திருப்பூர் திமுக நிர்வாகியை கட்டம் கட்டிய கட்சித் தலைமை! நிரந்தரமாக நீக்கம்! துரைமுருகன் அதிரடி!
திருப்பூர்: திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகி ராஜ்மோகன் குமாரை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கி துரைமுருகன் அதிரடி காட்டியுள்ளார்.
போலி பாஸ்பார்ட் வழக்கில் கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட போது திமுகவிலிருந்து சஸ்பெண்ட் மட்டுமே செய்யப்பட்ட ராஜ்மோகன் குமார், இப்போது நிரந்தரமாகவே திமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்வராஜ் எம்.எல்.ஏ.வுக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் இவர் கட்சியில் வர்த்தகர் அணி நிர்வாகியாக இருந்து வந்தார்.

தற்போது திமுக முக்கியப் பிரமுகர்கள் பெயரை தவறாக பயன்படுத்தி சில காரியங்களில் ஈடுபடுவதாக தலைமைக்கு கிடைத்த தொடர்ச்சியான புகார்களை தொடர்ந்து இந்த அதிரடி ஆக்ஷன் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;
''திருப்பூர் வடக்கு மாவட்டம் திருப்பூரை சேர்ந்த ராஜ்மோகன் குமார் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் ராஜ்மோகன்குமார் செயல்பட்டு வந்ததால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவரோடு கழகத்தினர் எந்த தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது எனக் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கட்சி பெயரையும், கட்சியின் முக்கியப் பிரமுகர்களின் பெயர்களையும் தவறாக பயன்படுத்தி காரியம் சாதித்து வருபவர்கள் பற்றிய பட்டியல் அண்ணா அறிவாலயத்தில் குவிந்து கிடக்கிறது. விசாரணை முடிவின் அடிப்படையில் இனி வரிசையாக நடவடிக்கைகள் பாயலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications