இந்த முறை ஆந்திரா போலீசில் சிக்கிய டிடிஎஃப் வாசன்! பக்தர்களிடம் விளையாடியதால் வந்த வினை!
திருப்பதி: திருமலை திருப்பதி கோயிலில் சில நாட்களுக்கு முன்னர் தரிசனம் செய்த டிடிஎஃப் வாசன், பக்தர்களை பிராங் செய்ததாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தற்போது திருப்பதியில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கின்றனர். கடந்த 10ம் தேதி நண்பர்களுடன் வாசன் திருப்பதி திருமலை கோயிலுக்கு தரிசனத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு தரிசனத்திற்காக கேட்டிற்கு வெளியே பக்தர்கள் காத்திருந்திருக்கின்றனர். அப்போது இவரது நண்பர்கள், பக்தர்கள் காத்திருந்த பகுதியின் கேட்டை திறந்து விடுவதை போல பிராங்க் செய்திருக்கின்றனர். இதனை உண்மை என நம்பிய பக்தர்கள் ஏமாந்திருக்கின்றனர்.

திருப்பதி கோயிலில் தரிசனத்திற்கு மணிக்கணக்கில் நேரம் எடுக்கும். கால் வலிக்க நின்று, வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் நேரம் கிடைக்கும் போது சற்று அமர்ந்திருப்பார்கள். இப்படி இருக்கையில் அவர்களை ஏமாற்றுவது தவறு என நெட்டிசன்கள் டிடிஎஃப் வாசனுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். வாசனின் செயல்பாடுகள் சமீப காலமாக எல்லை மீறி செல்வதாகவும், பக்தர்களை சீண்டிப்பார்ப்பதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நெட்டிசன்கள் விமர்சித்திருந்தனர்.
இப்படி இருக்கையில், பிராங்க் விவகாரம் குறித்து தேவஸ்தான விஜிலன்ஸ் துறை அளித்த புகாரின் அடிப்படையில் டிடிஎஃப் வாசன் மீது வழக்குப் பதிந்து அவருக்கு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கோவையை சேர்ந்த டிடிஎஃப் வாசன் விலையுயர்ந்த பைக்குகளில் சாலையில் சாகசம் செய்வது, வேண்டும் என்றே அதிக வேகத்தில் சென்று சக வாகன ஓட்டிகளை அச்சுறுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருந்தார். இது தொடர்பான வீடியோக்களையும் அவர் தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வந்தார். இவரது யூடியூப் சேனலுக்கு லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவரது வீடியோக்களை பார்த்து இளைஞர்கள் பலரும் அதி வேகத்தில் வாகனங்களை இயக்கி விபத்துக்களை ஏற்படுத்துவதாக தொடர் புகார்கள் எழுந்தன.
காவல்துறையும் இந்த புகார்கள் தொடர்பாக பலமுறை வாசனை எச்சரித்தது. ஆனாலும் வாசன், தனது தாறுமாறான பைக் சாகசத்தை நிறுத்தியபாடில்லை. இப்படி இருக்கையில்தான் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் பாலுசெட்டிசத்திரம் பகுதியில் விபத்தில் சிக்கினார். சாலையில் வீலிங் செய்ய முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அவரை பாலுசெட்டிசத்திரம் போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் சில நாட்களில் ஜாமீன் பெற்ற அவர் மீண்டும் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட தொடங்கினார். குறிப்பாக சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு காரில் சென்ற வாசன், காரை ஓட்டிக்கொண்டே செல்போனில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அதாவது, சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு டிடிஎஃப் வாசன் தனது நண்பர்களுடன் பழகுநர் உரிமத்துடன் காரில் சென்றார். அப்போது மதுரை வண்டியூர் புறவழிச்சாலையில் பயணம் மேற்கொண்ட போது செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கிய அவர், அதை வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
இதனையடுத்து சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 7 பிரிவுகளின் கீழ் வாசன் மீது வழக்குப் பதிவு செய்த மதுரை அண்ணா நகர் போலீஸார், கடந்த மே 30ம் தேதி வாசனை கைது செய்து அவரது காரையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கிலும் தற்போது வாசனுக்கு ஜாமீன் கிடைத்திருக்கிறது. இப்படி இருக்கையில் தற்போது ஆந்திர மாநில போலீசாரிடம் வாசன் சிக்கியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications