திமுக கூட்டணியில் பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை! ஸ்டாலின் சந்திப்புக்கு முன் துணிந்து கூறிய திருமா

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: மதுவிலக்கை பேசுவதால் கூட்டணியில் விரிசல் வந்தாலும், பாதிப்பு வந்தாலும் அதனை எதிர்கொள்ள விடுதலை சிறுத்தைகள் தயாராக இருக்கிறோம் என்று அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். இன்று முதல்வர் ஸ்டாலினை, திருமாவளவன் சந்தித்து பேச உள்ள நிலையில் அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ‛மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு' நடைபெற உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தற்போது திமுக கூட்டணியில் உள்ள நிலையில் இந்த மாநாடு நடத்தும் விவகாரம் விவாதமானது.

thirumavalavan vck dmk

இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்தித்த திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டில் அதிமுகவும் பங்கேற்கலாம் என்று அழைப்பு விடுத்தார். திமுக கூட்டணியில் இருந்தபடியே திருமாவளவன் அழைப்பு விடுத்தது பெரும் பரபரப்பானது.

அதன்பிறகு திருமாவளவன், ஆட்சி அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று பேசிய வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இது சர்ச்சையான நிலையில் அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி அட்மின் அந்த வீடியோவை பதிவிட்டு நீக்கியதாக திருமாவளவன் தெரிவித்தார். அதன்பிறகு நீக்கப்பட்ட வீடியோ தொடர்பான முழு பேச்சையும் திருமாவளவன் மீண்டும் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். இதனால் திமுக - விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்துள்ளது.

இதற்கிடையே தான் முதல்வர் ஸ்டாலினை இன்று திருமாவளவன் சென்னையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இத்தகைய சூழலில் தான் தற்போது திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் இன்னொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதாவது விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கும், ‛மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு' குறித்து திருவாரூரில் நேற்று மண்டல சிறப்ப செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் திருமாவளவன் பங்கேற்று பேசினார். அப்போது அவர் மதுவிலக்கை பேசுவதால் கூட்டணியில் விரிசல் வந்தாலம், பாதிப்பு வந்தாலம் அதனை எதிர்கொள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தயாராக இருக்கிறோம் என்று அந்த வீடியோவில் திருமாவளவன் சொல்கிறார்.

இதுதொடர்பாக திருமாவளவன் கூறியதாவது: தேசிய மதுவிலக்கு கொள்கையை ஏன் திமுக வலியுறுத்த கூடாது? அதிமுக ஏன் வலியுறுத்த கூடாது? காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகள் ஏன் இதனை ஒரு தேசிய கொள்கையாக கொண்டு வரக்கூடாது?. இதுதான் விடுதலை சிறுத்தைகள் எழுப்பும் கேள்வி. இதுபோன்ற தூய்மையான நோக்கத்தை தேவையில்லாத விஷயங்களுடன் முடிச்சிப்போட்டு அவமானப்படுத்த வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.

சரி, இப்படி பேசுவதால் திமுக உங்களை தப்பாக நினைக்காதா? கூட்டணியை முறிந்து விடுவீர்களா சார்? உங்களின் நோக்கம் என்ன? என்று ஊடகங்களில் கேட்கிறார்கள். நான் அதனை பற்றி எந்த கணமும் யோசித்தது இல்லை. மது ஒழிக்கப்பட வேண்டும் என்பது மட்டும் தான் எனது கோரிக்கை. இந்த கோரிக்கையால் அரசியலில் எந்த பாதிப்பு வந்தாலும் அதனை எதிர்கொள்ள விடுதலை சிறுத்தைகள் தயாராக இருக்கிறோம்.

இதனை தூய்மையாக சொல்கிறோம். உள்ளத்தூய்மையோடு சொல்கிறோம். எனக்கு எந்தவித டென்ஷனும் இல்லை. இப்படி பேசுவதால் தேர்தல் அரசியல், கூட்டணி உறவுகளில் பிரச்சனைகள் வரலாம். பாதிப்புகள் வரலாம். பின்னடைவுகள் வரலாம். நாங்களும் கட்சி தொடங்கி உள்ளோம். 4 எம்எல்ஏக்கள் வைத்துள்ளோம். 2 எம்பிக்கள் வைத்துள்ளோம். மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளோம். இது ஜனநாயகத்தில் நம்பிக்கை ஊட்டக்கூடிய ஒரு வாய்ப்பு.

எங்களை பொறுத்தவரை தேர்தல் சமயத்தில் தான் அதுதொடர்பாக முடிவு செய்வோம். இந்த பாயிண்டை அடிக்கோடிட்டு குறித்து கொள்கிறோம். இப்போது நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம். திமுக கூட்டணியில் இருப்பதாக நம்புகிறோம். திமுக கூட்டணியில் தொடர்வோம் என்றும் நாங்கள் நம்புகிறோம். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு.. கடைசி மனிதனுக்கும் சனநாயகம். எளிய மக்களுக்கும் அதிகாரம் வேண்டும். திருமாவளவன் பயந்துட்டாரு என்று எங்களை பயமுறுத்த யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நாங்கள் ஏன் பயப்படுகிறோம்'' என்றார்.

மதுவிலக்கை வலியுறுத்துவதால் கூட்டணியில் பிரச்சனை, பாதிப்பு வந்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தயாராக இருக்கிறது என்று தற்பாது திருமாவளவன் உறுதியாக சொல்லி உள்ளதன் மூலம் திமுகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+