திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மேலே பறந்த ஆளில்லா விமானம்? தீவிர விசாரணையில் போலீசார்!பரபர பின்னணி
அமராவதி: திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது ஆளில்லா விமானம் பறந்த காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள கோயில் என்பதால் இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, ஆக்டோபஸ் படையினரின் கண்காணிப்பை மீறி கோயிலுக்கு மேலே ஆளில்லா விமானம் பறந்து செல்ல வாய்ப்பே இல்லை என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட வீடியோவின் உண்மைத்தன்மையை கண்டறியும் பணி நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளனர்.

பயங்கரவாத அச்சுறுத்தல்
இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற, பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோயில். இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் பெற்று செல்கின்றனர். இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் இங்கு அதிக அளவில் வருகை தருகிறார்கள். இதனிடையே, இந்தக் கோயிலுக்கு நீண்டகாலமாகவே தீவிரவாதிகளிடம் இருந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதுதொடர்பாக தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

'ஆக்டோபஸ்' படை பாதுகாப்பு
இந்த தொடர் தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலை பாதுகாக்கும் நோக்கில் பிரத்யேகமாக ஆக்டோபஸ் எனும் படைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டது. 90 பேர் கொண்ட இந்தப் படைப்பிரிவு 24 மணிநேரமும் கோயிலை சுற்றி துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாப்பில் ஈடுபட்டிருக்கும். கடந்த 2014-ம் ஆண்டு முதல் இந்த ஆக்டோபஸ் படைப்பிரிவு திருப்பதி கோயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறது.

திடீர் ஆளில்லா விமானம்
திருப்பதி ஏழுமலையான் கோயில் கோபுரம் மற்றும் திருமலையின் ஆகம சாஸ்திரப்படி கோயிலுக்கு மேலே விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா விமானங்கள் உள்ளிட்டவை பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில், திருப்பதி கோயிலுக்கு மேலே ஆளில்லா விமானம் பறந்து சென்று தத்ரூபமாக வீடியோ எடுத்ததை போன்ற காணொலி யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் நேற்று முதல் வைரலாகி வருகிறது. இது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்வலைகளையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

விசாரணை தீவிரம்
இதனிடையே, ஆக்டோபஸ் படையினரின் கண்காணிப்பை மீறி கோயிலுக்கு மேலே ஆளில்லா விமானம் பறந்து செல்ல வாய்ப்பே இல்லை என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வீடியோவை தடயவியல் துறைக்கு அனுப்பி இதன் உண்மைத்தன்மையை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஆக்டோபஸ் பாதுகாப்புப் படையினரும், திருப்பதி போலீசாரும் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications