ஆவணி பவுர்ணமி.. ஏழுமலையான் கோவில் கருட வாகன சேவை.. தரிசித்தால் என்னென்ன நன்மைகள்
திருமலை: ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் நாளை இரவு தங்க கருடசேவை நடைபெற உள்ளது. கருட சேவையை தரிசிக்க சென்றால் பெருமாள் ஆசியுடன், நம் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
மகாவிஷ்ணுவின் வாகனம் கருடன். இந்த கருடவாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளுவது சிறப்பம்சம். கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளும் இந்நாளில் மட்டும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள். இதையொட்டித் திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது. பெருமாளே வரமாகக் கேட்டுப் பெற்ற சிறப்பினுக்கு உரியது கருட வாகனம்.
கருட சேவையில் எழுந்தருளும் பகவானை தரிசித்தால் சகல பயங்களும் நீங்கும் என்பது ஐதிகம். பெருமாளை கருட வாகனத்தில் தரிசித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது நம்பிக்கை. எனவேதான் பெருமாள் கோவில்களில் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருட சேவை நடைபெறுகிறது.

கருட வாகன சேவை
கருடாழ்வார் என்ற கருடன் கடவுளாகவும், பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் ஏற்று இந்துக்களால் வணங்கப்படுகிறார். கருடனை வெற்றிக்கு அறிகுறியாக நீ என் கொடியிலும் விளங்குவாய் என்று வரமளித்து வாகனமாக ஏற்றுக்கொண்டுள்ளார் பெருமாள். எனவேதான் பெருமாள் கோவில்களில் கருட கொடி ஏற்றப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான்
திருமால் சீனிவாசனாக திருப்பதியில் இருந்த பொழுது, தான் வைகுண்டத்தில் இருந்ததைப் போல இங்கும் இருக்க ஆசை கொண்டார். அதனை அறிந்த கருடன், வைகுண்டத்தில் இருக்கும் ஏழு மலையையும் பெயர்த்து எடுத்து திருப்பதியில் சேர்த்தார். அங்கு திருமால் சீனிவாசனாக குடியிருக்கிறார். தான் ஆசைப்பட்டதை செய்த கருடனை தன்னுடைய வாகனமாக ஆக்கிக் கொண்டார். இதனை நினைவு படுத்தும் விதமாக திருப்பதியில் கருட சேவை, பிரம்மோற்சவ திருவிழாவின் பொழுது நடத்தப்படுகிறது.

கருட வாகன சேவை
கருடன் இரு பெரிய இறக்கைகளுடன் மனிதனைப் போல உருக்கொண்டு, வளைந்த மூக்குடன் கூடிய முக தோற்றத்தில் பெருமாள் எதிரே நின்ற நிலையில் தான் காட்சி தருவார். இரு பெரும் கரங்களை பெருமாளின் பாதங்களை ஏந்துவதற்காக முன்புறம் நீட்டியவாறு இருப்பார்.பெருமாள் கோவில்களில் கருடனுக்கு தனி சன்னதிகள் உள்ளன. ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதசுவாமி கோவிலில் செப்புச் சிலை வடிவில் மிகப்பெரிய உயரமான கருடன் தனி சன்னதி கொண்டுள்ளார். நாச்சியார் கோவிலில் கல்கருடன் தனி சன்னிதியில் கம்பீரமாக காட்சி தருகிறார்.

கருடனை தரிசித்தால் என்ன பயன்
தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரம், திருநாங்கூர்,கும்பகோணம், ஸ்ரீவில்லிபுத்தூர், தஞ்சாவூர் ஆகிய கோயில்களில் கருட சேவை நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெறுகிறது. சுவாதி நட்சத்திர நாளில் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று கருடனை வழிபடுவதால் திருமணம் யோகம் மற்றும் வாகன யோகமும் உண்டாகும் என்பது மக்களின் நம்பிக்கை. அதனால் பக்தர்கள் திருமாலை மற்ற எல்லா விதமான வாகனங்களில் தரிசிப்பதைக் காட்டிலும் கருட சேவையில் தரிசிப்பதை பெரும் பாக்கியமாகக் கருதுவர்.

களத்திர தோஷம் நீங்கும்
நாக தோஷம் மற்றும் களத்திர தோஷம் உடையவர்கள் கருட வாகனத்தில் வலம் வரும் பெருமாளை தரிசிப்பதால், அனைத்து விதமான தோஷங்களும் நீங்கி சகலசெல்வங்களும் பெறுவார்கள் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. கருட சேவையை தரிசிப்பதற்கு , மறைந்த முன்னோர்களான பித்ருக்களும் வருவார்கள் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கருட சேவையை தரிசிக்க சென்றால் பெருமாள் ஆசியுடன், நம் முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

ஆவணி பவுர்ணமி கருடசேவை
ஆவணி பவுர்ணமியை முன்னிட்டு நாளைய தினம் திருமலை ஏழுமலையான் கோவிலில் கருடவாகன சேவை நடைபெற உள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'பவுர்ணமியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளைய இரவு தங்க கருடசேவை நடைபெற உள்ளது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை தங்க மற்றும் வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி 4 மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications