தீவிபத்தில் உயிர் பிழைத்த பவன் கல்யாண் மகன்! திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மனைவி முடி காணிக்கை
திருப்பதி: சிங்கப்பூரில் பவன் கல்யாணின் மகன் தீவிபத்தில் காயமடைந்து நல்லபடியாக குணமடைந்ததை அடுத்து பவனின் மனைவி திருப்பதி ஏழுமலையானுக்கு முடி காணிக்கை கொடுத்துள்ளார்.
ஆந்திர பிரதேசம் துணை முதல்வர் மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யாணின் மனைவி அன்ன லெஸ்னேவா. இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார்.

சிங்கப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் பவன்- அன்னாவின் மகன் மார்க் சங்கர் படித்து வந்தார். இந்த நிலையில் அந்த பள்ளியில் நடந்த தீவிபத்தில் மார்க் சங்கருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த விஷயம் குறித்து தகவலறிந்த அன்னா உடனடியாக சிங்கப்பூர் விரைந்தார். பவன் கல்யாணோ அவர் அன்றைய தினம் விசாகப்பட்டினத்தில் உள்ள மக்களை பார்க்க வருவதாக வாக்கு கொடுத்துவிட்டதால் அவர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக அவர்களை பார்த்துவிட்டு சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிலையில் பவன் கல்யாணின் மகனை இந்தியாவுக்கு அழைத்து வந்துவிட்டனர். இதையடுத்து மகன் நலம் பெற ஏழுமலையானுக்கு முடிகாணிக்கை கொடுப்பதாக அன்னா வேண்டிக் கொண்டாராம். அதை நிறைவேற்ற அவர் திருப்பதி வந்திருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை காயத்ரி சதனில் உறுதிமொழி ஆவணத்தில் கையெழுத்திட்டார். முதலில் ஸ்ரீவராக சுவாமி கோயிலுக்கு சென்றார். அதன் பிறகு புனித பத்மாவதி கல்யாண கட்டாவில் தலைமுடியை காணிக்கையாக கொடுத்தார்.
இன்று காலை சுப்ரபாத சேவையில் வெங்கடேஸ்வரரை தரிசித்தார். இதைத் தொடர்ந்து அன்னதான பிரசாத மையத்திற்கு சென்று அங்கு அன்னதானத்திற்கு நன்கொடை அளிப்பார் என தெரிகிறது. பவன்- அன்னாவின் மகன் காப்பாற்றப்பட்டது கடவுளின் கிருபையால் என கருதுகிறார்கள்.

பவன் கல்யாண் ரஷ்ய நாட்டை சேர்ந்த அன்னாவை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் கடந்த 2013 ஆம் ஆண்டு ஹைதராபாத்தி உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். இந்த நிலையில் பவன் கல்யாணின் மகன் சிறுவயது முதலே சிங்கப்பூரில் படித்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த பள்ளியில் கடந்த 8-ஆம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. இதில் 17 மாணவர்கள் காயமடைந்தனர். அதில் மார்க் சங்கருக்கு கைகளிலும் கால்களிலும் காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் அங்கு மார்க் சங்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரை கடந்த 12 ஆம் தேதி இந்தியாவுக்கு அழைத்து வந்தார் பவன்.
தேவைப்பட்டால் ஹைதராபாத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும் என தெரிகிறது. மகன் உயிர் பிழைக்கப்பட்டது திருப்பதி ஏழுமலையானின் கருணையினால் என பவனும் அன்னாவும் நம்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications