“என் குடும்பமே நாசமா போகட்டும்”.. திருப்பதி கோவிலில் சூடம் ஏற்றி சத்தியம் செய்த மாஜி தேவஸ்தான தலைவர்
திருப்பதி: திருப்பதி லட்டு பிரசாதம் செய்ய பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்தச் சூழலில் இன்று திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி திருப்பதிக்கு வந்து, சூடம் ஏற்றி சத்தியம் செய்தார். நான் தவறு செய்து இருந்தால் என் குடும்பமே அழிந்து போகட்டும் என ஆவேசமாக கூறி சத்தியம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக தற்போதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்தக் குற்றச்சாட்டு, குஜராத்தின் தேசிய பால்வள மேம்பாடு வாரியத்தின் கீழ் இயங்கும் கால்நடை மற்றும் உணவுப் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையத்தின் ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.

அந்த ஆய்வு அறிக்கையில், திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்தது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேசமயம், லட்டு தயாரிக்க நெய் அனுப்பிய திண்டுக்கல் நிறுவனத்தை திருப்பதி தேவஸ்தான போர்டு கருப்பு பட்டியலில் வைத்துள்ளது. திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்திய நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் இருந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளைய ஏற்படுத்தி உள்ளது.
அரசால் நவீன தரத்தில் மேம்படுத்தப்பட்ட இரண்டு வெவ்வேறு ஆய்வகங்களில் ஜூலை 6 மற்றும் 12 ஆம் தேதிகளில் தயாரித்த நான்கு லட்டு நெய் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் அடிப்படையில், லட்டுகளை தயாரிக்க பயன்படுத்திய நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்தது உண்மைதான் என திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் சியாமளா ராவ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திருப்பதி கோவிலுக்கு வந்த முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகர ரெட்டி கோவிலில் சூடம் ஏற்றி சத்தியம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பதி ஏழுமலையான் கோவிலின் முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் கருணாகர் ரெட்டி இன்று திருப்பதிக்கு வந்து கோவில் குளத்தில் நீராடியதோடு கோவில் நுழைவு வாயில் பகுதிக்கு வந்து, தேங்காய் உடைத்து சூடம் ஏற்றி சத்தியம் செய்தார். நுழைவு வாயில் பகுதியில் சூடம் ஏற்றிய கருணாகர ரெட்டி, "திருப்பதி லட்டுவில் நான் கலப்படம் செய்திருந்தால் என் குடும்பமே சர்வ நாசமாய் வேண்டும்' எனக்கூறி சூடத்தை அணைத்து சத்தியம் செய்தார்.
அப்பகுதியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கருணாகர ரெட்டி, ஆந்திராவில் ராஜசேகர் ரெட்டி ஆட்சி காலத்திலும், ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்திலும் திருப்பதி அறங்காவலர் குழுத்தலைவராக இரண்டு முறை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும் திருப்பதி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏவாகவும் இருந்துள்ளார்.
திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் எம்எல்ஏ-வும் முன்னாள் தேவஸ்தான தலைவருமான பூமனா கருணாகர் ரெட்டி , ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஏற்கனவே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், உண்மையை வெளிக்கொணருமாறும் விசாரணை கோரி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications