அக்னிபாத் போராட்டம் & பந்த்.. திருப்பதியில் 144 தடை உத்தரவு.. போலீஸ் குவிப்பு.. பாதுகாப்பு தீவிரம்!
திருப்பதி: மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்தைக் கைவிடக் கோரி நாடு தழுவிய பந்த்-க்கு போராட்டக்காரர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பீகார், உத்தரப் பிரதேசம், ஹரியானா, தெலங்கானா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் 300க்கும் அதிகமான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை கட்டுப்படுத்த மத்திய அரசு தரப்பில் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் புரி, அக்னிபாத் திட்டம் நிச்சயம் திரும்பப் பெற மாட்டாது. நீண்ட காலமாக இதுகுறித்து திட்டமிட்டு வந்துள்ளோம். இது இந்திய ராணுவத்தை இளைமையாக வைத்திருக்கும் எண்ணத்தில் உருவாக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள் நாடு தழுவிய பந்த்-ற்கு போராட்டக்காரர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளனர். இதனையொட்டி பல்வேறு மாநிலங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக பீகார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, ஹரியானா மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தொழில் நிறுவனங்கள், கடைகள் என அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஆந்திர மாநிலத்தில் பெரிய அளவில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெறவில்லை என்றாலும், ஆங்காங்கே சிறுசிறு போராட்டங்கள் நடைபெற்றன. அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் நாடு தழுவிய பந்த் காரணமாக திருப்பதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் திருப்பதி ரயில் நிலையம், தபால் நிலையம் உள்ளிட்ட மத்திய அரசுக்கு சொந்தமான அலுவலகங்களுக்கு தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. அதேபோல் பக்தர்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திருப்பதியில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகள் வழக்கம்போல் செயல்படுகின்றன. ரயில் போக்குவரத்துக்கு இதுவரை எந்தவிதமான இடையூறும் ஏற்படவில்லை. அதுமட்டுமல்லாமல் மாநில மக்கள் அத்தியாவசிய தேவைகளான கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவை தொடர்ந்து செயல்படுகின்றன. அதேபோல் முக்கியப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications