மாஜி அதிமுக அமைச்சரை தேர்தலில் வீழ்த்த திமுக தீவிரம்! நன்னிலத்தில் யார் பலம்? கேஎன் நேரு ஸ்கெட்ச்
திருவாரூர்: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையி்ல தான் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை ஈட்டி வரும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜை தேர்தலில் வீழ்த்த திமுக தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான காய்நகர்த்தலை திமுக தீவிரப்படுத்தி வரும் நிலையில் அதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவ உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, விஜயின் தவெக, சீமானின் நாம் தமிழர் இடையே போட்டி நிலவுகிறது.

வழக்கம்போல் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து களமிறங்குகிறது. விஜய் தன்னுடன் கூட்டணிக்கு வரும்படி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்னும் அவருடன் யாரும் கூட்டணியை உறுதி செய்யவில்லை.
மேலும் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவினாலும் கூட திமுக கூட்டணி - அதிமுக கூட்டணி - விஜயின் தவெக இடையே கடும் போட்டி நீடிக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரமாக்கி உள்ளது. இந்நிலையில் தான் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜை வீழ்த்த திமுக தீவிரம் காட்டி வருகிறது.
திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம், திருவாரூர் என 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் நன்னிலம் தொகுதியை தவிர மற்ற 3 தொகுதிகளிலும் திமுகவுக்கு எளிதாக வெற்றி வாய்ப்பு கிட்டிவிடுகிறது. ஆனால் நன்னிலம் தொகுதியில் மட்டும் திமுகவுக்கு எதிர்பார்த்த வெற்றிவாய்ப்பு கிட்டுவதில் சிக்கல் நீடிக்கிறது.
காரணம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜின் கிரவுண்ட் ஒர்க். இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் மாஜி அமைச்சர் காமராஜை வீழ்த்தி, நன்னிலத்தில் நம் பலத்தை காட்ட வேண்டும் என திமுக டெல்டா மண்டல தேர்தல் பொறுப்பாளரும், அமைச்சருமான கே.என்.நேரு நிர்வாகிகளை பம்பரமாக சுழல வைத்திருக்கிறார்.
காமராஜை எதிர்த்து களமிறங்க ஜோதிராமன் உள்ளிட்ட பலரும் ஆர்வம் காட்டினாலும், நன்னிலம் திமுக வடக்கு ஒன்றியச் செயலாளரும், முன்னாள் ராணுவ வீரருமான செல்வராஜ் எம்.எல்.ஏ. சீட் ரேஸில் முந்துகிறார்.
செல்வராஜை நன்னிலம் பகுதியில் கேப்டன் மற்றும் மீசை என்ற அடைமொழியோடு அழைப்பது குறிப்பிடத்தக்கது. இது கிராமப்புறங்களில் இவருக்கான விளம்பரமாகவும் பார்க்க முடிகிறது.
இதனிடையே தொடர்ந்து 4வது முறையும் வெற்றியை ஈட்ட வேண்டும் என்ற முனைப்புடன் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் இப்போதே களப்பணிகளை ஆரம்பித்துவிட்டார். இதனால் சபாஷ் சரியான போட்டி என்ற சொல்லாடலுக்கு ஏற்ப நன்னிலம் தொகுதியில் தேர்தல் ஜுரம் கொளுத்தி வருகிறது - அர்ஷத் கான்.












Click it and Unblock the Notifications