கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவாரா? பூஜை மூழ்கிய கிராமம்! துளசேந்திரபுரம் லைவ் விசிட்
திருவாரூர்: அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டி அவரது பூர்வீக கிராமத்து மக்கள் கோயிலில் பிரார்த்தனை செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். மேலும் அவரை வரவேற்று விளம்பர தட்டிகளையும் ஊர் மக்கள் வைத்துள்ளனர்.
உலகமே எதிர்பார்க்கக் கூடிய அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பற்றி அதிகம் ஆர்வத்துடன் அந்த நாட்டு மக்கள் இருப்பதைவிடத் தமிழ்நாட்டிலுள்ள ஒரு கிராமத்து மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். எப்படியாவது கமலா தேர்தலில் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்பதற்காக அவரை வரவேற்று பேனர் வைப்பது கோயிலில் பூஜை நடத்துவது என்று ஒரே கிராமே அமர்க்களப்படுத்தி வருகிறது.

ஒருவேளை இந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றுவிட்டால், அவர்தான் முதல் பெண் அதிபர் என்று வரலாற்றுச் சாதனையையும் அவர் படைக்க இருக்கிறார். என்னதான் கமலா ஒரு கறுப்பின அடையாளம் கொண்டு ஒருபெண்மணியாக அமெரிக்க மக்கள் அவரைப் பார்த்தாலும், இந்தியாவில் உள்ள மக்கள் அவரை தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவராகவே சொந்தம் கொண்டாடி வருகின்றனர். அவரது வம்சாவளியும் பூர்வீக கிராமும் தமிழ்நாட்டில்தான் வேர்களை ஆழவிட்டுக் கிளை பரப்பி இருக்கின்றன. அவரது தாயும் பாட்டியும் துளசேந்திரபுரம் கிராமத்தையே பூர்வீகமாகக் கொண்டுள்ளனர்.

கடந்த முறை அதிபர் தேர்தலின் போதே இந்தக் கிராமம் களைகட்டி இருந்தது. பலரும் கமலா வெற்றிபெற்று அமெரிக்காவை ஆண்ட தமிழ்ப் பெண்மணி என்ற ஒரு சாதனையை நிகழ்த்திவிடுவார் என்ற பெரிய எதிர்பார்ப்பில் மூழ்கிப் போய் இருந்தனர். அத்துடன் ஒப்பிடும்போது இந்த முறை இக்கிராமத்தில் வரவேற்பு என்னவோ சற்று குறைவாகவே காணப்படுகிறது.
கமலா ஹாரிஸின் அம்மா வழி தாத்தா பி வி கோபாலன் அந்தக் கால மெட்ராஸ் மாகாணத்திற்கு உட்பட்ட கிராமத்திலிருந்து வெளியேறிய பின்னர் ஜாம்பியாவுக்கு குடியேறினார். அங்கு அவர் இந்திய அரசுப் பணியிலிருந்தார். ஹாரிஸின் தாயார், ஷியாமளா கோபாலன் அதிக காலம் கிராமத்திற்கு வெளியே வளர்ந்தவர்தான். பின்னர் அமெரிக்காவில் உயர் படிப்புக்காகச் சென்றார். அதற்குப் பிறகு பெரிய அளவில் துளசேந்திரபுரம் கிராமத்துடன் தொடர்பு இல்லை. ஆனால், உறவு இருந்தது. அவரது உறவினர்கள் பலர் இங்கே இப்போது வாழ்ந்து வருகின்றனர்.

நேற்று எக்ஸ் தள பதிவு ஒன்றில், "என் தாயார் டாக்டர் ஷியாமளா கோபாலன் ஹாரிஸ், 19 வயதில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வந்தார். அவர் எனக்கும் என் சகோதரி மாயாவிற்கும் தைரியம் மற்றும் உறுதியை கற்றுக் கொடுத்தார். ஆகவே அவளுக்கு என் நன்றி. நான் அவர்களை முன்னோக்கி வழிநடத்தத் தயாராக இருக்கிறேன்" என்று உணர்வுப்பூர்வமாக எழுதி இருந்தார். இதற்கு முன்னதாக, 1960களின் குடியுரிமை அணிவகுப்புகளில் தனது பெற்றோரின் ஈடுபாட்டை அவர் நினைவுகூர்ந்திருந்தார். ஹாரிஸ் தனது சுயசரிதையை தி ட்ரூத்ஸ் வி ஹோல்டில் என்ற தலைப்பில் எழுதி புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். அதில் "இளம் நினைவுகள் எனக்கு உள்ளன" என்று குறிப்பிட்டுப் பல விசயங்கள் எழுதி இருந்தார்.
அமெரிக்க மக்களைப் பொறுத்தவரைக் கமலா ஒரு கறுப்பின அடையாளத்தை முன்மொழியும் ஒரு பெண். ஆனால், அவர் எப்போதாவது தனது இந்தியப் பூர்வீக வேர்களைப் பற்றியும், குறிப்பாக அவரது அம்மா மற்றும் பாட்டியின் அடையாளத்தைப் பிரதிபலித்து வருகிறார். "எனது அம்மா பாட்டியின் வலிமையையும் தைரியத்தையும் மரபுரிமையாகப் பெற்றுள்ளார்" என்றும் அவர் எழுதி இருந்தார். சமூக நீதிக்கான அடித்ததிற்குத் தனது குடும்ப மரபுதான் காரணம் என்றும் அவர் எழுத்தில் பதியவைத்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 2020இல் கமலாவின் அத்தை டாக்டர் சரளா, இந்தியக் கலாச்சாரத்துடன் கமலாவுக்கு இருக்கும் தொடர்பைப் பற்றி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில், "அவர் குடும்பத்தில் சித்தி என்ற தமிழ் வார்த்தை இப்போது புழக்கத்தில் இருக்கிறது. அவர் இந்தியாவைப் பற்றியும் தென்னிந்தியக் கலாச்சார உணவுகள் பற்றியும் நிறைய அறிந்து வைத்துள்ளார். சிறுவயதில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவுக்கு அவர் குடும்பத்துடன் வந்துள்ளார்" என்று கூறியிருந்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டி ஜோ பைடன் அதிபராகப் போட்டியிட்ட போது கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அப்போது அவரின் பூர்வீக கிராமம் துளசேந்திரபுரத்தில் மிகப் பெரிய உற்சாகம் பரவியது. இந்த முறை அளவுக்கு இல்லை. இன்று கிராம மக்கள் சிலர் கமலா வெற்றிக்காகக் கிராமத்துக் கோயிலில் பூஜை நடத்தி வருகின்றனர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 80 வயதான வங்கி ஊழியர் கிருஷ்ணமூர்த்தி, அவர் வெற்றி பெற்றால் நாங்கள் கொண்டாடுவோம். அவர் வெல்வாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றார். "கமலாவின் தாத்தா மெட்ராசுக்கும் பிறகு ஆப்பிரிக்காவுக்கும் செல்வதற்கு முன்னர் இங்கே சிறிது காலம் வாழ்ந்தார். அவரது தாய்க்குக்கூட இங்கே உறவுகள் உள்ளனர். ஆனால் கமலா இதுவரை நிச்சயமாகக் கிராமத்திற்கு வந்தது இல்லை" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஊடகங்கள் கமலாவைப் பற்றி எங்களிடம் விசாரிக்கத் தொடங்கிய பிறகு, நாங்கள் அவரைப் பற்றிய விவரங்களை தேடிப் படித்தோம். தனிப்பட்ட முறையில் சொன்னால் டிரம்ப் மற்றும் கமலா ஆகிய இருவரும் எனக்குச் சமம். இருப்பினும், எங்கள் கிராமத்துடன் உள்ள இந்தத் தூரத்து இணைப்புக்காக ஹாரிஸ் வெற்றி பெற்றால் நான் மகிழ்ச்சி அடைவேன். இங்குள்ள எல்லோருமே பெருமிதம் ஏற்படும். இந்தச் சின்ன ஊர்ப்பாசத்திற்காக அவரை நான் ஆதரிக்கிறார்கள்" என்கிறார். மேலும், "அவர் வெற்றி பெற்று இந்தியாவுடனான உறவை வலுப்படுத்தினால் நான் மகிழ்ச்சியடைவேன்" என்கிறார்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் சரளா இந்தக் கிராமத்திற்கு வந்து கமலாவின் பெயரில் கோயிலுக்கு ரூ 5,000 நன்கொடையாக வழங்கி இருக்கிறார். அதன் பின்னர்தான் இந்தக் கிராமத்துடனான இணைப்பு புதுப்பிக்கப்பட்டுள்ளது. கமலாவின் பெயர் கோயிலுக்கு நன்கொடை அளித்தவர்கள் கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. பைடனின் துணை வேட்பாளராக ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுதான் இந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் அந்தப் பெயரை அடையாளம் கண்டுள்ளார்.
"கிட்டத்தட்ட 100 வருடங்கள் மேல் பழமையான கதை இது. துளசேந்திரபுரத்தில் ஒரு காலத்தில் சுமார் 40 பிராமண குடும்பங்கள் இருந்தன. இப்போது, அது 10 அல்லது 15 ஆகக் குறைந்து போய்விட்டது" என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.












Click it and Unblock the Notifications