சாதிச்சுட்டாங்க ஸ்ரீபதி.. நீதிபதியான மலைவாழ் பெண்! பிரசவ நாளில் தேர்வு - சினிமாவை மிஞ்சும் பரபரப்பு
திருவண்ணாமலை: 23 வயதில் நீதிபதியாகி இருக்கிறார் பழங்குடியினத்தை சேர்ந்த ஸ்ரீபதி. யார் அவர்? எப்படி நீதிபதியானார்? என்பதை விரிவாக பார்ப்போம்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீபதி. பழங்குடியினத்தை சேர்ந்த இவர் 23 வயதிலேயே பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் சிவில் நீதிபதியாகி சாதித்து இருக்கிறார். இவர் நீதிபதியானது எப்படி? இதற்காக அவர் எதிர்கொண்ட சவால்கள் என்ன என்பதை பழங்குடி மாணவர்களுக்கு கல்வி சேவையாற்றிவரும் ஆசிரியை மகாலட்சுமி நெகிழ்ச்சியோடு பதிவிட்டு இருக்கிறார்.

அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, “பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் Civil judge ஸ்ரீபதி.ஜவ்வாதுமலையில் பிறந்து,ஏலகிரி மலையில் கல்வி கற்று, B.A.,B.L., சட்டப்படிப்பை முடித்து, படிப்பின் இடையில் மணமானாலும் இடைநின்று போகாமல் படித்து முடித்தவர். இன்று மலையும், மாவட்டமும் தெரிந்தவர்கள் அனைவரும் ஸ்ரீபதியைப் பாராட்டிப் போற்றிக் கொண்டிருப்பதற்குக் காரணம் அவருடைய வயதா(23), அவருடைய இனமா, அவர் வெற்றி அடைந்திருக்கும் துறையா? மூன்றுமே எனலாம் நீங்கள்.
ஆனால்ம் நான் உண்மையிலேயே அதிர்ச்சியில் மூர்ச்சையாயிருந்தேன் இந்தத் தகவலைக் கேட்டபோது. ஸ்ரீபதிக்குத் தேர்வு வரும் தேதியிலேயேதான் பிரசவ தேதியும் கொடுக்கப்பட்டிருந்தது. தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன் குழந்தையும் பிறந்துவிட்டது. தேர்வைக் கண்டிப்பாக எழுதவேண்டும் என்று தீவிரமாக இருந்தார்." இரண்டாவது நாள் என்றால் கொஞ்சம் கஷ்டம்தான். டாக்டரின் ஆலோசனைப்படி வேறெப்படி பாதுகாப்பாக போகமுடியும் என்று கேட்டுவிட்டு முடிவெடுக்குமாறு நம் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பரமுவிடம் மட்டும் கூறியிருந்தேன்."(பரமு, ஸ்ரீபதி இணையரின் நண்பர் & ஒரே ஊர்).
மற்றபடி அவர் சென்றாரா இல்லையா என்று கூட கேட்கவில்லை. யார் வேண்டுமானாலும் ஆலோசனை கூறலாம். ஆனால் எடுத்து செயல்படுத்துவதில்தானே எல்லாமே இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து, வெறும் காரை, பாதுகாப்பான, சொகுசு காராக மாற்றி ஸ்ரீபதி தேர்வுக்குச் சென்னை செல்கிறார். தேர்வு எழுதினார். இதோ வெற்றிவாகையும் சூடியிருக்கிறார். உண்மையாகவே நினைத்துப்பார்த்தால் "ஏய் ...எப்புட்றா?" என்று சொல்வதற்குமுன் தொண்டைக் குழிக்குள் திக் திக் அடிக்கிறது. இரத்தம் சொட்ட சொட்ட எப்படித்தான் ஸ்ரீபதி இதை எதிர்கொண்டாரோ என்று.
அதைவிட பெருமைப்படவும் பாராட்டப்படவும் வேண்டிய நபர் வெங்கட்ராமன், ஸ்ரீபதியின் இணையர். புள்ளதான் முக்கியமென்று சொல்லி, தடைகல்லாக நிற்கும் ஆண்களுக்கு மத்தியில் அவர் ஸ்ரீபதியின் இறக்கைகளில் பாராசூட் பொருத்திவிட்டவர் போன்று தெரிகிறார். Hats off you Venkat! அடுத்து.. ஸ்ரீபதியின் தாய். கட்டிக்கிட்ட ஊரில் இருந்தால் பிழைக்க முடியாது என்றெண்ணி, தன் சொந்த ஊருக்கே சென்று, அங்குள்ள பள்ளியில் தன் மகளைச் சேர்த்துப் படிக்க வைத்த அவரின் வைராக்கிய குணம்தான் ஸ்ரீபதிக்கு அப்படியே வந்துள்ளது.
இணையேற்பு முடிந்து ஸ்ரீபதி அந்த ஊரில் நடக்கும் ஒரு கிராமசபையில் பங்கேற்று,கிராம வளர்ச்சித் தொடர்பாக பல கேள்விகளை அடுக்கியுள்ளார்.எல்லோரையும் போல அரசியல் பெருமகனார்கள் "இதுக எல்லாம் படிச்சி என்னத்த கிழிக்கப் போவுதுங்கனு நாங்களும் பார்க்கிறோம்" என்று எகத்தாளமாக முதுகுக்குப் பின்புறம் பேசியுள்ளனர். இதோ வெற்றியும் கண்டுள்ளார். இனி யாருக்கு வயிற்றில் புளிக் கரைத்துக்கொண்டிருக்கிறது என்றுதான் தெரியவில்லை. யார் சொன்னால் எல்லோருக்கும் கேட்குமோ அந்த இடத்திற்கு எங்கள் வலியைத் தெரிந்த, உணர்ந்த, புரிந்த ஒருவர் சென்றிருப்பது அவ்வளவு நிம்மதியாகவும் பெருமையாகவும் பக்கபலமாகவும் உள்ளது. நன்றிநவிலல், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்று எழுதிவைத்துச் சென்ற எங்கள் முதல்வர் முக ஸ்டாலினுக்கு!” என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications