சந்திரயான் 3 ஏவும் இஸ்ரோ.. திருப்பதியில் ராக்கெட் வைத்து விஞ்ஞானிகள் வழிபடும் பின்னணி இதுதான்
திருப்பதி: ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் ஜூலை 14ஆம் தேதி நிலவுக்கு ஏவப்பட உள்ளது. ராக்கெட் ஏவும் முன்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அதுவும் சந்திரயான்-3 விண்கலம் மாதிரியை வைத்து வழிபட்டுள்ளனர் இதற்கான பின்னணி என்ன தெரிந்து கொள்வோம்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து நாளை பிற்பகல் 2.55 மணியளவில் சந்திரயான் விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. நிலவின் சுற்றுவட்ட பாதையில் விண்கலம் நுழைவதற்கு தேவையான அம்சங்கள் இதில் துல்லியமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. சந்திரயான்-3 அதிக எரிபொருளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சந்திரயான் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ள நிலையில், 26 மணி நேர கவுண்ட் டவுன் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் சந்திரயான் -3 திட்டம் வெற்றி அடைய வேண்டும் என்பதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று திருப்பதி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும் சந்திரயான் 3-ன் மாதிரியை கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர். இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் திருப்பதி மாவட்டம் சூலூர்பேட்டையில் உள்ள செங்கலம்மா கோயிலில் வழிபாடு நடத்தினார்.
சந்திரன் ஸ்தலமாக போற்றப்படுவது திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.
சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் திருமலை சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தால் மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளதாக நம்பப்படுகிறது. வாஸ்து சாஸ்திரப்பட இந்த கோவில் அதிக சக்தி வாய்ந்தது. சந்திர தசை மற்றும் சந்திர புத்தியால் பாதிக்கப்பட்டவர்கள் திருப்பதி சென்று வணங்கி வருவார்கள். திருப்பதி ஏழுமலையானை வணங்கினால் சந்திரனால் ஏற்பட்ட தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
எனவேதான் சந்திரனை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலத்தை ஏவும் விஞ்ஞானிகள் இன்று திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டுள்ளனர். இதற்கு முன்னதாக பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவும் போதும் விஞ்ஞானிகள் அதன் மாதிரியை வைத்து வெற்றிக்காக ஏழுமலையானை வேண்டிக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் சோம்நாத் இன்றைய தினம் சக்தி வாய்ந்த சூலூர்பேட்டை செங்கலம்மா கோவிலில் வழிபாடு நடத்தியுள்ளார். செங்கலம்மாவிடம் வைக்கும் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை. எனவேதான் விஞ்ஞானிகள் சந்திரயான் 3 வெற்றிக்காக ஏழுமலையானிடமும் செங்கலம்மாவிடமும் வேண்டுதல் வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications