தண்ணீரின்றி கருகும் நாற்றுக்கள்.. கண்ணீரில் திருவாரூர் விவசாயிகள்.. டிராக்டர் வைத்து அழித்து வேதனை
திருவாரூர்: சரியான அளவில் மழை பெய்யாத காரணத்தினாலும் காவிரி நீர் வந்து சேராத காரணத்தினாலும் திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி நாற்றுக்கள் கருகத் தொடங்கியுள்ளன. திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீர் இன்றி கருகி வரும் குறுவை நெற்பயிர்களை கண்டு விரக்தி அடைந்த விவசாயி, அவற்றை டிராக்டர் கொண்டு அழித்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட்டது. அணை திறக்கப்பட்ட நாளில் இருந்து தினசரியும் விநாடிக்கு 10ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 165 கனஅடியாக மட்டுமே உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாகவே உள்ளதால் தற்போது 67 அடியாக மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்துள்ளது.

கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள காவிரி நீர் வந்து சேர சில நாட்கள் ஆகி விடும். பருவமழையும் கை கொடுத்தால் மட்டுமே பயிர் செய்யப்பட்ட நெல் நாற்றுக்கள் தப்பிக்க முடியும். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல ஊர்களில் நடவு செய்யப்பட்ட நெல் நாற்றுக்கள் கருகத் தொடங்கியுள்ளன.
இதனிடையே ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரை நம்பி மணலி, பரப்பாகரம் கிராமத்தில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் நேரடி விதைத்தெளிப்பு மூலம் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்தனர். ஆனால் கிராமத்தில் உள்ள குளம், குட்டைகளில் இதுவரை தண்ணீர் நிரம்பவில்லை. அண்மையில் பெய்த லேசான மழையின் காரணமாக பயிர்கள் முளைக்க தொடங்கின. ஆனாலும் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நேரத்தில் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வராததால் நெற்பயிர்கள் கருக தொடங்கின.
இதனால் மனவேதனை அடைந்த விவசாயிகள், குறுவை சாகுபடி பயிர்களை டிராக்டர் மூலம் உழுது அழித்தனர். ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், பயிர்களை காப்பாற்ற முடியவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். முறை வைத்து தண்ணீர் விட்டாலும் தங்கள் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்பது விவசாயிகளின் புகாராக உள்ளது. தமிழக அரசு தங்கள் பகுதியை வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications