ஹாஸ்பிடல் டூ வீடு! எப்படி இருக்கிறார் அமைச்சர்? வெள்ளக்கோவில் சாமிநாதன் டிஸ்சார்ஜ்!
திருப்பூர்: செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டிற்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
லேசான தொற்று மட்டுமே இருந்ததாலும், அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னரே கண்டறியப்பட்டதாலும் அவர் விரைந்து நலம்பெற்றிருக்கிறார்.
இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு திருப்பூரில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வில் இருந்து வருகிறார்.

அமைச்சர் சாமிநாதன்
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அதிலிருந்து மீண்டு நலம் பெற்றிருக்கிறார். தனது உள்ளூர் உதவியாளர் செல்லமுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, அமைச்சரும் தன்னார்வமாக சென்று தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்கிறார். அப்போது அவருக்கு லேசான தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால் உடனடியாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

லேசான அறிகுறி
இதனிடையே தொற்று இருப்பதே தெரியாத வகையில் அவருக்கு சளி, காய்ச்சல், உள்ளிட்ட எந்த உடல் உபாதைகளும் இல்லையாம். லேசான உடல்வலி மட்டுமே இருந்ததாம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் இயல்பாகவே தனது பணிகளை அங்குள்ள அறையிலிருந்தே மேற்கொண்டிருக்கிறார். இதேபோல் தொலைபேசி மூலம் துறை ரீதியான பணிகளிலும் கவனம் செலுத்தியிருக்கிறார்.

வீட்டில் ஓய்வு
சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு கொரோனாவுக்கான அறிகுறியே தெரியவில்லையாம். ஓரிரு நாட்களில் மீண்டும் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்திருக்கிறது. இதையடுத்து உடனடியாக கோவை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி திருப்பூரில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பிவிட்டார். மருத்துவர்கள் அறிவுரைப்படி இன்னும் ஒரு வார காலமாவது அவர் ஓய்வில் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

நலம் விசாரிப்பு
இதனிடையே அமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் சக அமைச்சர்கள் அனைவரும் சாமிநாதனை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது. தொற்றை தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டதாலும், இரண்டு தடுப்பூசிகள் செலுத்தியிருந்ததாலும் அமைச்சர் விரைந்து நலம்பெற முடிந்தது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications