திருவாரூரில் திருமண நாளில் மாயமான காதலன்.. காதலியிடம் ஒப்படைத்த போலீஸ்.. இறுதியில் சுவராஸ்யம்
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தா என்ற பெண்ணும், புதுக்கோட்டையைச் சேர்ந்த சஞ்சய்குமார் என்பவரும் காதலித்து வந்துள்ளார்கள். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அந்த வாலிபர் சஞ்சய்குமார் திடீரென மாயமானார். அவரை தேடிக்கண்டுபிடித்து காதலியிடம் போலீசார் ஒப்படைத்தனர் அவர்களுக்கு திருத்துறைப்பூண்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் திருமணம் நடந்தது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் என்ற கிராமத்தைச் சேர்ந்த அமிர்தாவுக்கு 30 வயது ஆகிறது. அமிர்தா எம்.எஸ்சி.படித்துள்ளார். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா மாத்தூரை சேர்ந்த சஞ்சய்குமாருக்கு 32 வயது ஆகிறது.இவர் பி.பி.ஏ. படித்துள்ளார்கள். இவர்கள் 2 பேரும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்கள். ஆனால் சஞ்சய்குமார் வீட்டில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இருவரும் வேறு வேறு சமூகம் என்பதால் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.

ஆனால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சஞ்சய்குமார் குடும்பத்தை சேர்ந்த சிலரும், அமிர்தாவின் குடும்பத்தாரும் கலந்து பேசி 27.8.2025 அன்று (நேற்று) கோவிலில் வைத்து சஞ்சய்குமார்- அமிர்தா திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்தார்கள். இதற்காக அழைப்பிதழும் அச்சடிக்கப்பட்டு திருமண வேலைகள் முழுவீச்சில் நடந்து வந்தன. ஆனால் திருமண நாளான நேற்று மணமகன் சஞ்சய்குமாரை திடீரென மாயமானார்.
இதுதொடர்பாக அமிர்தாவின் சகோதரர்கள் திருவாருர் மாவட்ட எஸ்பியிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மாத்தூர் கிராமத்துக்கு சென்று விசாரித்தனர். நேற்று அதிகாலை கமுதியில் உள்ள உறவினர்கள் வீட்டில் சஞ்சய்குமார் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர். அங்கிருந்து அவரை போலீசார் அழைத்து வந்து அவருடைய காதலி அமிர்தா வீட்டில் ஒப்படைத்தார்கள். இதையடுத்து திருத்துறைப்பூண்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நேற்று மதியம் சஞ்சய்குமாருக்கும், அமிர்தாவுக்கும் முறைப்படி திருமணம் இனிதே நடந்தது.
திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று இருவரும் தஞ்சம் அடைந்தனர். அங்கு மணமக்கள் அளித்த புகாரில், 'வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதன் காரணமாக திருமணத்துக்கு எதிர்ப்பு உள்ளதால் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்' என்று கூறினார்கள். போலீசார் புகாரை பெற்றுக்கொண்டு இருதரப்பையும் அழைத்து சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சண்முகம் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, 'தமிழகத்தில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்துகொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகங்களை பயன்படுத்தலாம் என்றும், காதல் திருமணங்கள் நடத்திக் கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார்.அதன்படியே திருத்துறைப்பூண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் காதல் ஜோடியின் திருமணம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications