பாயிண்ட் டு பாயிண்ட்.. ராஜாவை வீழ்த்திய பாரதி பாஸ்கர்..கலைஞர் கோட்டம் திறப்பு விழா சுவாரஸ்யம்

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: கோலாகலமாக நடைபெற்று வருகிறது 'கலைஞர் கோட்டம்' திறப்பு விழா நிகழ்ச்சி. இன்று மாலை பீகார் முதல்வர் நிதிஷ்குமார், அதனைத் திறந்து வைக்க இருக்கிறார்.

அதற்கு முன்னதாகவே காலைமுதல் பல்வேறு நிகழ்ச்சிகள் வரிசையாக நடைபெற்று வருகின்றன. முதல்வர் ஸ்டாலின், காலை முதல் அனைத்து நிகழ்ச்சிகளிலும் மிக உற்சாகமாகப் பங்கேற்று வருகிறார்.

 kalaignar kottam inauguration function in thiruvarur

நிகழ்ச்சி நடைபெறும் அரங்கம் முழுவதும் தொண்டர்கள் நிரம்பி வழிகிறார்கள். அதுவும் கருணாநிதியின் சொந்த தொகுதி என்பதால், அவரது தொண்டர்கள் உணர்வுரீதியாக உத்வேகம் பெற்றுள்ளனர்.

இன்று அரங்கத்தில் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்ற நடைபெற்றது. 'மக்களைப் பெரிதும் கவர்ந்தது கலைஞரின் எழுத்தா? பேச்சா?' என்ற தலைப்பில் 6 பேர் கலந்துகொண்டு பேசினார்கள்.

 kalaignar kottam inauguration function in thiruvarur

'பேச்சு' அணியில் திருவாரூர் சண்முகவடிவேல், கவிதா ஜவஹர், ராஜா ஆகிய மூவரும், 'எழுத்து' அணியில் புலவர் ராமலிங்கம்,மாது, பாரதி பாஸ்கர் ஆகிய மூவரும் பேசினர்.

அதில் பாரதி பாஸ்கர் மற்றும் ராஜா ஆகிய இருவரின் பேச்சு மிகவும் ஹைலட் ஆக இருந்தது. இந்த இருவரும் இரண்டு எதிர் எதிர் அணியில் வழக்கம்போல் நின்று பேசினர்.

 kalaignar kottam inauguration function in thiruvarur

'பேச்சு' என்ற தலைப்பில் பட்டிமன்றம் ராஜா, "திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாக உருவானபோது மு.கருணாநிதிக்கு அண்ணாதுரை என்ன பதவிக் கொடுத்தார் தெரியுமா? பிரச்சார குழு உறுப்பினராகத்தான் பதவிக் கொடுத்தார்.

ஏனென்றால், கருணாநிதி புகழ்பெற்ற எழுத்தாளர் என்று அண்ணாவுக்கும் தெரியும். இருந்தும் அவர் பிரச்சாரக் குழுவில் தான் பதவிக் கொடுத்தார். பிரச்சாரக் குழு என்றால் என்ன? ஊர் ஊராகப் போய் பேசுவது. அதிலிருந்தே தெரியவில்லையா? எழுத்தைவிடக் கருணாநிதியின் பேச்சுதான் சிறந்தது என்று?

 kalaignar kottam inauguration function in thiruvarur

அவ்வளவு ஏன்? பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் பேச்சாலும், மறைமலையடிகள் பேச்சாலும், அறிஞர் அண்ணாவின் பேச்சாலும் ஈர்க்கப்பட்டுத்தான் நான் கருணாநிதி ஆனேன் என்று அவரே எழுதியிருக்கிறார். ஆக, கருணாநிதியை அரசியலுக்கு இழுத்து வந்ததே பேச்சு கலைதான்.

கருணாநிதியின் தந்தையார் முத்துவேலர் மரணப் படுகையில் இருக்கிறார். மருத்துவரை அழைப்பதற்குக் கருணாநிதி செல்கிறார். டாக்டர் வடிவேலு அந்நேரம் ஒரு மாநாட்டில் பேசிக் கொண்டிருக்கிறார்.

அதைப் பார்த்ததும் அப்படியே அமர்ந்துவிடுகிறார் கருணாநிதி. இவரைப் பார்த்ததும் மருத்துவர் மேடையில் வந்து பேசுங்கள் என்று அழைக்கிறார். அப்பா மரணப் படுக்கையில் கிடப்பதை அறிந்தும், அவர் மேடையில் ஏறிப் பேசுகிறார். அதிலிருந்தே அவருக்குப் பேச்சு எந்தளவுக்கு உயிராக இருந்தது என்பது உங்களுக்குப் புரியவில்லையா?

 kalaignar kottam inauguration function in thiruvarur

கருணாநிதிக்கு 1943 செப் 15 திருமணம். முடிந்த கையோடு ஒருவாரம் தொடர்ந்து மேடைப்பேச்சு. விடாமல் ஊர் ஊராகப் போய் பேசுகிறார். திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட 1949இல் உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. அதற்காகக் கருணாநிதி, சின்ன சின்ன வாகனங்களைப் பிடித்து ஊர் ஊராகப் போய் ஒவ்வொரு நாளும் 60 அல்லது 70 இடங்களை உறுப்பினர்களைச் சேர்ப்பதற்காகக் கூட்டங்களில் பேசியிருக்கிறார்.

இப்படிப் பேசிப் பேசி உறுப்பினர்களைச் சேர்த்து உருவாக்கிய கழகம்தான் திமுக. அது கருணாநிதியின் பேச்சால் வந்தது.

இது மட்டுமல்ல; 1951இல் சென்னையில் திமுகவின் முதல் மாநில மாநாடு. அதில் அண்ணாதுரையைத் தலைமையேற்கக் கருணாநிதி மேடைக்கு அழைக்கவேண்டும். அதை எப்படிப் பேசினார்?

'வாழ்வு மூன்றெழுத்து, அந்த வாழ்வுக்குத் தேவையான பண்பு மூன்றெழுத்து, அந்தப் பண்பில் பிறக்கின்ற அன்பு மூன்றெழுத்து, அன்பிலே சுரக்கும் காதல் மூன்றெழுத்து, காதல் விளைவிக்கும் வீரம் மூன்றெழுத்து, வீரர்கள் செல்லும் களம் மூன்றெழுத்து, களத்தில் பெறும் வெற்றி மூன்றெழுத்து , வெற்றிக்கு நம்மை எல்லாம் அழைத்துச் செல்கின்ற அண்ணா மூன்றெழுத்து' என்று பேசினார். அந்தப் பேச்சுதான் இன்றுவரை அவரது தொண்டர்களின் உயிர்மூச்சாக இருக்கிறது.

மேடையிலே கருணாநிதி பேசிய பேச்சுகளை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகம் போட்டிருக்கிறார். அந்தப் புத்தகத்திற்கு அவரே கொடுத்த தலைப்பு 'மேடையில் வீசிய மெல்லிய பூங்காற்று'. இது வள்ளல்பெருமானின் வரிகள். இதற்கு எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்றைச் சொல்கிறேன். அவர் பேசிய பேச்சுக்களை ஒலி வடிவில் கேட்பதற்கு மட்டும் நமக்கு 4 ஆயிரம் மணி நேரம் ஆகும். அந்தளவுக்கு அவரது பேச்சு காற்றில் கலந்து உலாவருகிறது.

கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லி விடைபெறுகிறேன். முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதன்முதலாகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தொகுதி குளித்தலை. 1957இல் அவர் நாகப்பட்டினத்தில் போட்டியிட வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். ஆனால், கட்சியில் இருப்பவர்கள் செய்த செயலால் அவர் குளித்தலைக்கு மாற்றப்பட்டார்.

அன்றைக்குக் குளித்தலை எப்படி இருந்தது என்று தனது சுயசரிதையான 'நெஞ்சுக்கு நீதி'யில் கருணாநிதி எழுதுகிறார். 'அன்றைக்கு மகாத்மா காந்தி சுடப்பட்டார் என்ற செய்தியைக் கூட தெரியாத மக்கள் அங்கே இருந்தனர்' என்கிறார். காந்தி சுடப்பட்டது 1948இல்.

ஒன்பது வருடங்கள் கழித்து குளித்தலையில் தேர்தல். அப்படி என்றால் மக்களின் விழிப்புணர்வு எந்தளவுக்கு அத்தொகுதியிலிருந்திருக்கிறது பாருங்கள். அந்தத் தொகுதியில் பெட்ரோமாக்ஸ் விளக்கை வைத்துக் கொண்டு வீதி வீதியாகப் போய் பேசி இருக்கிறார் கருணாநிதி. அந்தத் தேர்தலில் 47 ஆயிரத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகின. அதில் செல்லாத வாக்குகள் வெறும் நான்கு.

காந்தி சுடப்பட்டதையே அறியாத மக்களிடம் எப்படி ஓட்டுப் போடவேண்டும்? யாருக்கு ஓட்டுப் போடவேண்டும்? எதற்காக ஓட்டுப் போடவேண்டும் என்று பேசிப் பேசிய புரியவைத்தவர் கருணாநிதி. 1967இல் அண்ணாதுரையின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பொறுப்பு ஏற்ற பிறகு கருணாநிதி, திருவாரூரில் வந்து பேசினார். அந்தப் பேச்சு மிகவும் பிரசித்தி பெற்றது. ஆகவே இறுதியாக அதைக் குறிப்பிட்டுச் சொல்கிறேன்.

"தெருவெல்லாம் விளையாடும் குழந்தை, மாலையில் கடைசியில் தாயில் மடியில் வந்து தவழ்வதைப் போல, காலம் எல்லாம் போர்க்களம் காணும் வீர வாள் கடைசியில் உறைக்குள் போய் அமைதி பெறுவதைப்போல நான் திருவாரூர்க்கு வந்திருக்கிறேன்.

தாய் வீட்டுக்கு ஏங்கும் மணப்பெண் போல திருவாரூரோடு எனக்கு ஒரு பிணைப்பு இருக்கிறது. ஒரு மேடைப்பேச்சாளனாக, பத்திரிகையாளனாக, எழுத்தாளனாக நான் பயிற்சி பெற்றது இந்தத் திருவாரூரில்தான்" என்றார்.

அவர் அமைச்சராகி முதன்முதலாக ஊர். அந்த ஊரில் அவருக்குக் கோட்டம் எடுக்கின்ற முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக் கூறி, என்றைக்கும் கருணாநிதியின் பேச்சுதான் நிற்கும். அவரது காந்த குரலுக்கு உலகத்தில் நிகரில்லை என்று கூறி விடைபெறுகிறேன்" என்கிறார்

அடுத்ததாக 'எழுத்து' என்ற அணியில் பேச வந்த பாரதி பாஸ்கர், "பேசிப் பேசி உருவாக்கிய இயக்கம் திமுக என்று ராஜா சொன்னார். ஒரு இயக்கத்தை ஒருவர் மட்டுமே பேசிப் பேசி வளர்த்துவிட முடியாது. காலந்தோறும் பேசுகின்ற பேச்சாளர்கள் இருந்தால்தான், சித்தாந்தங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் கொண்டுபோக முடியும். அப்படிப்பட்ட பேச்சாளர்கள், கருணாநிதியின் எழுத்தைப் படித்ததால்தான் பேச்சாளர்களாகவே ஆக முடிந்தது. இது உண்மையா இல்லையா?

ராஜாவே குளித்தலை அன்றைக்கு எப்படி இருந்தது என்பதை 'நெஞ்சுக்கு நீதி'யைப் படித்துத்தான் தெரிந்து கொண்டிருக்கிறார். வரலாற்றை எழுத்தின் மூலம்தான் அறிந்து கொள்ளமுடியும். ஆக, எழுத்துதான் காலம் கடந்து வாழும். பேச்சு காற்றில் கரைந்துபோய்விடும். அதைத்தான் நாங்கள் சொல்கிறோம்.

அண்ணாதுரைக்குப் பிறகு வசன இலக்கியமென்பது கருணாநிதியால்தான் உருவாக்கப்பட்டது. வசன இலக்கியம் என்ற ஒன்று வந்தபிறகு அது இவ்வளவு ஆதரவாளர்களைப் பெற்றது. 50வயதைக் கடந்தவர்களில் 'பராசக்தி' வசனத்தைப் பேசத் தெரியாதவர் என்று ஒருவர் கூட இருக்கமுடியாது.

1954இல் 'மனோகரா' படத்தைப் பார்த்துவிட்டு, கல்கி ஒரு விமர்சனம் எழுதுகிறார். அந்த விமர்சனத்தில் அவர், 'தமிழ் மொழியை ஒருவரால் இப்படிக் கையாள முடியும் என்று இதுவரை நான் நம்பியதில்லை' என்கிறார். அந்த எழுத்து இலக்கியத்தின் மூலமாகத்தானே இத்தனைப் பேர் ஈர்க்கப்பட்டார்கள்?

கடந்த 2022 ஆம் ஆண்டு, webster dictionary ஆனது Gaslighting என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்தது. அந்தச் சொல்லைப் பலபேர் பயன்படுத்தியுள்ளனர். எனக்கு அந்தச் சொல்லுக்குப் பொருள் புரியவில்லை. நான் போய் தேடிப்பார்த்தேன். ஒரு கணவன் தனது மனைவியை அல்லது காதலன் தனது காதலினை தன்னைத்தானே பைத்தியம் என்று நம்ப வைப்பதற்குப் பெயர்தான் Gaslighting என்று அர்த்தம்.

இதற்கு உதாரணம் சொல்ல முற்படும் தமிழ் விக்கி சொல்கிறது, 'ரங்கூன் ராதா படத்திலே கதாநாயகனாக வருகின்ற சிவாஜி கணேசன், கதாநாயகியான பானுமதிக்குச் செய்கின்ற காரியம் இதுதான்' என்று குறிப்பிடுகிறது.

நான் உடனே அந்தப் படத்தைத் தேடிப்போய் பார்த்தேன். தொடர்ந்து தன்னுடைய கணவனால் சித்திரவதை செய்யப்படுகின்ற பெண்ணாக அதில் பானுமதி நடிக்கிறார். அதில் ஒரு வசனம், 'அத்தான் குத்திக் குத்திக் குத்தி ஒரு புழுவைப் புலியாக்கி விடாதீர்கள்' வருகிறது. என்ன அபாரமான வசனம். புழுவைக்குத்தினால் சாகும் என்பது நமக்குச் சொல்லப்பட்டது.

ஆனால், புழுவைத் திரும்பத் திரும்பக் குத்தினால் புலியாகிவிடும் என்று ஒரு பெண்ணைப் பேச வைத்தார் என்றால், அதுதான் வசன இலக்கிய உலகத்தில் கருணாநிதி வென்ற இடம்.

அதனால், அவரால் ஈர்க்கப்பட்டு இயக்கத்திற்குள் வந்தார்கள். 4 மணிநேரம் அவரது பேச்சு இருக்கிறது. ராஜா சொன்னார். அதை முழுமையாக யாராலும் கேட்கமுடியாது. இன்றைக்கு இருக்கிறவர்களைத் தாண்டி நாளைக்கு வரப்போகின்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், கருணாநிதி எழுத்தினால்தான் அது சாத்தியமாகும்.

இறுதியாகத் தீர்ப்பு வழங்க வந்த சாலமன் பாப்பையா, " 'மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்தது முத்தமிழறிஞர் கலைஞரின் எழுத்தா? பேச்சா? ' என்பதுதான் தலைப்பு. கவர்ந்தது என்று சொல் தமிழ் இலக்கணம் இறந்தகாலத்தைக் குறிக்கிறது. ஒரு அணியினர் 4 ஆயிரம் மணிநேரம் அவரது பேச்சுக்கள் உள்ளது என்றார்கள். பல ஆயிரம் பக்கங்களில் அவரது எழுத்து இருக்கிறது என்று மற்றொரு அணியினர் சொன்னார்கள். எழுத்து என்பது வாங்கிப் படிப்பதற்கானது.

தமிழ்நாட்டில் 1961இல் இருந்த படிப்பாளிகளின் எண்ணிக்கை 100க்கு 39 பேர். அன்றைக்கு இவர்களில் எத்தனைப் பேர் புத்தகம் வாங்கிப் படிக்கக் கூடியவர்களாக இருந்திருப்பார்கள்? ஆக, கருணாநிதி புத்தகம் எழுதியதே எதிர்காலத் தமிழர்கள் அதை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தத்தான். அதனால்தான், கருணாநிதிக்கு மெரினாவில் பேனாவை நினைவுச்சின்னம் வைக்கிறோம்.

அவரது காலத்தில் யார்தான் பேசவில்லை. பெரியார் பேசினார். அண்ணா பேசினார். நெடுஞ்செழியன் பேசினார். சம்பத் பேசினார். கண்ணதாசன் பேசினார். நாஞ்சில் மனோகரன் பேசினார். அன்று யார்தான் பேசவில்லை? பேசிப் பேசி வளர்ந்த இயக்கம் இது. 'நா'வால் வளர்ந்த இயக்கம் திமுக.

ஆனால், சாதாரணமான மக்களை, பாட்டாளி மக்களை ஒடுக்கப்பட்ட மக்களின் உள்ளங்களைப் பேச்சால் உசுப்பியவர் உலுப்பியவர் என்று சொன்னால் அது கருணாநிதிதான். அன்றைய மக்களை அவரது பேச்சுதான் பெரிதும் கவர்ந்தது. நாளைய தமிழர்களைக் கவரப் போவது அவரது எழுத்துக்கள்தான். ஆயினும் கவர்ந்தது என்றால் பேச்சுக்கள்தான் என்று கூறி தீர்ப்பளிக்கிறேன்" என்கிறார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+