ரூ. 9.2 கோடியை காணிக்கையாக.. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தந்த சென்னை பெண்.. ஏன் தெரியுமா?
திருப்பதி: திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் 9.2 கோடி ரூபாய் காணிக்கை கொடுத்துள்ளார்.
உலகில் உள்ள பணக்கார கோவில்களில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலும் ஒன்றும். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த கோவிலுக்கு மக்கள் வழிபாடு நடத்த வருவது வழக்கம்.
கடந்த வருடம் மட்டும் திருப்பதி கோவில் உண்டியலில் இருந்து மட்டும் 833 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது. கொரோனா காரணமாக இது கொஞ்சம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பல கோடி
பணமாக, தங்கமாக, அசையும், அசையா சொத்துக்களாக பல கோடிகள் ஒவ்வொரு நாளும் இந்த கோவிலுக்கு வழங்கப்படுவது உண்டு. இதனால்தான் உலகின் அதிக சொத்துக்களை கொண்ட கோவில்களில் ஒன்றாக உள்ளது. கொரோனாவிற்கு முந்தைய வருடங்களில் சராசரியாக 1100-1300 கோடிகள் ரூபாய் வரை இங்கு உண்டியலில் காணிக்கை செலுத்தப்படுவது வழக்கம். முக்கியமாக தமிழர்கள் பலர் இங்கு கோடி கோடியாக காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

காணிக்கை
இந்த நிலையில்தான் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் 9.2 கோடி ரூபாய் காணிக்கை கொடுத்துள்ளார். 70 வயது பெண்மணி ஒருவர் சென்னையில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன் திருப்பதி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அதன்பின் கோவில் தேவஸ்தான நிர்வாகிகளை சந்தித்து 9.2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை காணிக்கையாக செலுத்துவதாக அறிவித்தார்.

எத்தனை கோடி
அவரின் இந்த அறிவிப்பு பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. மொத்தம் 6 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள் மற்றும் 3.2 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்திற்கான டிடி ஆகியவற்றை வழங்கினார். தேவஸ்தான போர்ட் தலைவர் சுப்பா ரெட்டி இந்த காணிக்கையை பெற்றுக்கொண்டார். இதையடுத்து இவருக்காக கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இவர் சொத்து பத்திரங்களை கோவில் அதிகாரிகளிடம் வழங்கினார்.

மருத்துவமனை
இதில் 3.2 கோடி ரூபாய் ரொக்கத்தை குழந்தைகள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்ட பயன்படுத்த வேண்டும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில் 9.2 கோடி ரூபாயை இவர் தானமாக கொடுக்க என்ன காரணம் என்று விவரம் வெளியாகி உள்ளது. டாக்டர் ரேவதி விஸ்வநாத் என்ற மயிலாப்பூரை சேர்ந்த பெண்தான் இந்த காணிக்கையை செலுத்தி இருப்பது. தனது மறைந்த சகோதரி பர்வதம் கோரிக்கையை ஏற்று இந்த காணிக்கையை செலுத்தி உள்ளார்.

ஏன்
கல்லூரி பேராசிரியராக இருந்த பர்வதம் கடந்த ஆண்டு மறைந்தார். திருமணம் செய்து கொள்ளாத இவர் 76 வயது வரை தனியாக வசித்து வந்தார். இவர் தீவிரமான ஏழுமலையான் பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி அங்கு சென்று வழிபடுவது வழக்கம். நிறைய நன்கொடைகளை ஏற்கனவே இவர் ஏழுமலையான் கோவிலுக்கு வழங்கி இருக்கிறார். இந்த நிலையில் மரணம் அடையும் முன் தனது சொத்துக்களை ஏழுமலையான் கோவிலுக்கு கொடுக்க வேண்டும் என்று இவர் உயில் எழுதி இருக்கிறார்.

உயில்
இவருக்கு சொந்தமாக இரண்டு வீடுகள் உள்ளன. ஒன்று உத்தண்டியில் உள்ளது. இன்னொரு வீடு திருவான்மியூரில் உள்ளது. இந்த வீடுகள் மற்றும் வங்கி இருப்பு இரண்டையும் கோவிலுக்கு ஒப்படைக்க அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதில் 3.2 கோடி ரூபாயை பயன்படுத்தி குழந்தைகள் சிறப்பு மருத்துவமனை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்தே அவரின் ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரின் சகோதரி காணிக்கை செலுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications