புட்டு புட்டு வைத்த இந்து முன்னணி.. 1 தொகுதியில் குவிந்த 30 அமைச்சர்கள்? இதுவா காரணம்? கவனித்த திமுக
திருப்பூர்: ஒரே ஒரு தொகுதியில் 30 அமைச்சர்களுக்கும் என்ன வேலை? என்று இந்து முன்னணி காட்டமாக கேள்வி எழுப்பியிருக்கிறது.
இந்துக்களுக்கு விரோதமாக திமுக அரசு செயல்பட்டு வருவதாக, இந்து முன்னணி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.. அந்தவகையில் திமுக அரசு, இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதங்களை, தன்னுடைய ஒவ்வொரு கண்டன அறிக்கையின் மூலமும் வெளிப்படுத்தி வருகிறார் இந்து முன்னணியின் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்.

சாதி அடையாளம்: குறிப்பாக, பின் தங்கியவர்கள், மிகவும் பின் தங்கியவர்கள், பட்டியல் சமூகத்தினர் என்று ஜாதி அடிப்படையிலேயே தனிதனியாக நடத்தி சாதி அடையாளத்தை திணிப்பதே இந்த அரசுதான் என்றும், இஸ்லாமிய பாடசாலை, அரசு உருது பாடசாலை, கிறித்துவ பள்ளிகள், அரசின் உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகள் என அனைத்து வித மதப்பள்ளிகளும் செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.
"கோவை காருண்யா நிறுவனம் உள்ள பகுதியில் யானை வழித்தடங்கள் காலங்காலமாக உள்ளன. ஆனால் கிறித்தவர்கள் போட்ட பிச்சையால் வந்ததாக பெருமை பேசும் திமுக அரசின் தலையீட்டால் அவற்றை எல்லாம் வனத்துறையும் தமிழக அரசும் கண்டு கொள்ளவில்லை. ஆனால், ஆன்மீகப் பணியாற்றும், இயற்கை வளத்தை பாதுகாக்க விழிப்புணர்வு சேவைப் பணியில் ஈடுபட்டு வரும் ஈஷா மையத்தின் மீது தொடர்ந்து குறை சொல்லி வருகிறது" என்று விமர்சித்திருந்தார் காடேஸ்வரா சுப்பிரமணியம்.
ஆக்கிரமிப்பு: "தமிழ்நாட்டில் இந்துக்களுக்கு ஒரு சட்டம்? கிறிஸ்தவர்களுக்கு வேறு சட்டமா?திமுக அரசு பதவியேற்றதில் இருந்து சாலை விரிவாக்கம், ஆக்கிரமிப்பு, நீதிமன்ற தீர்ப்பு என காரணங்களை காட்டி நூற்றுக்கணக்கான கோயில்களுக்கு மாற்று இடம் கூட தராமல் பக்தர்கள் மனம் பதற அநாகரிகமாக இடித்து தள்ளியது. வேறு மதத்தினர் வழிபாட்டு இடங்களுக்கு இந்நிலை ஏற்படுத்தியதா? நாத்திக திமுக அரசுக்கு இந்துக்கள் மீதான வெறுப்பு என்பதுதான் காரணமா?" என்றெல்லாம்கூட சமீபத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இப்போது, விக்கிரவாண்டி தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, தன்னுடைய காட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் காடேஸ்வரா சுப்பிரமணியம்.
என்ன வேலை: திருப்பூர் மாவட்டம், பல்லடம், ராயர்பாளையத்தில் நடந்த இந்து முன்னணி ஊழியர் கூட்டத்தில் பங்கேற்ற அவர் பேசியபோது, "தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிரான ஆட்சி நடந்து வருகிறது. இந்துக்களை இழிவுபடுத்துபவர்களை தான், நாம் மீண்டும் ஆட்சியில் அமர வைக்கிறோம். இந்த நிலை உடனடியாக மாற வேண்டும்.
ஒரு சட்டசபை தொகுதியில், 30 அமைச்சர்களுக்கு என்ன வேலை? கோடிக்கணக்கில் செலவழித்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ., சும்மாவா இருக்கப் போகிறார்? தேர்தலில் செலவு செய்த பணத்துக்காக மீண்டும் வருமானம் ஈட்டத்தான் பார்ப்பார். மக்கள் சரியானவர்களை தேர்ந்தெடுக்க, அவர்களை வழிநடத்திச் செல்ல வேண்டியது இந்து முன்னணியின் பொறுப்பு" என்று கொந்தளித்துள்ளார் காடேஸ்வரா சுப்பிரமணியம்.












Click it and Unblock the Notifications