2026ல் கூட்டணி ஆட்சி? "வந்தார், கண்டார், வென்றார்.." சற்றும் யோசிக்காமல் ஹெச் ராஜா தந்த பதில்
திருவாரூர்: தமிழ்நாட்டில் அதிமுக பாஜக கூட்டணி அமைந்துள்ள நிலையில், 2026ல் கூட்டணி ஆட்சி அமையுமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதற்கிடையே திருவாரூரில் பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாஜகவின் ஹெச் ராஜாவிடம் இது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் முக்கிய பதிலை அளித்துள்ளார். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டையில் பாஜக சார்பில் வக்பு வாரிய திருத்தச் சட்டம் குறித்த விளக்கக் கூட்டம் மற்றும் பஹல்காம் தீவிரவாத தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் நேற்று நடந்த இந்த கூட்டத்தில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஹெச் ராஜா பிரஸ் மீட்
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் ஹெச் ராஜா, "ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. இதை நாட்டு மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் தேசியக் கொடி அணிவகுப்பை நடத்தி வருகிறோம். தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுக்க இந்த பேரணியை நடத்தி வருகிறோம்.
ஆனால், துரதிஷ்டவசமாக திருவாரூரில் மட்டும் இந்த பேரணிக்கு மாவட்ட போலீசார் அனுமதி தரவில்லை. இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருக்கிறது. இந்த பேரணி கட்சி சார்பானது இல்லை. அனைத்து கட்சிகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுத்திருந்தோம். தேசியக் கொடியை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்காதது கண்டிக்கத்தக்கது.
வக்பு வாரியம்
வக்பு வாரிய திருத்தச் சட்டம் குறித்து தொடர்ச்சியாக எஸ்டிபிஐ போன்ற கட்சிகள் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றன. அந்த திட்டத்திற்கு எல்லாம் போலீசார் அனுமதி கொடுத்துள்ளனர். அதற்கெல்லாம் போலீசார் அனுமதி கொடுத்திருந்தனர்.. இதனால் வக்பு வாரியம் குறித்து மக்களுக்குத் தெளிவு ஏற்படுத்தக் கூட்டம் நடத்தினோம். இதில் சட்டத்தில் என்ன இருக்கிறது.. இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து சகோதரர் வேலூர் இப்ராகிம் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
2026ல் திமுக தோல்வி அடையும்
நான் போலீசாருக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 2026ஆம் ஆண்டு மே மாத்திற்குப் பிறகு திமுக ஆட்சி இருக்கப் போவதில்லை. இதனால் பாஜகவின் ஊர்வலம் மற்றும் கூட்டத்திற்கு அனுமதி அளித்தால் எங்கு அரசு உங்கள் மீது நடவடிக்கை எடுக்குமோ எனப் பயப்பட வேண்டாம். இதனால் தான் நீங்கள் பாஜக கூட்டத்திற்கு அனுமதி அளிப்பதில்லை என்பது தெரிகிறது. ஆனால் பயம் வேண்டாம்" என்றார்.
கூட்டணி ஆட்சி?
அதிமுக உடனான கூட்டணியை பாஜக உறுதி செய்துள்ள நிலையில், 2026 சட்டசபைத் தேர்தலில் வென்றால் ஆட்சியில் பங்கு கேட்பீர்களா எனச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஹெச்.ராஜா, "நான் கடந்த 36 ஆண்டுகளாகக் கட்சி நிர்வாகியாக இருக்கிறேன்.. இத்தனை ஆண்டுகளில் ஒருநாளும் கூட்டணி பற்றி.. கூட்டணியில் யார் பங்கு பெறுவார்.. ஆட்சியில் பங்கு பெறுவதா இல்லையா என்பது குறித்தெல்லாம் கருத்து கூறியது இல்லை.
இந்த முடிவுகளை எல்லாம் முடிவு செய்ய வேண்டியது தேசிய தலைமை... எப்படி அமித்ஷா தமிழகத்திற்கு அவர் வந்தார்.. கண்டார்.. வென்றார்..! அதுபோல பெரிய சாதனைகளைப் படைத்துள்ள உள்ளிட்டோர் கொண்ட கட்சித் தலைமை இது குறித்து எல்லாம் முடிவு செய்யும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications