மூன்று பேரின் உயிரைப் பறித்த திருப்பூர் சம்பவம்.. போலீஸ் அதிர்ச்சி தகவல்
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருமாநல்லூர் சாலையில் உள்ள பாண்டியன் நகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 9 மாத குழந்தை உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வெடி விபத்து சம்பவம் நடந்தது தொடர்பாக போலீஸார் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருமாநல்லூர் சாலையில் உள்ள பாண்டியன் நகர், சத்யா காலனி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி. இவரது மனைவி சத்யபிரியா. இவர்களுக்கு 9 மாத குழந்தை உள்ளது. இந்நிலையில், கார்த்தி அங்குள்ள கோயில் விசேஷங்களுக்குப் பயன்படுத்தப்படும் பட்டாசு நாட்டு வெடிகளை தயாரித்து கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று மதியம் திடீரென அதிக சப்தத்துடன் வெடிச்சத்தமானது கேட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு சப்தம் கேட்டுள்ளது. இதில், கார்த்தியின் வீடு முழுவதுமாக தரைமட்டமாக சேதமடைந்துள்ளது. அந்த கட்டடத்துக்குள் சுமார் 10 நபர்கள் இருந்ததாகவும், அதில் மூவர் குழந்தைகள் என்றும் கூறப்டுகிறது. இந்நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த வெடி விபத்தில் 9 மாத குழந்தை உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அந்த வீட்டில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இருந்துள்ளதாக முதல்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. இந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் கார்த்தி என்பவரது வீடு சேதம் அடைந்தது மட்டுமின்றி எதிரில் இருந்த ஐந்துக்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகளும் முழுவதும் சேதம் அடைந்துள்ளன.
இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைக்கும் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். திருமுருகன் பூண்டி போலீசார் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இங்கு ஏராளமான நாட்டு வெடிகள் வெடிக்காத நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி வேறு எங்கேனும் நாட்டு வெடிகள் சிதறி கிடக்கின்றனவா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த விபத்து எப்படி நடந்தது, நாட்டு வெடிகுண்டு எப்படி தயாரிக்கப்பட்டது உள்ளிட்டவை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில் திருவிழாவிற்கு பயன்படுத்தும் நாட்டு பட்டாசுகள் தயாரிக்கும் போது விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
இச்சம்பவம் குறித்து, திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் லட்சுமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கார்த்திக்கின் மனைவி சத்யபிரியா. சத்ய பிரியாவின் சகோதரர் சரவணக்குமார் கோவில் திருவிழாவுக்கான வெடிகளைத் தயாரித்துள்ளார். இச்சம்பவத்தில் ஒரு குழந்தை மற்றும் பெண் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த பெண் சத்யபிரியாவாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அறிவியல் பூர்வ ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. சரவணக்குமார் ஈரோட்டில் பட்டாசு தயாரிப்புக்கான லைசென்ஸ் வைத்துள்ளார். ஆனால், இங்கு வீட்டில் வைத்து வெடிகள் தயாரித்தது சட்டத்துக்கு புறம்பானது என்றார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கூறுகையில், சேதமடைந்த வீடுகள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, உரிமம் இல்லாமல் வெடிகள் தயாரித்த சம்பவம் தொடர்பாகவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications