தங்கம் இன்னைக்கு விக்கிற விலையில்.. நகை போட்டுக்கிற எல்லாரும் சூதானமா இருங்க! டிஎஸ்பி அறிவுரை
திருவாரூர்: தங்க நகைகளை பொது வெளியில் அதிகம் அணிய வேண்டாம் என்றும், அப்படி அணிந்திருப்பவர்கள் செயின் பறிக்கும் கொள்ளையர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் திருவாரூர் நன்னிலம் டிஎஸ்பி சரவணன் அறிவுறுத்தியுள்ளார்.
திருவாரூர் மாவட்டம் முடிகொண்டான் அருகே உள்ள தென்குடியில் வசித்து வரும் ஓவியர் அப்பு வர்மா ஓவியம் மற்றும் சிற்பக்கலை போன்றவற்றை அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பயிற்றுவித்து வருகிறார். இவர் உலகப் புகழ்பெற்ற ஓவியரான ராஜாரவி வர்மாவின் மீது கொண்டுள்ள ஈர்ப்பின் காரணமாக வருடம் தோறும் அவரது பிறந்தநாள் மற்றும் நினைவு நாளை அனுசரித்து வருகிறார்.

இந்த நிலையில் ஓவி ராஜா ரவிவர்மாவின் 177 வது பிறந்த நாளை முன்னிட்டு இவரது அப்பு வர்மா ஆர்ட் கேலரி சார்பில் சிறப்பாக தென்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு ஓவியம் யோகா சிலம்பம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியினை நன்னிலம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் தொடங்கி வைத்தார்.
இதில் மாணவர்கள் யோகாசனம், பத்மாசனம், சூர்ய நமஸ்காரம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்து காண்பித்தனர். இதேபோன்று மாணவர்கள் ஓவியப் போட்டியில் பாரதியார், சிவபெருமான், ரவிவர்மா உள்ளிட்ட பல்வேறு ஓவியங்களை வரைந்து அசத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் சிறப்பு பரிசுகள் அப்பு வர்மா கேலரி சார்பில் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய டிஎஸ்பி சரவணன், "இந்த நிகழ்ச்சிக்கு தாய்மார்கள் அதிகம் வந்திருக்கிறீர்கள். இதில் எவ்வளவு பேர் தங்க நகைகளை அணிந்து இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. தங்க நகைகளை மிகவும் பாதுகாப்பாக அணிய வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும்போது ஜாக்கெட்டுடன் ஊக்கு சேர்த்து நகைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது செயின் பறிப்பில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் வெளி மாவட்டங்களில் இருந்து வருகிறார்கள். எங்கு சென்றாலும் செயின் பறிப்பில் ஈடுபடுகிறார்கள். அதேபோன்று குழந்தைகளுக்கு தங்க நகைகளை அணிவித்தாலும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தங்கம் விற்கிற விலையில் நகைகளை அணிபவர்கள் அதனை சூதானமாக பார்த்துக் கொள்ள வேண்டும். நகை பறி போன பின்பு காவல் நிலையத்தில் வந்து அழுவதில் பயனில்லை” என்று பேசினார்.
செயின் பறிப்பின்போது செயினை பறிகொடுப்பவர்களுக்கு பலத்த காயம் ஏற்படுகிறது. எனவே, இதனை தடுக்க பொதுவெளியில் செல்லும்போது தங்க நகைகளை அணிவதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications