திருப்பதி லட்டு பிரசாதம்..ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடு தேடி வருமா? தேவஸ்தானம் சொல்வதென்ன?
திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே லட்டு பிரசாதத்தை வெப்சைட் மூலம் பதிவு செய்ய முடியும் என்று தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர். தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யாமல் லட்டு பிரசாதத்தை மட்டும் முன்பதிவு செய்து வாங்க இயலாது என தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தை இனி ஆன்லைனில் முன்பதிவு செய்து வாங்கலாம் எனவும், லட்டு பிரசாதம் தேவைப்படும் பக்தர்கள் தேவஸ்தான வெப்சைட் மூலம் முன்பதிவு செய்தால் தபால் அல்லது கொரியர் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்த தகவலை உண்மை என நம்பி பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் பரவி வரும் தகவல் குறித்து தேவஸ்தான அதிகாரிகள் கேட்டபோது, இந்த தகவலை மறுத்த அதிகாரிகள், அந்த தகவல் முற்றிலும் தவறானது. இணையதளத்தில் தரிசன டிக்கெட்டுகள் மட்டுமே முன்பதிவு செய்யலாம். அந்த தரிசன டிக்கெட் முன்பதிவு செய்யாமல் லட்டு பிரசாதத்தை மட்டும் முன்பதிவு செய்து வாங்க இயலாது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும்போது மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான லட்டு பிரசாதங்களையும் முன் பதிவு செய்து திருப்பதி மலைக்கு வந்து கவுண்டர்களில் வாங்கி கொள்ளலாம். இதுதான் நடைமுறை என்றும் விளக்கமளித்தனர்.
இந்த நிலையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருமலையில் ஆண்டாள் அருளிய திருப்பாவை ஒலிக்கப்போகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் 11 மாதங்கள் வரை ஏழுமலை யானுக்கு சுப்ரபாத சேவை அதி காலை நடைபெறுவது ஐதீகம். அந்த நேரத்தில் சுவாமி துயில் எழுப்பப்பட்டு, அன்றைய நாளின் இதர சேவைகள் தொடர்ந்து நடைபெறும். ஆனால், தமிழ் மாதமான மார்கழி மாதத்தில் மட்டும் ஆண்டாள் அருளிய திருப்பாவையை பாடி ஏழுமலையான் துயில் எழுப்பப்படுகிறார். இந்த ஆண்டு 16ஆம் தேதி மார்கழி மாதம் பிறப்பு முதல் ஜனவரி மாதம் 14ஆம் தேதி வரை திருப்பாவை சேவை நடத்தப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி முதல் 10 நாட்கள் ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் திறந்திருக்கும். ஜனவரி 2ஆம் தேதி முதல் வைகுண்ட வாசல் திறந்திருக்கும் நாட்களில் ஒவ்வொரு நாளும் 50,000 பக்தர்கள் இலவசமாக ஏழுமலையான வழிபடவும், 25,000 பக்தர்கள் 300 ரூபாய் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபடவும் தேவையான எண்ணிக்கையில் டோக்கன்கள் வழங்கப்படும்.
திருப்பதியில் வசிக்கும் பொதுமக்கள் ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் திறந்திருக்கும் நாட்களில் சாமி கும்பிடுவதற்கு வசதியாக திருப்பதியிலும் 300 ரூபாய் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
பல்வேறு ஊர்களில் தேவஸ்தான நிர்வாகம் 1200 கோவில்களை கட்டி வருகிறது. அவற்றின் கட்டுமான பணிகள் விரைவில் முடிவடைய உள்ளன. டிசம்பர் 1 முதல் காலை 8 மணிக்கு துவங்கி பகல் 12 மணி வரை 4 மணி நேரம் விஐபி பிரேக் தரிசனம் நடைபெறுகிறது. இதற்கு முன்னர் அதிகாலை துவங்கி காலை எட்டு மணி வரை பக்தர்கள் விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டனர்.
கடந்த 1957 ஆம் ஆண்டு இறுதியில் ஏழுமலையான் கோவில் தங்க கோபுரத்திற்கு பொன்முலாம் பூசப்பட்டது. பொன் மூலாம் பூசி நீண்ட காலம் ஆகிவிட்ட காரணத்தால் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலாலயம் செய்து கோவில் விமானத்திற்கு மீண்டும் பொன் முலாம் பூச முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய தங்கம் பயன்படுத்தப்படும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications