சிபில் ஸ்கோரில் வைத்த இந்தியன் வங்கி.. மனம் தளராமல் மாற்றி யோசித்த திருவாரூர் டிரைவருக்கு 3 லட்சம்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இந்தியன் வங்கியில் யாரோ ஒருவர் வாங்கிய கடனுக்கு, ஆட்டோ ஓட்டுநர் நாராயணன் என்பவரின் சிபில் ஸ்கோரை இந்தியன் வங்கி கை வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கடன் வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட நாராயணன் மனம் தளராமல் மாற்றி யோசித்தார். இதன் காரணமாக அதே இந்தியன் வங்கியிடம் 3 லட்சம் ரூபாய் வாங்க போகிறார்.. திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பார்ப்போம்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பத்மசாலவர் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவருடைய மகன் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். 46 வயதாகும் நாராயணன் ஆட்டோ ஓட்டுநர் ஆவார். இவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காந்தி சாலையில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் 2001 முதல் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறார். இவர், வேறொரு வங்கியில் புதிய ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் லோன் கேட்டு 2024ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி அன்று அணுகியிருக்கிறார். ஆனால் அப்போது அவரது சிபில் ஸ்கோர் குறைவாக இருப்பதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிபில் ஸ்கோர் குறைந்ததற்கு என்ன காரணம் என்று வங்கியில் விசாரித்த போது, அவர் சேமிப்பு கணக்கு வைத்துள்ள இந்தியன் வங்கி கிளையில் 2002ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதியில் மேலவாசல் இன்ப ராஜ் என்பவர் வாங்கிய ரூ.19 ஆயிரம் கடனுக்கு, நாராயணன் ஜாமீன்தாரராக கையெழுத்து போட்டதாகவும், அந்த கடனை இன்பராஜ் செலுத்தாததால் தற்போது அதன் நிலுவைத் தொகை ரூ.42 ஆயிரமாக உள்ளதாகவும், அதைக் கட்ட வேண்டிய பொறுப்பு நாராயணனுக்கு உண்டு என்று கூறினார்களாம். இதனால் தான் நாராயணனின் சிபில் ஸ்கோர் குறைந்துள்ளது என்றும் அந்த தொகையை செலுத்தினால் மட்டுமே அவரது சிபில் ஸ்கோர் உயரும் என்று இந்தியன் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இதை கேட்ட நாராயணன், தான் யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார். மேலும் வங்கி அதிகாரிகள் மீது 2025ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி அன்று திருவாரூர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2002ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதியில் மேலவாசல் இன்பராஜ் என்பவர் வாங்கிய 19 ஆயிரம் ரூபாய் கடன் தொடர்பான இந்தியன் வங்கியின் கடிதங்களை ஆராய்ந்து பார்த்தது. அதில் ஜமீன்தாரராக கையொப்பமிட்டது வேறு ஒரு என்.சீனிவாசன் என்பதும் அந்த சீனிவாசனின் விவரங்களுக்கு பதிலாக இந்த ஆட்டோ ஓட்டுநரான சீனிவாசன் மகன் நாராயணனின் ஆதார், பான் கார்டு உள்ளிட்ட விபரங்களை சிவில் நிறுவனத்துக்கு வங்கி பகிர்ந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.
இதனால், நாராயணனுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு கடனில் அவர் ஜாமீன் கையெழுத்து போட்டதாக சிபில் நிறுவனத்துக்கு தெரிவித்துவிட்டு, நீதிமன்றத்தில் அவ்வாறு எதுவும் செய்யவில்லை என்று பொய்யான தகவலைக் கூறியதாக இந்தியன் வங்கி நிர்வாகம் மீது புகார் எழுந்தது. இதையடுத்து என் நாரயாணணுக்கு பதில் சீ.நாராயணனின் சிபில் ஸ்கோரை இந்தியன் வங்கி குறைந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர் சி நாராயணனுக்கு 30 நாட்களுக்குள் நஷ்ட ஈடாக ரூ.3 லட்சம், வழக்கு செலவுத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இனிஷியல் பிரச்சனையால் வங்கி நிர்வாகம் மாற்றி சிபில் ஸ்கோரை குறைந்தது தெரியவந்ததும், மனம் தளராமல் நீதிமன்றத்தில் முறையிட்டதால் ஆட்டோ ஓட்டுநர் நாராயணனுக்கு 3 லட்சம் கிடைக்க போகிறது.












Click it and Unblock the Notifications