வந்துட்டாங்க சார்.. ஃலைப் முடிஞ்சது.. போலீசிடம் கதறிய செய்தியாளர்.. ஆடியோ வெளியிட்டு எடப்பாடி ஆவேசம்
திருப்பூர்: மர்ம நபர்கள் தன்னை தாக்குவதற்கான அச்சமான சூழ்நிலை நிலவுவதாக பல்லடம் நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபு தொடர்ச்சியாக காவல்துறையிடம் முறையிட்டும், தாக்குதலுக்கு 4 மணி நேரங்களுக்கு முன்பே தெரிவித்தும், போலீசார் நடவடிக்கை எடுக்காதது கடும் கண்டனத்திற்கு உரியது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர் நேசபிரபு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

மர்ம நபர்கள் தன்னை தாக்குவதற்கான அச்சமான சூழ்நிலை நிலவுவதாக நேசபிரபு தொடர்ச்சியாக காவல்துறையிடம் முறையிட்டும், தாக்குதலுக்கு 4 மணிநேரங்களுக்கு முன்பே தெரிவித்தும் இந்த விடியா அரசின் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்குடன் செயல்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.
சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளால் ஏற்கனவே பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் தமிழகத்தில் நிலவி வருவதை நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவே இன்று செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலாகும்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர் நேசபிரபு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) January 25, 2024
மர்ம நபர்கள் தன்னை தாக்குவதற்கான அச்சமான சூழ்நிலை நிலவுவதாக நேசபிரபு தொடர்ச்சியாக காவல்துறையிடம் முறையிட்டும், தாக்குதலுக்கு 4 மணிநேரங்களுக்கு முன்பே தெரிவித்தும்… pic.twitter.com/zIfxpLH2zd
பாதிக்கப்பட்ட செய்தியாளர் நேசபிரபு விரைவில் பூரண உடல்நலம் பெற்று வீடுதிரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதோடு, அவர் குணமடைய உரிய மருத்துவ சிகிச்சை வழங்குமாறும், கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து, பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழ்நிலையை உறுதிசெய்யுமாறு இந்த விடியா அரசை கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், ஆட்சிக்கு வந்த நாள் முதலே சந்திசிரிக்கும் வண்ணம் சட்டம் ஒழுங்கை சீர்குலையச் செய்துள்ள, காவல்துறையை தன் கையில் வைத்திருப்பதாக சொல்லும் இந்த விடியா அரசின் பொம்மை முதல்வர், தன் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் இனியாவது நிகழாவண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன்." இவ்வாறு கூறியுள்ளார். இந்த பதிவுடன் நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபு காவல்துறையினருடன் பேசுவதாக ஒரு ஆடியோவையும் இணைத்து வெளியிட்டுள்ளார்.
அந்த ஆடியோவில் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக செய்தியாளர் நேசபிரபு கூறுவதாக உள்ளது. அந்த ஆடியோவில் நேசபிரபு, பைக்கில் என்னை தாக்க பார்த்துக்கிட்டே இருக்காங்க சார்.. எல்லாருக்குமே வயசு 26க்குள்ள தான் இருக்கும். எல்லாமே தமிழ்காரங்கதான்.. இந்திக்காரங்க இல்லை.. என் அப்பாவிடமே அட்ரஸ் கேட்டு போயிருக்காங்க. ஆறு பேர் இருப்பாங்க.. ஒரு டைம் இல்லை ரெண்டு இல்லை சார் காலையில் இருந்து நான்காவது முறை, அவங்களை பிடிக்கனும்னு நினைச்சா கேமராவிலேயே இருக்காங்க.. எனக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம், சார் வந்துட்டாங்க சார்.. வாழ்க்கையே முடிஞ்சது.. என்று கூறுகிறார், இந்த ஆடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications