குப்பையில் கிடந்த 20 பவுன்! பத்மாவை போல் நேர்மையாளர் துரை! திருவாரூர் தூய்மை பணியாளரின் தூய உள்ளம்!
திருவாரூர்: திருவாரூரில் தனது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த 20 பவுன் நகை, 1 கிலோ வெள்ளியை பெண் ஒருவர் தவறவிட்ட நிலையில் அதை தூய்மை பணியாளர் ஒருவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் துரை. இவர் திருவாரூர் நகராட்சித் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். வழக்கம் போல் இன்று காலை தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு ஒரு பை இருப்பதை கண்டார்.

அதில் ஏதோ இருப்பதை உணர்ந்த அவர், அதை பிரித்து பார்த்து அதிர்ந்து போனார். அதில் 20 பவுன் தங்க நகையும் 1 கிலோ வெள்ளியும் இருந்தது. அதை பார்த்ததும் அவருக்கு கையும் ஓடலை காலும் ஓடலை!
இதையடுத்து அந்த நகையை பார்த்ததும் சற்றும் சபலப்படாத துரை, உடனே அவற்றை எடுத்துக் கொண்டு திருவாரூர் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து போலீஸார் , துரையை வெகுவாக பாராட்டினர்.
போலீஸ் விசாரணையில், சென்னையில் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக ராதாகிருஷ்ணன் என்பவர் அவரது குடும்பத்தினருடன் வந்திருந்தனராம். அப்போது அவர்கள் 20 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளியை தவறவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து ராதாகிருஷ்ணன் குடும்பத்தினரும் திருவாரூர் நகர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில்தான் துரை, அந்த நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையறிந்த ராதாகிருஷ்ணன் குடும்பத்தினர், துரையை அழைத்து நன்றி தெரிவித்தனர்.
மேலும் ராதாகிருஷ்ணன், தனது மகளின் திருமணத்திற்காக சிறுக சிறுக சேர்த்து வைத்த நகைகளாம். இந்த நகைகள் கிடைத்ததும் அவரது மனைவி ஆனந்தத்தில் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை நெகிழ செய்தது.












Click it and Unblock the Notifications