திருப்பூரை கதிகலங்கச் செய்த மூதாட்டி கொலை.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்.. நடந்தது என்ன?
திருப்பூர்: திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கை, கால்களை கட்டிப்போட்டு, முகத்தில் மிளகாய்ப்பொடி தூவி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை கடும் அதிர்ச்சியாக்கி உள்ளது. இந்த கொலை வழக்கு தொடர்பாக மூன்று பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணம்மாள் (65). இவருடைய கணவர் சுப்பையன் ஏற்கெனவே இறந்து விட்டதால் இவர் தனியாகவே வசித்து வந்துள்ளார். கண்ணம்மாளுக்கு இரண்டு மகன்கள் மற்றும் மகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் திருப்பூர் மற்றும் பல்லடம் பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

காரணம்பேட்டையில் கண்ணம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி வீட்டில் இருந்த கண்ணம்மாள் மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்துள்ளது. மேலும், வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
மேலும், கொள்ளையர்கள் பிடிபடாமல் இருப்பதற்காக கொள்ளை அடிக்கப்பட்ட பீரோவை சுற்றிலும் மிளகாய் பொடியையும் தூவிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்ணம்மாளின் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது, பெட்ரூமில் கண்ணம்மாள் கை, கால்கள் கட்டப்பட்டு மிளகாய்ப் பொடி தூவி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த கொலை வழக்குத் தொடர்பாக திருப்பூர் மாவட்ட எஸ்.பி. அபிஷேக் குப்தா உத்தரவின்பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக மூன்று பேரை பல்லடம் போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், காரணம்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கண்ணம்மாள் கொலைச் சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஆதிமூலம் மகன் கருத்தபாண்டி (27), அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் இசக்கிமுத்து (41), கொடிமுத்து மகன் இசக்கிமுத்து (27) ஆகிய மூவரை கைது செய்துள்ளோம்.
கேரள மாநிலத்துக்கு தப்பிச் செல்ல முயன்றபோது இவர்கள் மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். காரணம்பேட்டையில் கண்ணம்மாளின் வீட்டின் அருகே ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஹோட்டலை முருகேசன் என்பவர் நடத்தி வருகிறார். ஹோட்டலில் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் சமையல் மாஸ்டராக கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வந்துள்ளார்.
அப்போது, கண்ணம்மாள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், அவர் நிறைய நகைகளை அணிந்திருந்ததையும் அவர் நோட்டமிட்டு வந்துள்ளார். இந்நிலையில், மூதாட்டி கண்ணம்மாளிடம் இருந்து அந்த நகைகளை கொள்ளை அடிப்பதற்காக பாஸ்கரன் திட்டம் போட்டுள்ளார். பின்னர், ஊரில் இருந்து தன்னுடைய நெருங்கிய நண்பர்களான இசக்கிமுத்து, மற்றொரு இசக்கிமுத்து மற்றும் இன்னொரு நபர் என மூன்று பேரை காரணம்பேட்டைக்கு பாஸ்கர் அழைத்துள்ளார்.
இந்நிலையில், அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து அக்டோபர் 18 ஆம் தேதி இரவு கண்ணம்மாள் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். கண்ணம்மாளும் சாதாரணமாக கதவைத் திறந்துள்ளார். அப்போது, வெளியில் மிளகாய்ப் பொடியுடன் காத்திருந்த நான்கு பேரும் மூதாட்டியின் முகத்தில் மிளகாப் பொடியை வீசியுள்ளனர். இதில் கண்ணம்மாள் நிலைகுலைந்து போயுள்ளார்.
உடனே சுதாரித்துக் கொண்ட நான்கு பேரும் கண்ணம்மாளின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு, அவரது மூச்சை நிறுத்தி கொலை செய்துள்ளனர். சம்பவத்தின்போது கண்ணம்மாள் அணிந்திருந்த 15 பவுன் நகைகள், பீரோவில் இருந்த பணத்தையும் பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேரும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அவர்கள் நான்கு பேரும் கேரளத்துக்கு தப்பிச் செல்லும் வழியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 9 பவுன் தங்க செயின், இரண்டு வளையல்கள், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் முக்கிய எதிரியான பாஸ்கரன் உள்ளிட்ட இரண்டு நபர்களைத் தேடி வருகிறோம். விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்று கூறினர்.












Click it and Unblock the Notifications