குவைத்தில் கணவர்! திருப்பதி காட்டில் இரு குழந்தைகள், அண்ணனுடன் இறந்து கிடந்த தமிழ் பெண்! யார் இவர்?
திருப்பதி: ஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் 2 குழந்தைகளுடன் இளம்பண், அவரது அண்ணன் ஆகியோர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் கணவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், பாகாலா மண்டலத்தின் முலவங்கவில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதையொட்டி வனப்பகுதியும் இருக்கிறது. இங்கு கடந்த 14 ஆம் தேதி ஒரு ஆண் சடலம் மரத்தில் தூக்கிட்டு தொடங்கியபடியும் ஒரு பெண் சடலம் துணியில் மூடிய நிலையிலும் இருந்தது.

இதை அவ்வழியாக ஆடு, மாடு மேய்க்க வந்தவர்கள் பார்த்தனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் சடலங்கள் இருந்த இடத்தில் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு ஏதோ புதைத்தது போல் இருந்தன. மேலும் அங்கு ஒரு மண் வெட்டி இருந்ததையும் பார்த்தனர். உடனே அந்த இடத்தை தோண்டி பார்த்த போது இரு குழந்தைகளின் சடலங்கள் இருந்தன. பின்னர் போலீஸார் 4 சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நடத்தப்பட்ட சோதனையில் தஞ்சாவூரைச் சேர்ந்த தனியார் மனநல மருத்துவமனையில் கலைச் செல்வன் என்பவர் சிகிச்சை பெற்றதற்கான மருத்துவ சீட்டு இருந்தது. மேலும் சிம்கார்டு இல்லாத செல்போன்கள், மதுபாட்டில்கள் இருந்ததையும் கண்டறிந்தனர்.
அந்த செல்போனை வைத்து கலைச் செல்வனின் புகைப்படத்தை சேகரித்த போலீஸார் தஞ்சாவூர் போலீஸாருக்கு போன் செய்து அவர்களுக்கு கிடைத்த மருத்துவ சீட்டு குறித்து விசாரித்தனர்.
அப்போதுதான் இறந்த கலைச்செல்வன் (37) புதுவையைச் சேர்ந்தவர் என்றும் அவருடன் இறந்த நிலையில் கிடந்தவர்கள் அவரது உறவினர்களான நாகை மாவட்டம் திட்டச்சேரியை சேர்ந்த வெங்கடேசனின் மனைவி ஜெயமாலினி (32), அவரது மகள் ஹர்ஷினி (7), தர்ஷினி (3) என்பதும் தெரியவந்தது.
வெங்கடேசன் குவைத்தில் பணிபுரிந்து வந்தாராம். கடந்த ஜூலை மாதம் தனது மனைவி, குழந்தைகளுக்கு போன் செய்த போது அவர்களின் தொடர்பு கிடைக்கவில்லையாம். இதனால் அவர் உடனடியாக இந்தியாவுக்கு வந்து பார்த்தபோது அவர்களை காணவில்லை என தெரியவந்ததாம்.
உடனே வெங்கடேசன், திட்டச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் இறந்த இடத்தில் கிடைத்த புகைப்படத்தை வெங்கடேசனிடம் காட்டிய போது அவர் இறந்தது கலைச் செல்வன் என்பதை அடையாளம் காட்டினார்.
மேலும் தனது மனைவியும் குழந்தைகளும் கலைச்செல்வனுடன் நெருக்கமாக இருந்ததையும் தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் அவரை திருப்பதி அழைத்து சென்று சடலங்களை அடையாளம் காட்ட சொன்ன போது அவர் அந்த சடலங்கள் தனது மனைவி, குழந்தைகள், கலைச்செல்வன் என்பதை தெரிவித்தார். மேலும் கலைச்செல்வனும் ஜெயமாலினியும் அண்ணன் தங்கை உறவு என்றும் தெரிவித்திருந்தார்.
இவர்கள் ஏன் திருப்பதிக்கு வந்தனர். அங்கு இவர்களாகவே இறந்தனரா, அல்லது யாரேனும் கொலை செய்து விட்டனரா, அந்த இடத்திற்கு மதுபாட்டில்களை கொண்டு வந்தது ஏன் என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. வனப்பகுதியில் 4 சடலங்கள் கிடைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications