்கள் வலம் வருவதாக நம்பப்படுகிறது. பெளர்ணமி நாட்களில் திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம்.
கார்த்திகை தீபம், சித்ரா பெளர்ணமி போன்ற சிறப்புமிக்க நாட்களில் லட்சக் கணக்கிலான பக்தர்கள் இங்கு வந்து கிரிவலம் சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்வது வழக்கமாக உள்ளது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். அண்ணாமலையாரை காண குறிப்பிட்ட நாட்களென்று எதுவும் இல்லை எல்லா நாளும் கிரிவலத்துக்கு உகந்த நாள் என்று சொல்லப்படுகிறது.
திருவண்ணாமலையில் மலைப் பாதையைச் சுற்றிலும் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் என அஷ்ட லிங்கங்கள் இடம்பெற்றுள்ளன. கிட்டத்தட்ட கிரிவலப் பாதையில் மட்டும் 99 கோயில்கள் உள்ளன. கிரிவலம் வரும்போதே அனைத்து தெய்வங்களையும் தரிசனம் செய்வதற்கான வாய்ப்பு பக்தர்களுக்கு கிடைக்கும்.
ஆதி அண்ணாமலை, 16 விநாயகர் கோவில்கள், நேர் அண்ணாமலை, சந்திர சூரிய லிங்கங்கள், 7 முருகன் கோயில்கள், ஆதிகாமாட்சி அம்மன் உள்ளிட்ட கோயில்கள் உள்ளன. கிரிவலம் செல்லும்போது மனமுருகி சிந்தையில் இறைவனை மட்டும் எண்ணி சென்றால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை.
இந்நிலையில், ராணிப்பேட்டையைச் சேர்ந்த 58 வயதான பெண்மணி ஒருவர் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பெளர்ணமி கிரிவலம் சென்ற நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் உஷாராணி. 58 வயதான உஷாராணி பிப்ரவரி 11 ஆம் தேதி தனது உறவினர்களுடன் பெளர்ணமி தினத்தில் கிரிவலம் செல்லும் வகையில் திருவண்ணாமலைக்குச் சென்றுள்ளார். அப்போது, கிரிவலப் பாதையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் உறவினர்களிடம் இருந்து உஷாராணி தவறிச் சென்றுள்ளார்.
உஷாராணி வழக்கமாகவே கிரிவலம் செல்லும் நபர் என்பதால் வீட்டுக்கு வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் அவர்களுடைய உறவினர்களும் கிரிவலத்தை முடித்து வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். ஆனால், கிரிவலம் சென்று கொண்டிருந்த உஷாராணி திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் காஞ்சி சாலையில் உள்ள சிட்கோ பேருந்து டிப்போ அருகில் மயங்கி விழுந்துள்ளார்.
அருகிலிருந்தவர்கள் உஷாராணியை திருவண்ணாமலை தாலுகா போலீசார் உதவியுடன் மீட்டுள்ளனர். பின்னர், உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உஷாராணி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து, உஷாராணியின் சகோதரர் வெங்கடேசன் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கிரிவலம் சென்ற பெண்ணின் உயிர் பறிபோன சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications