திருப்பூரில் ரயில்வே தண்டவாளத்தில்.. வடமாநில தொழிலாளி சடலமாக மீட்பு! விசாரணையில் இறங்கிய போலீஸ்
திருப்பூரில் ரயில் தண்டவாளம் அருகே வடமாநில இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த வடமாநில இளைஞர் ஒருவரின் சடலம் அங்கு ரயில் நிலையம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு ரயில் நிலையத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
ஒவ்வொரு நாளும் வட இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வேலை தேடி வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து இவர்கள் வருகிறார்கள்.
வேலை நிச்சயம் கிடைக்கும், அதிக ஊதியம் உள்ளிட்ட பல காரணங்களால் இப்படி வடமாநிலங்களில் இருந்து அதிகப்படியானோர் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள். அங்கிருந்து வரும் ரயில்களைப் பார்த்தாலே எத்தனை பேர் வருகிறார்கள் என்பது புரியும்.

வடமாநிலத்தவர்
கட்டிட வேலைகள், ஹோட்டல் வேலைகளைச் செய்யத் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமாக இல்லை என்றும் இதன் காரணமாகவே இதுபோன்ற வேலைகளைச் செய்ய வடமாநிலங்களில் இருந்து ஆட்களைக் கூட்டி வருவதாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த வணிகர்கள் தெரிவித்துள்ளனர். வடமாநில இளைஞர்களால் தமிழக இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்ற தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இருப்பினும், அதில் உண்மை இல்லை என்பதை மற்றொரு தரப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

பொய்யான தகவல்
இதற்கிடையே கடந்த சில நாட்களாக இணையத்தில் பொய்யான ஒரு தகவல் திட்டமிட்டுப் பரவி வருகிறது. அதாவது தமிழ்நாட்டில் பல இடங்களில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடைபெறுவதாக சில பொய்யான வீடியோக்களை பரப்பி வருகின்றனர். ஆனால், இதில் உண்மை இல்லை. எங்கேயோ நடந்த சம்பவங்களையும் பழைய சம்பவங்களையும் இப்போது தமிழ்நாட்டில் நடந்தது போல சில விஷமிகள் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர்.

இளைஞரின் சடலம்
இது தொடர்பாகத் தமிழ்நாடு போலீசாரும் உரிய விளக்கம் அளித்துள்ளனர். மேலும், தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் அதிகம் இருக்கும் மாவட்டங்களில் பரபரப்பு நிலவி வருகிறது. இதற்கிடையே திருப்பூர் பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து வந்த வடமாநில இளைஞர் ஒருவரின் சடலம் அங்கு ரயில் நிலையம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த அவர் பீகாரைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

போலீசார் தகவல்
ரயில் தண்டவாளத்தைக் கடக்கும் போது, சஞ்சீவ் குமார் ரயிலில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே சஞ்சீவ் குமாரின் மொபைல் உள்ளிட்ட பொருட்கள் காணவில்லை என்றும் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு குவியத் தொடங்கினர். இதனால் அங்குப் பதற்றம் ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications