திருப்பூரில் பஸ் ஓட்டுறது யார்னு தெரியுதா? காதுல வெச்ச செல்போனை எடுக்கவேயில்லை.. தமிழக அரசு அதிரடி
திருப்பூர்: திருப்பூர் டிரைவர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை தந்துவருகிறது.. இதுகுறித்து போக்குவரத்து துறை முக்கிய உத்தரவையும், அறிவுறுத்தலையும் வழங்கியிருக்கிறது. அது என்ன?
அரசு பேருந்துகளில் செல்போனில் பேசியபடியே டிரைவர்கள் ஓட்டுவது சர்வசாதாரணமாகி கொண்டு வருகிறது.. இதனால் அவர்களின் கவனம் சிதறக்கூடிய வாய்ப்பினால் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படும் அபாயநிலை ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மாநகர பஸ்: இப்படித்தான் கடந்த வாரம், செங்கல்பட்டு பஸ் ஸ்டாண்டிலிருந்து இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மாமல்லபுரம் நோக்கி ஒரு மாநகர பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ் செங்கல்பட்டிலிருந்து கிளம்பியபோது, அதன் டிரைவர் காதில் வைத்த செல்போனை எடுக்கவே இல்லை... செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும்வரை செல்போனில் பேசிக்கொண்டே பஸ்ஸை ஓட்டிக் கொண்டு வந்தார். இதைப்பார்த்த பயணிகள் பதறிப்போனார்கள். இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகியிருந்தது.
இப்போது, திருப்பூரில் ஒரு டிரைவர் பஸ் ஓட்டிக் கொண்டே செல்போனில் பேசிய வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. திருப்பூரிலிருந்து, பெருமாநல்லூருக்கு அரசு பஸ் சென்றது.. பஸ்ஸை அதன் டிரைவா் சதாசிவம் என்பவர் ஓட்டினார்.. ஒரு கையில் போன், இன்னொரு கையில் ஸ்டீயரிங்கை பிடித்தபடி நீண்ட நேரமாக செல்போனில் பேசியபடியே பஸ்ஸை ஓட்டிச் சென்றார்.
பயணிகள் அதிர்ச்சி: கிட்டத்தட்ட ஒரு நிமிடத்திற்கு மேலாக, செல்போனில் பேசிக்கொண்டே பஸ் ஓட்டியதால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். அப்போது அங்கிருந்த ஒரு பயணி, இதை தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அனுப்பிவைத்துவிட்டார்.. அத்துடன், சோஷியல் மீடியாவிலும் பதிவேற்றம் செய்துவிட்டார்.. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவியது.
வீடியோவை பார்த்ததுமே, கொந்தளித்து போன போக்குவரத்து கழக அதிகாரிகள், இதுகுறித்த துறைரீதியான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.. டிரைவர் சதாசிவத்தை போக்குவரத்து கழக திருப்பூர் மண்டல மேலாளர் சிவக்குமார் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளார்..
டிரைவர்கள்: அதுமட்டுமல்லாமல் பஸ்ஸை இயக்கும்போது டிரைவர்கள் செல்போனை பாக்கெட்டில் வைக்க கூடாது, கண்டக்டரிடம் கொடுத்து வைக்க வேண்டும். அப்படியே அவசரமாக யாராவது தொடர்பு கொண்டு பேசினால் சாலையோரம் பஸ்சை நிறுத்திவிட்டு பேச வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் பஸ்ஸை ஓட்டியபடி செல்போன் பேசக்கூடாது என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications