பல்லடம் மூவர் கொலை நடந்து 2 நாள்தான் ஆச்சு! அதற்குள் அவினாசியில் பைனான்சியர் வெட்டிக் கொலை!
திருப்பூர்: திருப்பூர் அருகே அவிநாசியில் நடைபயிற்சிக்கு சென்றவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் திருப்பூர் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு கொலை நிகழ்ந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த காசிகவுண்டன்புதூர் தாமரை கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம் மகன் ரமேஷ் (45). இவருக்கு மனைவி மற்றும் இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.

ஊட்டியை பூர்வீகமாக கொண்ட ரமேஷ், வீட்டில் இருந்தபடியே கார் கன்சல்டிங் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், ரமேஷ் இன்று அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.
அப்போது கோவை - சேலம் ஆறுவழிச் சாலை, மங்கலம் சாலை பைபாஸ் அருகே சர்வீஸ் சாலையில் காரில் வந்த மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக ரமேஷை வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். தலை மற்றும் கைகளில் பலத்த காயம் அடைந்த ரமேஷ் ரத்த வெள்ளத்தில் துடித்தார்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீஸுக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், உயிருக்கு போராடிய ரமேஷை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவிநாசி அரசு மருத்துவமனையில் முதல் உதவி அளிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ரமேஷ் உயிரிழந்தார்.
வாக்கிங் சென்றவர் வெட்டி கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள் யார் கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து அவிநாசி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக் கவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி (78). இவரது மனைவி அலமேலு (75). இந்த தம்பதியின் மகன் செந்தில் குமார் (45). கோவையில் ஐடி ஊழியரான செந்தில் குமார், ஊரில் நடந்த ஒரு விசேஷத்திற்காக மனைவி, குழந்தைகளை கோவையில் விட்டுவிட்டு தனது தாய், தந்தையர் இருக்கும் கிராமத்திற்கு வந்திருந்தார்.
அவர்கள் மூவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கிய நிலையில் இரவு வீடு புகுந்த மர்மநபர்கள் அவர்கள் மூவரையும் வெட்டிக் கொலை செய்தனர். பிறகு அலமேலுவிடம் இருந்த 8 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் நடந்து இரு நாட்கள் ஆன நிலையில் தற்போது மீண்டும் ஒரு கொலை நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் இது போல் அடுத்தடுத்து கொலைகள் நிகழ்வது எப்போது தடுக்கப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications