அம்மாடி அள்ளவே முடியாத தங்கம்.. திருமலை திருப்பதியில் நடமாடும் நகைக்கடையாக வந்த பக்தர்கள்
திருப்பதி: இந்தியாவில் புகழ் பெற்ற இந்துக்களின் புனித யாத்திரை தலங்களில் ஒன்றான திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவிலுக்கு இன்று புனேவைச் சேர்ந்த தொழில் அதிபர் குடும்பம், 25 கிலோ தங்க நகைகளை அணிந்து வந்தனர். இதை பார்த்த பக்தர்கள் திகைத்து போனார்கள்.. இந்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை பார்த்து நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் பதிவிட்டு வருகிறார்கள்.
உலகின் மிகப்பெரிய பணக்கார கடவுள்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஏழைகள் முதல் கோடீஸ்வரர்கள் வரை பலரும் தவம் இருக்கிறார். இந்த கோயில் ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள உலகப் புகழ் பெற்ற வைணவத் திருத்தலமாகும். இங்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் தரிசனம் செய்ய வருகிறார்கள். தமிழ்நாட்டு மக்களால் திருவேங்கடம் என்று அழைக்கப்படும் இந்த கோயில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில், ஏழுமலையான் கோவில், திருப்பதி பாலாஜி கோயில் போன்ற பல பெயர்களாலும் அறியப்படுகிறது.

இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இருக்கிறது. திருப்பதி திருமலையில் வெங்கடாசலபதி கோயிலும், திருப்பதியில் அருள்மிகு பத்மாவதி தாயார் கோயிலும் அமைந்துள்ளது. சேசாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி, அஞ்சனாத்திரி, வ்ரிசபத்ரி, நாராயணாத்ரி, வேங்கடாத்ரி ஆகிய ஏழுமலைகளைக் கொண்ட இந்த ஏழுமலையில் அமைந்துள்ள வெங்கடாசலபதியான பாலாஜியை தரிசனம் செய்ய எப்போது சென்றாலும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். இங்கு பணக்காரர்கள் கோடிகளை கொட்டி வருகிறார்கள்.
இந்த கோயில் இந்துக்களுக்கு மிகவும் புனிதமான இடங்களில் ஒன்றாகும். இது ஒரு வழிபாட்டுத் தலம் மட்டுமின்றி, நம்பிக்கை, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மீகத்தின் சின்னமாக இருக்கிறது. இந்து மத நம்பிக்கையின்படி, கலியுகத்தின் சோதனைகள் மற்றும் பிரச்சனைகளில் இருந்து மனிதகுலத்தை காப்பாற்ற விஷ்ணுவின் அவதாரமாக வெங்கடேஸ்வரர் வந்துள்ளதாக மக்களால் நம்பப்படுகிறது. இந்த கோயிலுக்கு மிகப்பெரிய வரலாறு, அழகான கட்டிடக்கலை மற்றும் பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை ஆகியவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பல முக்கிய பிரபலங்கள் மற்றும் தலைவர்கள் அடிக்கடி திருப்பதி கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்து ஆசி பெறுகிறார்கள்

இந்நிலையில் புனேவைச் சேர்ந்த தொழில் அதிபர் குடும்பம் பாரம்பரிய உடைகளை அணிந்து, பளபளக்கும் தங்க நகைகளை அடுக்குகளாக அணிந்து, கோவிலுக்குச் சென்று வெங்கடேசப் பெருமாளை தரிசித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார்கள். அவர்கள் 25 கிலோ தங்க நகைகளை அணிந்து வந்து கோயிலை சுற்றியதை பார்த்து பக்தர்கள் திகைத்து போனார்கள்.
முன்னதாக, நேற்று, தெலுங்கு திரையுலக மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மனைவி சுரேகா கொனிடேலா ஆகியோர் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலுக்குச் சென்று அவரது 69வது பிறந்தநாளில் ஆசிர்வாதம் பெற்றார்கள். கடந்த ஜூலை மாதம் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலுக்குச் சென்று ஏழுமலையானிடம் ஆசிர்வாதம் பெற்றார்.












Click it and Unblock the Notifications