சீமானும், "சிவப்பு துண்டுக்காரரும்".. முழக்க பேச்சை முடியும் வரை கேட்டு கை குலுக்கிய செல்வராசு!
Recommended Video

திருவாரூர்: சீமானின் பிரச்சாரம் அனல் தெறிக்க நடந்து கொண்டிருந்தது.. ஆனால் கூட்டத்தில் வந்திருந்தவர்கள் கண்ணெல்லாம் அந்த சிவப்பு துண்டுகாரர் மீதே இருந்தது!
நாம் தமிழர் கட்சியின் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் மாலதி மற்றும் திருவாரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் வினோதினி ஆகியோரை ஆதரித்து திருவாரூரில் சீமான் பிரச்சாரம் செய்தார்.
பொதுவாக சீமான் கூட்டம் என்றாலே அரசியலையும் தாண்டி அனைவருமே வந்து கேட்பார்கள். நாடி நரம்புகள் புடைக்க சீமான் பேசுவதும், ஒரு கட்சி பாகுபாடு இன்றி எல்லோரையுமே கிழித்து தொங்க விடுவதையும், நாக்கை பிடுங்கி கொள்ளும் அளவுக்கு கேள்வி கேட்பதையும், தமிழக மக்கள் ரசித்து கேட்கவே செய்கிறார்கள். நாம் தமிழர் கட்சிக்கென்று தங்கள் ஆதரவினை முழுமையாக தர மனசில்லாவிட்டாலும், சீமான் பேச்சை பெரும்பாலும் குறை சொல்ல முடியாத நிலை!

செல்வராசு
அதனால்தானோ என்னவோ அந்த பிரச்சார கூட்டத்தில் நுழைந்தார் அந்த சிவப்பு துண்டுக்காரர்! அவர் வேறு யாருமில்லை.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்வராசுதான்.

கர்ஜனை
நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக இவரும் களத்தில் உள்ளார். திமுக கூட்டணியில் இப்போது கைகோர்த்துள்ள இவர், தன் கட்சி சார்பிலான பிரச்சாரத்தை முடித்துவிட்டு அந்த பக்கம் சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் திடீரென சீமானின் கர்ஜனை குரல் அவருக்கு கேட்டிருக்கிறது. வீட்டுக்கு சென்று கொண்டிருந்தவர், அப்படியே யூ-டர்ன் அடித்து சீமான் கூட்டத்துக்கு வந்துவிட்டார்.

கூட்டத்தினர் ஆச்சரியம்
முன்வரிசையில் வந்து அமர்ந்த செல்வராசு, சீமான் பேசுவதை உன்னிப்பாக கடைசிவரை கவனித்து கொண்டே இருந்தார். திமுகவை உண்டு இல்லை என்று கேள்வி கேட்டு குடைந்து கொண்டிருந்தார் சீமான். இதையும் செல்வராசு கவனித்து கொண்டுதான் இருந்தார். கூட்டத்தில் இருந்தவர்கள் ஒரு பக்கம் சீமானையும், மறுபக்கம் செல்வராசுவையும் பார்த்து கொண்டே இருந்தனர்!

பாராட்டு
கூட்டம் முடிந்தவுடன், முதல்வேலையாக மேடையில் ஏறி சீமானுக்கு கை கொடுத்தார். சீமானும் பதிலுக்கு கைகொடுத்து, செல்வராசு உடல்நலம் குறித்து விசாரித்தார். இதை அங்கிருந்த பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் எல்லோருமே கவனித்தனர். வியந்து உற்சாகமானார்கள்.

வேற்றுமை இல்லை
ரெண்டு பேருமே வேறு வேறு கட்சியை சேர்ந்தவர்கள்தான். அதிலும் பிரதான எதிர்க்கட்சியுடன் கூட்டணியில் இருப்பவர். இருந்தாலும் அரசியல் வேற்றுமை பார்க்காமல் இவர்கள் சந்தித்து கொண்டது வரவேற்கத்தக்கதாக இருந்தது.

மக்கி போகவில்லை
இந்த குணம் மற்ற கட்சி தலைவர்களுக்கோ, அல்லது வேட்பாளர்களுக்கோ வருமா என்று தெரியாது! ஆனால் அரசியல் நாகரீகம் மண்ணோடு மண்ணாக மக்கி போகவில்லை, அது இன்னும் எங்காவது துளிர்த்து கொண்டுதான் இருக்கிறது என்பது இதன்மூலம் நிரூபணமாகி உள்ளது.












Click it and Unblock the Notifications