“40க்கு 40ன்னா உங்களுக்கு தேர்தல் ரிசல்ட்.. ஆனால் விவசாயிகளுக்கு.." தவெக விஜய் ஆவேச பேச்சு
திருவாரூர்: "டெல்டா விவசாயிகளிடம் இருந்து கமிஷன் பறிக்கிறார்கள். சிஎம் சார் உங்களுக்கு வேண்டுமென்றால் 40க்கு 40 என்றால் அது தேர்தல் ரிசல்ட்டாக இருக்கலாம். டெல்டா பகுதி மக்களைப் பொறுத்தவரை 40க்கு 40 என்றால் நீங்கள் அவர்கள் வயிற்றில் அடித்து வாங்கிய கமிஷன்" என தவெக தலைவர் விஜய் திருவாரூர் பிரச்சாரக் கூட்டத்தில் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
தவெக தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார் விஜய். இன்று பிற்பகல் தொண்டர்கள் படை சூழ நாகையில் விஜய் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

நாகை மாவட்டத்தைத் தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்திற்குச் சென்றுள்ளார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். இன்று நாகப்பட்டினம், திருவாரூரில் மக்களைச் சந்தித்து வருகிறார்.
இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை தனி விமானத்தில் திருச்சி விமான நிலையம் சென்ற அவர், அங்கிருந்து கார் மூலம் நாகப்பட்டினம் சென்றார். நாகப்பட்டினம் புத்தூர் ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே தொண்டர்கள் மத்தியில் பேசினார். முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம், நாகை மாவட்டத்தில் உள்ள பிரச்சனைகள், மீனவர்கள் விவகாரம் குறித்துப் பேசினார் விஜய்.
இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார் விஜய். மக்கள் வெள்ளத்தில் ஊர்ந்தபடி மெதுவாகச் சென்றது விஜய்யின் பிரச்சார வாகனம். திருவாரூக்கு வந்த விஜய்க்கு தொண்டர்கள் ஆரவாரம் அளித்தனர். மேலும், கிரேன் மூலம் விஜய்க்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். வாகனத்தின் மீது ஏறி தொண்டர்கள் அளித்த மாலை மரியாதையை விஜய் ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு பிரசாரம் செய்யவுள்ள இடத்திற்கு மீண்டும் புறப்பட்டார். கமலாய தெப்பக்குளம் அருகே மக்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார் விஜய்.
விஜய் பேசுகையில், "திருவாரூர் என்றால் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் தான் மனதிற்கு வரும். நீண்ட நாள் ஓடாமல் இருந்த தேரை ஓட வைத்தது நான் தான் என ஒருவர் பெருமையாக பேசி வந்தார். ஆனால் அவருடைய மகன் ஸ்டாலின், நல்லா ஓட வேண்டிய தமிழ்நாட்டு தேரை நான்கு புறம் கட்டைய போட்டு அப்படியே நிப்பாட்டிட்டாரு.
திருவாரூர் மாவட்டம் தான் அவருடைய சொந்த மாவட்டம் என பெருமையா சொல்லிக்கிறாங்க. ஆனால் திருவாரூர் கருவாடா காயுது. உங்க அப்பா பேர்ல பேனா வைக்கணும்னு சொல்றீங்க. எல்லா இடத்துக்கும் உங்க அப்பா பேர வைக்கிறீங்க. உங்க அப்பா பிறந்த திருவாரூரில் அடிப்படை சாலை வசதி கூட சரியா இல்லையே சிஎம் சார்.
திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கே வைத்தியம் பார்க்கணும் போல இருக்கு. இங்கு உள்ள மருத்துவக் கல்லூரியில் எல்லா உபகரணங்களும் வேலை செய்கிறதா? திருவாரூர் பல்கலைக்கழகத்தில் எல்லா துறையும் இருக்கா? இருக்காதே.. உங்களுடன் ஸ்டாலின் என்பதை உங்க குடும்பத்துக்கு மட்டும் தான் சொல்லிக்கணும்.
டெல்டா விவசாயிகள் கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். டெல்டா விவசாயிகளிடம் இருந்து கமிஷன் பறிக்கிறார்கள். நெல்கொள்முதலில் லஞ்சம் பெறப்படுகிறது. ஒரு மூட்டைக்கு ரூ. 40 கமிஷன் பெறப்படுகிறது.
இதை வேறு யாராவது சொல்லி இருந்தால் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் இதை என்னிடம் சொன்னதே விவசாயிகள் தான்.
விவசாயிகள் பொய் சொல்ல மாட்டார்கள். சிஎம் சார் உங்களுக்கு வேண்டுமென்றால் 40க்கு 40 என்றால் அது தேர்தல் ரிசல்ட்டாக இருக்கலாம். டெல்டா பகுதி மக்களைப் பொறுத்தவரை 40க்கு 40 என்றால் நீங்கள் அவர்கள் வயிற்றில் அடித்து வாங்கிய கமிஷன்" என விஜய் ஆவேசமாகப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications