திருவண்ணாமலையில் பயங்கரம்! விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டி படுகொலை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கலசப்பாக்கம் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் நாயுடுமங்கலத்தைச் சேர்ந்தவர் அக்ரி காமராஜ். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளராக இருந்தார்.

இந்த நிலையில் நாயுடுமங்கலம் ரயில்வே கேட் அருகே அக்ரி காமராஜ் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருந்தார். இதுகுறித்து தகவலறிந்த கலசப்பாக்கம் போலீஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்விரோதத்தில் இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என கலசப்பாக்கம் காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. அண்மைக்காலமாக அரசியல் கட்சியின் பிரமுகர்கள் வெட்டிக் கொலை செய்யப்படும் நிலை அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் வேலூர் மாவட்டம் ஆவாரம்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் சரத்குமார். இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி அமைப்பாளராகவும் இருந்தார். இவர் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி மது அருந்திக் கொண்டிருந்த போது 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி நடராஜபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த ராஜமாணிக்கத்தின் மகன் ராஜேஷ் கொல்லப்பட்டார். இவர் விபத்தில் ஒரு காலை இழந்துவிட்டு செயற்கை கால் பொருத்தப்பட்டிருந்தது. விசிகவில் உறுப்பினராகவும் இருந்தார்.
இவர் பெட்ரோல் பங்க் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள் ராஜேஷை வழிமறித்து வெட்டிக் கொன்றனர். அது போல் கடந்த 2023 ஆம் ஆண்டு குன்றத்தூர் அருகே குடும்பத் தகராறில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications