தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது.. சட்டம் - ஒழுங்கு பற்றி பெருமையோடு சைலேந்திர பாபு பதில்
திருவாரூர்: தமிழ்நாடு என்பது பெரிய மாநிலம். ஒட்டுமொத்த அளவில் தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைவாகவும், தமிழ்நாடு அமைதி பூங்காவாகவும் இருக்கிறது என்று தமிழக அரசுக்கு ஆதரவாக ஓய்வு பெற்ற காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
தமிழக டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்றவர் சைலேந்திர பாபு. இவர் திருவாரூரில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றார். அங்கு சைலேந்திரபாபுவுக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

அதன்பிறகு தமிழ்நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு நிலவரம் பற்றி பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டனர். அதற்கு சைலேந்திர பாபு பதிலளித்தார்.
இந்த வேளையில் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛தமிழகத்தில் அரசு பள்ளியில் ஆசிரியர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனை எப்படி பார்க்கிறீர்கள்?'' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சைலேந்திர பாபு கூறியதாவது:
‛‛தமிழ்நாடு என்பது பெரிய மாநிலம். இங்கு ஏழரை கோடி முதல் 8 கோடி மக்கள் உள்ளனர். இந்தியா என்பது உலகளவில்மிகப்பெரிய நாடு. இப்போது பெருமளவு அமைதியாகவும், குற்றங்கள் ஓரளவு குறைவாகவும் தான் நம் நாட்டில் உள்ளது. இருந்தாலும் ஓரளவு அமைதி பூங்காவாக இருந்தாலும் கூட அவ்வப்போது சில குற்றங்கள் நடக்கிறது. ஒரு கொலை குற்றம் நடக்கலாம். கொலை முயற்சி நடக்கலாம்.
குறிப்பிட்ட தொழில் செய்யக்கூடியவர்களான டாக்டர், வக்கீல், ஆசிரியர் மீதான தாக்குதல்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொண்டே தான் இருக்கிறது. இது காவல்துறை தொடங்கிய காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. ஆனால் குற்றங்கள் நடந்த பிறகு காவல்துறை எந்த மாதிரியான நடவடிக்கை எடுத்தார்கள்? என்று பார்க்கும்போது தமிழ்நாடு காவல்துறை உடனடியாக எந்த தயக்கமும் இன்றி கைது செய்துள்ளார்கள். பல குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக குற்றம் செய்யும் ரவுடிகளை கண்காணித்து குற்றங்கள் செய்யாமல் தடுக்கவும் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரவுடிகளின் செயல்பாடுகளை கண்காணித்து குற்றங்கள் தடுக்கப்பட்டு வருகிறது. அதையும் மீறி சில சம்பவங்கள் நடக்கிறது. இதனால் சட்டம் - ஒழுங்கு கெட்டுப்போனது என்று நம்மால் சொல்லிவிட முடியாது. ஏனென்றால் பல சம்பவங்களை தடுத்து நிறுத்தி உள்ளார்கள். சில சம்பவங்கள் நடந்த உடனே நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
ஒட்டுமொத்த அளவில் தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைவாகவும், தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு சாதி கலவரமோ அல்லது மத கலவரமோ இல்லைவிட்டால் சங்கிலி பறிப்பு, தொடர் குற்றங்கள், வடமாநில கொள்ளையர்கள் பயங்கரமான கொள்ளையடித்தது, ரயில் கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் என்பது இல்லை. கிராமங்களில் கூட மோட்டார் சைக்கிள் திருட்டு, சங்கிலி பறிப்பு இருந்தாலே காவல்துறை உடனடியாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்கின்றனர்'' என்றார்.
தற்போது தமிழகத்தில் அடுத்தடுத்து பொதுவெளியில் குற்றங்கள் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சென்னை கிண்டி அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து டாக்டர் பாலாஜியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தினார். அதன்பிறகு தஞ்சாவூரில் அரசுப் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை ரமணியை, மதன் குமார் என்பவர் குத்தி கொன்றார். அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து வழக்கறிஞர் கண்ணன் வெட்டப்பட்டார். அதேபோல் மதுரையில் நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்து பாலியல் அத்துமீறலில் ஒருவர் ஈடுபட்டார். மேலும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தது, போலீசாரை சிறை பிடிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கிறது.
இதனால் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று பலரும் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். அதேபோல் எதிர்க்கட்சியினரும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசை விளாசி வருகின்றன. இத்தகைய சூழலில் தான் தமிழ்நாட்டில் குற்றங்கள் குறைவாக உள்ளது. மாநிலம் அமைதியாக இருக்கிறது என்று ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications