திருப்பதி பிரம்மோற்சவம்! ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, கிளி அணிந்து மோகினியாய் வந்த மலையப்ப சுவாமி
திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 5ஆம் நாளான இன்று காலை ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, கிளி அணிந்து மோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. இன்று மாலை நடக்கும் கருட சேவையை காண லட்சோப லட்ச பக்தர்கள் மாடவீதிகளில் குவிந்துள்ளனர்.
புரட்டாசி மாதம் நவராத்திரி வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி கோயில்கள், மலை பாதைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் மின் விளக்குகளாலும் சுவாமி பேனர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

கோயிலின் ராஜகோபுரம் முழுவதுவே மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. இந்த பிரம்மோற்சவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிகள் மாடவீதிகளில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பெரிய சேஷ வாகனம், சின்ன சேஷ வாகனம், அன்ன வாகனம், முத்துப்பந்தல், கற்பக விருட்சம், சர்வ பூபால வாகனங்களில் உலா வந்த மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு ஆசிவழங்கினார். அந்த வகையில் 5-ஆம் நாளான இன்று கருட சேவையை தரிசிக்க ஏராளமானோர் வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய திருவடி என போற்றப்படும் கருடவாகனத்தில் பக்தர்களுக்கு மலையப்ப சுவாமி காட்சியளிப்பார்.

இந்த நன்னாளில் ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, கிளி, ஆண்டாள் அணிந்திருந்த வஸ்திரம் ஆகியவை மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இன்று காலை உற்சவரான மலையப்ப சுவாமி மோகினி அலங்காரத்தில் அருள்பாலிப்பது வழக்கம். அப்போது ஆண்டாள் சூடிக் கொடுத்த கிளி, மாலை அணிந்து 4 மாட வீதிகளில் உலா வருவார்.

அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழங்குவர். பாற்கடலில் மந்திரகிரி என்ற மலையை வாசுகி என்ற பாம்பை கொண்டு தேவர்களும் அசுரர்களும் இணைந்து கடைந்தனர். அப்போது கிடைத்த அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டும் கிடைக்க செய்யும் விதமாக மகா விஷ்ணு மோகினி அலங்காரத்தில் தோன்றி அசுரர்களை ஏமாற்றினார்.

அதை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் பிரமோற்சவத்தின் 5வது நாள் காலை மலையப்ப சுவாமி மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். அந்த வகையில்தான் இன்று அவர் மோகினி அவதாரத்தில் அவர் வீதி உலா வருகிறார்.












Click it and Unblock the Notifications