சவாரியில் கவனம் ஈர்த்த பிரதமர் மோடியின் டீசர்ட்.. திருப்பூரில் தயாரித்ததாமே!சிறப்பே இதுதான்.. அடடே
திருப்பூர்: பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் சவாரி சென்றதோடு, ஆஸ்கர் புகழ் பொம்மன்-பெள்ளி தம்பதியை நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு கிராமத்தில் சந்தித்தார். அப்போது பிரமதர் மோடி அணிந்திருந்திருந்த டீசர்ட் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நிலையில் அது தமிழ்நாட்டில் திருப்பூரில் தயாரிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை சென்னை வந்து புதிய விமான முனையத்தை திறந்து வைத்தார். மேலும் சென்னை -கோவை வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட பல திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்பிறகு பிரதமர் மோடி மைசூர் சென்றார்.

இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் பிரதமர் மோடி கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்கு சென்றார். 20 கிமீட்டர் தொலைவுக்கு ஜீப் சவாரி செய்து வனப்பகுதியை பார்வையிட்டார். மேலும் யானை, மான் உள்ளிட்ட பலவற்றை அவர் ரசித்ததோடு, கேமராவில் போட்டோ எடுத்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த டீசர்ட், தொப்பி உள்ளிட்வை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
அதாவது Camouflage cloth வகை டீசர்ட்டை பிரதமர் மோடி அணிந்திருந்தார். இந்த ஆடைகளில் பழுப்பு, பச்சை நிறங்களில் மரங்களின் இலைகள், கிளைகள் போன்ற வடிவங்கள் இடம்பெற்றுள்ளன. வனப்பகுதிகளில் இந்த வகை ஆடைகளை அணிந்து செல்வது என்பது இயற்கையோடு நம்மையும் ஒன்றிணைக்கும் வகையில் இருக்கும்.

இந்த வகை டீசர்ட் மற்றும் கோர்ட்டை தான் பிரதமர் மோடி அணிந்திருந்தார். தலையில் தொப்பியும் வைத்திருந்தார். அதன்பிறகு அந்த உடையுடன் பிரதமர் மோடி நீலகிரி மாவட்டம் தெப்பக்காடுக்கு வந்து ஆஸ்கர் வென்ற தி எலிபென்ட் விஸ்பரரர்ஸ் படத்தில் நடித்த பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து பேசினார்.
இதுதொடர்பான போட்டோக்கள் இணையதளங்களில் வேகமாக பரவின. பிரதமர் மோடியின் டீசர்ட் எங்கு தயாரிக்கப்பட்டன என்பது தொடர்பாகவும் விவாதம் கிளப்பியது. இந்நிலையில் தான் அதற்கு விடை கிடைத்துள்ளது. அதாவது பிரதமர் மோடியின் அந்த ஆடை தமிழ்நாட்டில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. அதுவும் பின்னலாடை ஆலைகள் நிறைந்து இருக்கும் திருப்பூரில் இருந்து தான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
அதாவது 'தி சென்னை சில்க்ஸ்' குழுமத்தின் திருப்பூர் எஸ்சிஎம் கார்மென்ட்ஸ் நிறுவனம் தான் பிரதமர் மோடி அணிந்திருந்த ஆடையை தயாரித்துள்ளது. கேமா சர்ட், டீ-சர்ட், பேன்ட் வகை ஆடைகளை அந்நிறுவனம் 15 ஆண்டுகளுக்கு மேலாக தயாரித்து வருகிறது. ஐரோப்பா உள்பட 15க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

100 சதவீத காட்டனால் தயாரிக்கப்படும் இந்த ஆடை நாடு முழுவதும் டெகத்லான் ஷோரூம்களில் விற்கப்படுகிறது. இந்த ஆடைகளை காடுகளில் பயணப்பபடுபவர்கள், மலையேற்றம் செல்வோர் விரும்பி அணிகின்றனர். தற்போது பிரதமர் மோடி அணிந்திருந்த ஆடை என்பது பெங்களூருவில் உள்ள டெகத்லான் ஷோரூமில் வாங்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக கடந்த பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடந்தது. அப்போது பிரதமர் மோடி நீல நிறத்திலான ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார். மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தி அந்த ஆடை கரூரில் தயாரிக்கப்பட்டு இருந்தது. இது அப்போது அதிக கவனம் பெற்ற நிலையில் தற்போது திருப்பூரில் தயாரிக்கப்பட்ட டீசர்ட்டை பிரதமர் மோடி அணிந்திருந்தது அனைவரையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications