ஒரு மணி நேரத்தை கட்சிக்காக ஒதுக்குங்க.. பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட ஸ்டாலின்!
திருப்பூர்: வாக்குச்சாவடி முகவர்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கு திமுக நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் முன்னுரிமை கொடுத்து நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கோவை மண்டல திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலமாக கோவை வந்தடைந்தார். அதிகாரிகள், திமுகவினர் அவரை வரவேற்றனர். இதையடுத்து காரில் காங்கேயம் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "உங்கள் திருமுகங்களைப் பார்ப்பதற்காகத்தான் நான் திருப்பூர் வந்திருக்கிறேன். என்னை பார்ப்பதில் நீங்கள் அடையும் உற்சாகம் - ஆர்வத்தை விட உங்களைப் பார்ப்பதில் நான் அடையும் மகிழ்ச்சி என்பது மிக மிக அதிகம். அதற்கு அளவே இல்லை. "ஏன் இவ்வளவு அலைகிறீர்கள்? பயணத்தைக் குறைத்துக் கொள்ளக் கூடாதா?" என்று என் மேல் அக்கறையும் பாசமும் கொண்டவர்கள் சொல்லும்போதெல்லாம் நான் சொல்வது - "கழக உடன்பிறப்புகளையும் - தொண்டர்களையும் பார்க்கும்போது நான் அடையும் உற்சாகத்திற்கு ஈடு இணை எதுவும் கிடையாது. என்னுடைய களைப்பு எல்லாம் காற்றாக பறந்து விடுகிறது" என்று சொல்வேன். அப்படியான உற்சாகமான மனநிலையோடு தான் உங்கள் முன்னால் கம்பீரமாக தெம்போடு நிற்கிறேன்.
இது திருப்பூர். திராவிட இயக்கம் கருவான ஊர். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும், காஞ்சி தந்த வள்ளுவன் பேரறிஞர் அண்ணாவும் முதன் முதலில் சந்தித்த ஊர் இந்த திருப்பூர். அந்த வகையில் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு அடித்தளமிட்ட ஊர்தான் இந்த திருப்பூர்! தியாகத்தின் திருவுருவமாகப் போற்றப்படும் கொடி காத்த குமரன் வாழ்ந்த ஊர் இந்த திருப்பூர். இந்தியை எதிர்த்தும் - தமிழைக் காக்கவும் 1965-ஆம் ஆண்டு போராட்டம் நடந்தபோது கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல - பள்ளி மாணவர்களும் அதிகம் பங்கெடுத்த ஊர் இந்த திருப்பூர். இப்படிப்பட்ட பெருமைமிகு திருப்பூரை மாநகராட்சியாக உயர்த்தியது மட்டுமல்ல, இந்தத் திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கியவரும் நம்முடைய தலைவர் கருணாநிதி. இப்படிப்பட்ட பெருமைக்குரிய இந்தத் திருப்பூரில் இன்று பாக முகவர்கள் கூட்டம் நடக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி நாம் காத்திருக்கிறோம். இந்த முக்கியமான தேர்தலுக்குத்தான் நீங்கள் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆகியிருக்கிறீர்கள். கழகத்தின் வாக்குச்சாவடி பொறுப்பாளர் என்ற நிலையை அடைந்திருக்கும் உங்கள் எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் நான் மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வாக்குச்சாவடி பொறுப்பாளர்களான நீங்கள்தான் உங்கள் வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர்களுக்கு முழு பொறுப்பாளர். வாக்குச் சாவடிப் பொறுப்பாளர் என்றால் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு நீங்கள்தான் பொறுப்பாளர் என்பதை மறந்துவிடாதீர்கள். "நாற்பதும் நமதே! நாடும் நமதே" என்று நான் முழங்கி இருக்கிறேன் என்றால் அது உங்கள் மேல் நான் வைத்திருக்கும் அளவுகடந்த நம்பிக்கை காரணமாகத்தான்.
இன்றையில் இருந்து, கழகத்தின் தேர்தல் பொறுப்பாளர்கள் என்ற கம்பீரத்தோடு நீங்கள் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வெற்றி மட்டுமே உங்கள் இலக்காக இருக்க வேண்டும். அந்த வெற்றியை அடைவதற்கான வழிமுறைகளில் மிகச் சரியாக நீங்கள் பயணிக்க வேண்டும். வாக்குச்சாவடி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் உங்களுக்கு நிறைய கடமைகள் இருக்கிறது.
*வாக்காளர் பட்டியலைச் சரி பார்ப்பது தான் உங்களின் முக்கியமான முதல் கடமை. வாக்காளர் பட்டியலில் உங்கள் வாக்குச்சாவடிக்குரிய வாக்காளர்களின் விவரங்கள் சரியாக இருக்கிறதா, போலி வாக்காளர்கள் யாராவது இருக்கிறார்களா, இறந்து போனவர்கள் பெயர்கள் எல்லாம் நீக்கப்பட்டிருக்கிறதா என்று முழுமையாக நீங்கள் சரிபார்க்க வேண்டும்.

* முறையான வாக்காளர்களை நம்மை நோக்கி ஈர்ப்பதுதான் உங்கள் இரண்டாவது கடமை. வாக்காளர்களை சந்தித்து பரப்புரை செய்ய வேண்டும், நம்முடைய சாதனைகளை அவர்களிடம் தொடர்ந்து நீங்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.
* வாக்குப்பதிவு நாட்களில் வாக்காளர்களை வாக்குப்பதிவு மையங்களுக்கு வர வைப்பது உங்கள் மூன்றாவது முக்கியக் கடமை. உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் நீங்கள் அங்கமாக மாற வேண்டும். அதற்கு, முதலில் உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் ஒவ்வொரு வாக்காளரைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்கான மாதிரிப் படிவம் இப்போது உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தொகுதிவாரியாக அச்சிடப்பட்டு விரைவாக உங்கள் கைகளுக்கு வந்து சேரும்.
வாக்காளரின் பெயர், அவரின் வயது, அவரின் குடும்பத்தினர் யார், என்ன படித்திருக்கிறார்கள், என்ன தொழில் செய்கிறார்கள், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்ற முழு விவரமும் உங்களிடம் இருக்க வேண்டும். உங்கள் வாக்குச்சாவடியில், 250 குடும்பங்கள் இருந்தால், அந்தக் குடும்பங்களில் ஒருவரா நீங்கள் மாற வேண்டும்.
தினமும் ஒரு மணி நேரத்தைக் கழகத்திற்காக ஒதுக்குங்கள். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம், உங்களால் ஒதுக்க முடியுமா? ஒதுக்குவீர்களா? அந்த ஒரு மணி நேரத்தை பூத் வேலைக்காக ஒதுக்குங்கள். அடுத்ததாக, அரசின் திட்டங்களையும் முழுவதும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடம் இன்றைக்கு ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறோம். அதைப் படித்துப் பார்த்தாலே எல்லாவற்றையும் தெரிந்துக் கொள்ளலாம்.
யாருக்கு என்ன தேவையோ அதைத் தெரிந்துகொண்டு ஏற்பாடு செய்து கொடுங்கள். ஒருவருக்கு முதியோர் உதவித்தொகையில் உதவிகள் தேவைப்படலாம். இன்னொருவருக்கு பட்டா மாறுதலில் உதவி தேவைப்படலாம். இவ்வாறு அவரவர் தேவையை கண்டறிந்து, அதை நிறைவேற்றித் தாருங்கள்.
ஒவ்வொரு நாளும் பத்து வீடுகளுக்குச் சென்று பேசுங்கள். ஒரு மாதத்தில் உங்கள் வாக்குச்சாவடியில் இருக்கும் அத்தனை வீடுகளுக்கும் நீங்கள் சென்று பேசியிருப்பீர்கள். சில வீடுகளில் மகிழ்ச்சியாக வரவேற்பார்கள். சில வீடுகளில் அதை எதிர்பார்க்க முடியாது. அதற்காக நாம் விட்டுவிடக் கூடாது. மீண்டும் அடுத்த மாதம் புன்னகை மாறாமல் அவர்களைத் தேடிச் செல்லுங்கள். என்னைப் பொறுத்தவரை நம்மை நிராகரிப்பவர்களே இருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
கடந்த 15-ஆம் தேதியில் இருந்து, சிறப்பான முறையில் சரியான பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து, ஒரு கோடிக்கும் அதிகமான மகளிருக்கு மாதாமாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறோம். நம்முடைய தேர்தல் வாக்குறுதியிலேயே மிகப் பெரிய வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம். நீங்கள் வாக்களர்களை தேடிப் போகும்போது இந்தத் திட்டத்தின் வரவேற்பை பார்க்கலாம்.
நாம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து நான் எல்லா மாவட்டங்களுக்கும் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறேன். கடந்த 15-ஆம் தேதிக்கு இருந்த வரவேற்பைவிட இப்போது பல மடங்கு அதிகமாகியிருக்கிறது. இதுதான் காரணம். என்ன மகிழ்ச்சி... நாமே கேட்கவில்லை, "ஐயா, வந்துவிட்டது." - "என்ன வந்துவிட்டது?" - "1000 ரூபாய் வந்துவிட்டது" என்று சொல்கிறார்கள்.
அதேபோல், கோடிக்கணக்கான மகளிருக்குப் பயனளிக்கும் திட்டம்தான் பேருந்தில் கட்டணமில்லா 'விடியல் பயணம்'! இதனால் மாத வருமானத்தில் 800 ரூபாயில் இருந்து 1200 ரூபாய் வரை பெண்களுக்கு மிச்சம் ஆகிறது. 13 லட்சம் குடும்பங்களின் நகைக்கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறோம். நீங்கள் தேடிச் செல்லும் ஒவ்வொரு வீட்டிலும் இவ்வாறு நம்முடைய அரசால் பயனடைகிறவர்கள் நிச்சயம் இருப்பார்கள்.
ஒரு வீட்டில் முதியோர் இருக்கிறாரா? அவர்கள் பயனடையும் வகையில், 42 லட்சத்துக்கும் மேற்பட்ட பல்வேறு திட்டப் பயனாளிகள் பெற்றுவரும் 1000 ரூபாய் உதவித் தொகையை 1200-ஆக ஆக்கி இருக்கிறோம். ஒரு வீட்டில் பள்ளிக் குழந்தைகள் இருக்கிறார்களா? லட்சக்கணக்கான பள்ளி மாணவர்கள் காலை உணவுத் திட்டத்தால் பசியில்லாமல் படிக்கிறார்கள். இளைஞர்கள் இருக்கும் வீடா? 'நான் முதல்வன்' திறன் மேம்பாட்டுத் திட்டத்தால் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒரு வீட்டில் கல்லூரிக்குப் போகும் மாணவிகள் இருக்கிறார்களா? புதுமைப்பெண் திட்டத்தின் மூலமாக அவர்களுக்கு மாதாமாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை கொடுக்கிறோம்.
இவ்வாறு, ஒவ்வொரு திட்டத்தாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் பலர் பயனடைந்து வருகிறார்கள். தமிழ்நாட்டின் பெரும்பாலான குடும்பங்களுக்கு மாதாமாதம் இவ்வாறு மூன்றாயிரத்தில் இருந்து நான்காயிரம் ரூபாயை நேரடியாக பல திட்டங்கள் மூலமாக கொடுத்து வருகிறோம். மிக முக்கியமான நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி உள்ளோம் மார்ச் 22ஆம் தேதியில் இருந்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம். மக்களுக்கு என்ன தேவையோ அதை தெரிந்துகொண்டு நிறைவேற்ற வேண்டும். வெற்றியை மட்டுமே இலக்காக கொண்டு செயல்பட வேண்டும்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு வாக்குச்சாவடி முகவர்கள்தான் பொறுப்பாளர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. வாக்குச்சாவடி முகவர்கள் வைக்கும் கோரிக்கைகளுக்கு நிர்வாகிகள், நகர செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் பூத் கமிட்டி முகவர்கள் என்னிடம் புகார் செய்யலாம். நான் நடவடிக்கை எடுப்பேன்.
பா.ஜ.கவின் பாசிச திட்டங்கள் எல்லாவற்றிகும் ஆட்சியில் இருந்தபோது தலையாட்டிவிட்டு, இன்றைக்கு பா.ஜ.க.வை எதிர்க்கின்ற மாதிரி மக்களிடம் காட்டிக்கொண்டு, மறைமுகமாக பா.ஜ.க தலைவர்களை சந்தித்துக்கொண்டு இருக்கும் கொத்தடிமைக் கூட்டத்திற்குக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலை போலவே இந்தத் தேர்தலிலும் படுதோல்வியை பரிசாகத் தர வேண்டும்.
இதுவரை மக்களை ஏமாற்றிய பா.ஜ.க - அ.தி.மு.க இந்தத் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட இருக்கிறது. மக்களின் இந்தக் கோபத்தை நமக்கான வாக்குகளாக மாற்ற வேண்டிய கடமை வாக்குச் சாவடி பொறுப்பாளர்களான உங்களுக்கு இருக்கிறது. கட்சிக்காக உழையுங்கள்! மக்களுக்காக உழையுங்கள். அதற்கான உரிய பலன் உங்களைத் தேடி வரும். இயக்கத்திற்காக இரவு பகல் பாராமல் உழைத்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. அவர்களை கழகம் எப்போதும் கைவிடாது.
இயக்கத்திற்காக ரத்த நாளங்களாக உழைக்கும் வாக்குச்சாவடி முகவர்களே! உங்களில் ஒருவனான இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உங்களிடம் வேண்டுகோள் வைத்து உரையாற்றி இருக்கிறேன். அடுத்த முறை உங்களைச் சந்திக்கும்போது, நான் வெற்றி செய்தியைத்தான் கேட்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைப்போம்! உழைப்போம்! உழைப்போம்! நாற்பதும் நமதே! நாடும் நமதே!" எனப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
-
5 வருஷமா மறக்க முடியல.. 2021ல் ஜஸ்ட் பாஸ்ஸில் வென்ற எம்.எல்.ஏ.க்கள்! தி-நகர் ரிசல்ட் தான் ஹைலைட்டே! -
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு! -
தமிழ்நாடு, புதுச்சேரியில்.. தேர்தல் ரிசல்டை தீர்மானிக்க போகும் 5 மேஜர் விஷயங்கள்! இதுதான் பிரச்சனையே -
தமிழகம் + புதுச்சேரி.. 10 தொகுதிகள் ஒதுக்குங்க.. ஸ்டாலினை வீட்டில் சந்தித்து திருமாவளவன் கோரிக்கை! -
திமுகவை காலி செய்ய விஜய் போதும்! எடப்பாடியிடம் சொன்ன பியூஷ் கோயல்! கான்ஃபரன்ஸ் காலில் 3வது நபர் யார் -
எம்.ஜி.ஆர் சொன்ன திருடன் போலீஸ் கதை! கருணாநிதி சொன்ன கட்டுமரக் கதை! - 1980ல் மீண்டும் அதிமுக ஆட்சி -
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு.. இறுதியானது பங்கீடு -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
சட்டசபை தேர்தலில் போட்டியிட கனிமொழி ஆர்வம்.. எந்த தொகுதி? ஸ்டாலின் கையில் முடிவு -
கூடுதல் தொகுதிகள்.. கறார் கம்யூனிஸ்ட்.. அதிர்ச்சியில் அறிவாலயம்.. தொடரும் இழுபறி -
கன்னியாகுமரியில் 6 தொகுதிகள் நிலவரம் என்ன? 5ல் முந்தும் திமுக கூட்டணி.. விஜய்யால் பாஜகவுக்கு சேதாரம் -
மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக்












Click it and Unblock the Notifications