சாதாரண புயல் என்பதால் தான் சேதமில்லை.. நாங்கள் சந்தித்தது எல்லாம் பேரிடர்கள்.. எடப்பாடி பேச்சு!
திருப்பூர் : மாண்டஸ் புயல் சாதாரண புயல் தான், அதனால் சேதம் இல்லை. அதிமுக ஆட்சியில் கஜா புயல், கொரோனா போன்ற பேரிடர்களை கையாண்டு சாதனை படைத்தோம் என எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
பேரிடர் காலத்தை சரியான முறையில் கையாண்டு சாதித்தது அதிமுக அரசு. இந்த முறை புயலுக்கு திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? புயல் கரைக்கு வர வர அதுவாகவே நீர்த்துப் போய்விட்டது என ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.
பின்னர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

முடக்கியதுதான் சாதனை
திமுக ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் ஆகிவிட்டது. மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 3-ல் ஒரு பகுதி நாட்கள் முடிந்துவிட்டன. இதனால் மக்கள் என்ன பயன்பெற்றனர்? அதிமுக ஆட்சியில் போடப்பட்ட திட்டங்களை முடக்கியதுதான் திமுகவின் சாதனை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அத்திக்கடவு - அவினாசி திட்ட பணிகள் தற்போது ஆமை வேகத்தில் நடக்கிறது. அதிமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்களுக்கு இரு சக்கர வாகன திட்டம், இலவச மடிக்கணினி திட்டம் ஆகியவற்றையும் இந்த ஆட்சியில் கைவிட்டுள்ளனர்.

மூடுவிழா ஆட்சி
திமுக ஆட்சிக்கு வந்தால் முதியோர் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் என கூறினார்கள். ஆனால் தற்போது கொடுத்த உதவித்தொகையும் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல ஏழை மக்கள் வீட்டின் அருகிலேயே மினி கிளினிக் தொடங்கப்பட்டது. அதற்கு திமுக ஆட்சி காலத்தில் மூடுவிழா நடத்தப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி அமைந்தவுடன் இத்திட்டங்கள் அனைத்தும் மீண்டும் தொடங்கப்படும்.

நீட் - அதிமுக ஆட்சி
2017-இல் நடைபெற்ற நீட் தேர்வில் 9 பேர்தான் தமிழக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை நினைவாக்க அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அதிமுக அரசு அறிவித்தது. இதன் மூலம் 564 பேர் மருத்துவம் படித்து வருகின்றனர்.

பேரிடர் ஆட்சி
அதிமுக ஆட்சிக்காலத்தை பேரிடர் ஆட்சி என ஸ்டாலின் விமர்சிக்கிறார். நான் முதலமைச்சராக பதவி ஏற்றபோது தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவியது. சென்னைக்கு ரயிலில் தான் குடிநீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது. வறட்சியான காலத்தில் கூட தடையில்லாமல் குடிநீர் வழங்கியது அதிமுக ஆட்சி எனத் தெரிவித்தார்.

பல புயல்களை சந்தித்தோம்
கஜா என்கின்ற மிகப்பெரிய புயல் அப்போது உருவானது, இந்த புயலில் இருந்து மக்களை படிப்படியாக மீட்டதும் அதிமுக அரசுதான். இதனையடுத்து கொரோனா என்கிற மிகப்பெரிய பாதிப்பிலிருந்து மக்களே காப்பாற்றினோம். பேரிடர் காலத்தை சரியான முறையில் கையாண்டு சாதித்தது அதிமுக அரசு. இந்த முறை புயலுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? புயல் கரைக்கு வர வர நீர்த்துப் போய்விட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் பல புயல்களை சந்தித்தோம். பல பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை அடிச்சுவடே இல்லாமல் சரி செய்தோம்.

சாதாரண புயல்
தற்போது மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. அப்போது 11 செ.மீ மழை பெய்தது. இது சாதாரணமாக பெய்யக்கூடிய மழை, சென்னை சுற்றுவட்டார பகுதியில் 6 செ.மீ முதல் 9 சென்டிமீட்டர் தான் மழை பெய்தது. இதுவும் எப்போதும் பெய்கின்ற மழைதான். எனவே இயல்பாகவே தண்ணீர் வடிந்து விடும், எனவே இந்த புயலால் பெரிய அளவு சேதம் எதுவும் இல்லை. ஆனால் ஸ்டாலின் பில்டப் செய்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது போலவும் அதனை தாம் தடுத்து நிறுத்தியது போலவும் பொய்யான தோற்றத்தை உருவாக்கி வருகிறார்." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications