திருப்பதி மலையில் சிறுமியை கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியது.. நடந்து செல்லும் பக்தர்கள் கவனம்
திருப்பதி: ஏழுமலையானை தரிசனம் செய்ய திருப்பதி அலிபிரி மலைப்பாதையில் பாதையாத்திரை சென்ற சிறுமியை தாக்கிக்கொன்ற சிறுத்தை கூண்டில் சிக்கியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாதை யாத்திரையாக செல்லும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளைப் பற்றி வனத்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் பாத்திரெட்டி பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை திருப்பதி வந்தனர். இவர்கள் மாலை 4.30 மணிக்கு அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு செல்லத்தொடங்கினர். இவர்கள் இரவு 8 மணியளவில் லட்சுமி நரசிம்மர்கோயிலுக்கு அருகில் செல்லும்போது பெற்றோருக்கு சற்றுமுன் நடந்து சென்றுகொண்டிருந்த லக்ஷிதா,6 என்ற சிறுமி திடீரென மாயமானார். சிறுமியை பல இடங்களில் தேடிய அவர்கள் பிறகு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து வனத்துறையினரும் போலீஸாரும் சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் சனிக்கிழமையன்று லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு அருகில் சிறுமியின் உடலை காயங்களுடன் மீட்டனர். இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சிறுமியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் சிறுமியை சிறுத்தை அடித்துக் கொன்றுள்ளதாக பிரேதப் பரிசோதனையில் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே திருமலையில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மாரெட்டி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தர்மாரெட்டி, சிறுமி லக்ஷிதாவை சிறுத்தை கொன்றது மிகவும் துயரத்தையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. ஆதலால் இனி வரும் நாட்களில் அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு ஆகிய இரு மலைப் பாதைகளையும் மதியம் 2 அல்லது 3 மணிக்குள் மூடிவிடலாமா? என ஆலோசிக்கிறோம். விரைவில் இதுகுறித்து தெரிவிக்கப்படும்.

லக்ஷிதா விவகாரத்தில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் அவர் பெற்றோரை விட்டு தூரத்தில் தனியாக நடந்து செல்லும்போது கொடிய மிருகத்தால் இழுத்து செல்லப்பட்டுள்ளார். எனவே திருமலைக்கு குழந்தைகளுடன் நடந்து செல்வோர் அவர்களை தனியே விடக்கூடாது. எல்லோரும் கூட்டமாக செல்ல வேண்டும். இனி 100 பேர் கொண்ட கூட்டத்துடன் ஒரு பாதுகாவலரை அனுப்பவும் ஏற்பாடு செய்யப்படும். மிருகங்கள் நடமாடும் பகுதிகளில், 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர்கள் பணியில் அமர்த்தப்படுவர் என்று கூறினார்.
அவர்கள் 10 மீட்டருக்கு ஒருவர் வீதம் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு பாதையில் நிறுத்தப்படுவர். மேலும் 500 கண்காணிப்பு கேமராக்கள் மலைப்பாதையில் பொருத்தப்படும். இவ்வாறு தர்மாரெட்டி தெரிவித்தார். இதனிடையே சிறுத்தை தாக்கி உயிரிழந்த லக்ஷிதாவின் குடும்பத்தினருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ. 5 லட்சமும் வனத்துறை சார்பில் ரூ. 5 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டது.

இதனிடையே திருப்பதி மலையில் உள்ள அலிப்பிரி வழிநடைபாதை, வாகனங்கள் செல்லும் சாலை ஆகியவற்றில் ஐந்து இடங்களில் சிறுத்தை புலிகள் நடமாட்டத்தை தேவஸ்தான நிர்வாகம் அடையாளம் கண்டது. அலிபிரி முதல் காலிகோபுரம் வரை உள்ள பகுதியில் மூன்று இடங்களிலும், காலிகோபுரத்தில் இருந்து ஏழாவது மைல் வரை உள்ள பகுதியில் ஒரு இடத்திலும் ,திருப்பதியில் இருந்து திருமலைக்கு வாகனங்களில் செல்ல பயன்படுத்தும் சாலையில் 38 வது வளைவு அருகே ஒரு இடத்திலும் சிறுத்தை நடமாட்டத்தை தேவஸ்தான விஜிலென்ஸ் துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்நிலையில் சிறுத்தையை பிடிப்பதற்காக திருப்பதி மலைப்பாதை அருகே வனத்துறையினர் மூன்று கூண்டுகளை அமைத்திருந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலையில் ஒரு சிறுத்தை கூண்டு ஒன்றில் புகுந்து சிக்கிக்கொண்டது. அந்த சிறுத்தையை பத்திரமாக மீட்டு வேறு பகுதிக்கு கொண்டு சென்று விடுவிப்பதற்கான முயற்சிகளை வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications